Tuesday, November 24, 2009

kps7

ங்க, இன்னிக்கு சினிமாவுக்குப் போலாமா?'

இப்படி ஒரு மனைவி, அதுவும் கர்ப்பமாக இருக்கிற மனைவி கேட்டால் எந்தக் கணவனால் மறுக்க முடியும்? `டபுள் ஓகே' சொல்லிவிட்டார் அஹ்மத் பௌச்சிகி.

அஹ்மத் மொராக்கோவைச் சேர்ந்தவர், இப்போது நார்வே நாட்டின் லில்லிஹாமரில் செட்டிலாகியிருந்தார், அங்கே ஒரு ஹோட்டலில் சர்வர் உத்தியோகம்.

அடிப்படையில், அஹ்மத் ரொம்ப அமைதியான மனிதர். அநாவசியமாக எந்த வம்புதும்புக்கும் போகமாட்டார். தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்றிருக்கிற சமர்த்துப் பேர்வழி.

1973 ஜூலை 21-ம் தேதி, அவர் தன் மனைவியுடன் சினிமாவுக்குப் புறப்பட்டார், படம் முடிந்தபிறகு, இருவரும் கலகலப்பாகப் பேசியபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, திடீரென்று அவர்கள் முன்னால் ஒரு கார் வந்து நின்றது, ஆயுதம் தாங்கிய மொஸாட் ஏஜென்டுகள் அதிலிருந்து இறங்கினார்கள்.

அஹ்மதுக்கு எதுவும் புரியவில்லை, 'என்ன நடக்கிறது? இவர்களெல்லாம் யார்?' என்று அவர் குழம்பிக்கொண்டிருக்கும் போதே, அவர்கள் சுட ஆரம்பித்தார்கள்.

சில விநாடிகள்தான், அவருடைய மனைவியின் கண்முன்னே அஹ்மதின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. அவர் சுருண்டு விழுவதற்குள், வந்தவர்கள் காரில் ஏறித் தப்பித்துவிட்டார்கள்.

மொஸாட்டைப் பொருத்தவரை, அவர்கள் அபுஹாசனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்தார்கள், திமிங்கிலம் பிடிபட்டுவிட்டது, மியூனிக் படுகொலைக்கான பழிவாங்குதல் இத்துடன் முடிந்தது.

ஆனால், அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அஹ்மத் பௌச்சிகிக்கும் அபுஹாசனுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது, பார்ப்பதற்கு இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர.

இந்த விஷயம் வெளியே தெரிந்தபோது, மொஸாட் மேலிடம் வெலவெலத்துப்போனது. ஒரு தீவிரவாதியைக் கொல்வதற்குப் பதிலாக, அப்பாவி பொதுஜனம் ஒருவரைச் சுட்டுத் தள்ளியது மிகப் பெரிய குற்றம்.

சொல்லப்போனால், நிஜமான தீவிரவாதிகளைக்கூடக் கொலை செய்கிற உரிமை மொஸாட்டுக்கு இல்லை. அவர்கள் என்ன தப்புச் செய்திருந்தாலும், நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்தித்தான் தண்டனை கொடுக்க வேண்டும், அதுதான் சட்டம்.

இதற்கு உள்ளூர் உதாரணம் வேண்டுமென்றால், சமீபத்திய மும்பைத் தாக்குதல் சம்பவங்களை எடுத்துக்கொள்ளலாம். அதை யார் செய்தார்கள், எப்படிச் செய்தார்கள் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும், போட்டோ, வீடியோ ஆதாரங்கள்கூட இருக்கின்றன. போதாக்குறைக்கு, அஜ்மல் கசாப் என்று ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிபட்டிருக்கிறான்.

ஆனால், இந்திய அரசாங்கமோ, போலீஸோ, உளவுத்துறையோ அஜ்மலுக்குத் தண்டனை கொடுக்க முடியாது. அவர்மேல் சட்டப்படி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். அதை ஒரு நீதிபதி விசாரித்துத் தண்டனை தருவதுதான் முறை.

மியூனிக் விவகாரத்தில் இதுபோன்ற சட்டதிட்டங்களையெல்லாம் மொஸாட் மதிக்கவில்லை, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், அவ்வளவுதான்!

ஆனால் இப்போது, அபு ஹாசனுக்குப் பதிலாக யாருடைய கண்ணையோ குத்திவிட்டார்கள், மன்னிக்க முடியாத தவறு இது.

இந்த விவகாரத்தில் மொஸாட் செய்த தவறுகள் ஒன்று, இரண்டு இல்லை, ஏழெட்டு வால்யூம்களில் எழுதி நிரப்பும் அளவுக்குப் பிரமாதமாகச் சொதப்பியிருந்தார்கள்.

முதலில், லில்லிஹாமர் மிகச் சிறிய நகரம், அங்கே யாருடைய கண்ணிலும் படாமல் தப்புச் செய்வது சிரமம்.

பெரிய நகரம் என்றால் எந்த மாபாதகமும் செய்துவிட்டுச் சட்டென்று காணாமல் போய்விடலாம், சிறிய ஊர்களில் அது முடியாது. சுற்றி என்ன நடக்கிறது என்று எல்லோரும் எப்போதும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்படி ஒரு சூழ்நிலையில், ஒருவரை நடுத்தெருவில் சுட்டுத் தள்ளுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம், நம் ஊரில் `சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது' என்று சொல்வார்களே, அதுவும் இதுவும் ஒன்றுதான்!

அஹ்மதைக் கொலை செய்த மொஸாட் ஏஜென்டுகள் டான் எர்ட், மரியானெ க்ளாட்னிகாஃப். இவர்கள் துப்பாக்கியோடு காரிலிருந்து இறங்கியது, அஹ்மதைச் சுட்டுக் கொன்றது எல்லாவற்றையும் நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தார்கள்.

அதுகூடப் பரவாயில்லை, மொஸாட் செய்த அடுத்த தவறு, இந்தக் கொலைக்காக காரை வாடகைக்கு எடுக்கும்போது, ஏஜென்டுகள் அவர்களுடைய சொந்தப் பெயரைக் கொடுத்திருந்தார்கள்.

நார்வே போலீஸ் சும்மா இருக்குமா? சுறுசுறுப்பாகத் துப்புத் துலக்கி, ஒரே நாளில் சம்பந்தப்பட்ட மொஸாட் ஏஜென்டுகளை வளைத்துப் பிடித்துவிட்டார்கள்.


கைது செய்யப்பட்ட இந்த மொஸாட் ஏஜென்டுகளாவது, வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். போலீஸ் சித்திரவதைக்குப் பயந்து, இந்தக் கொலையின் நோக்கம் என்ன, திட்டத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் யார், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று எல்லா விவரங்களையும் கொட்டிவிட்டார்கள்.

போதாதா? நேராக கார் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போன நார்வே போலீஸ், அஹ்மத் பௌச்சிகி கொலையுடன் சம்பந்தப்பட்ட கும்பலை அப்படியே அள்ளிப் போட்டு ஜெயிலில் தள்ளிவிட்டார்கள்.

இப்போது, மொஸாட்டுக்கு வேறு வழியே இல்லை. போலீஸிடம் மாட்டியவர்கள் வாயைத் திறக்காமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.

பொதுவாக, மொஸாட் ஏஜென்டுகளுக்குப் பல விஷயங்களில் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது, மாட்டிக்கொண்டால் அடுத்தவர்களைக் காட்டிக் கொடுக்காமல் இருப்பது.

குறிப்பாக, `நான் ஒரு மொஸாட் ஏஜென்ட்' என்று யாரும் எப்போதும் ஒப்புதல் வாக்குமூலம் தரக்கூடாது. அதற்குப் பதிலாக வேறு என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லலாம், மொஸாட் ஒரு விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுமட்டும் யாருக்கும் எப்போதும் தெரிந்துவிடக்கூடாது.

ஆனால், அஹ்மத் பௌச்சிகியைக் கொலை செய்த மொஸாட் ஏஜென்டுகள், இந்த ஒரு பாடத்தைமட்டும் சாய்ஸில் விட்டுவிட்டார்களோ என்னவோ, போலீஸ் லத்தியைத் தூக்கியவுடன் எல்லா விஷயங்களையும் கக்கிவிட்டார்கள். அஹ்மதைக் கொலை செய்தது மொஸாட்தான் என்கிற விவரம் வெளியே வந்துவிட்டது.

உடனடியாக, இந்த விவகாரம் சர்வதேசப் பிரச்னையாக மாறியது. 'நார்வேயில் வாழ்கிற ஒருவரை, அந்த ஊர் மண்ணில் சுட்டுத் தள்ளுவதற்கு மொஸாட்டுக்கு என்ன தைரியம்?!' என்று எல்லோரும் ஹைவால்யூமில் அலற ஆரம்பித்தார்கள்.

அதுமட்டு மில்லை, மியூனிக் படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக மொஸாட் ஒரு ரகசிய வேட்டை நடத்திக்கொண்டிருக்கிற தகவலும் வெளியே கசிந்துவிட்டது. 'இது அராஜகம், மனித உரிமை மீறல்' என்று பத்திரிகைகள், சமூக இயக்கங்கள் கடுமையாகக் கண்டித்தன.

போதாக்குறைக்கு, நார்வே போலீஸிடம் மாட்டிய மொஸாட் ஏஜென்டுகள் தொடர்ந்து 'பேசி'க்கொண்டிருந்தார்கள், உள்ளூரில், அக்கம்பக்கத்து நாடுகளில் எங்கெல்லாம் மொஸாட் உளவாளிகள் இருக்கிறார்கள், அவர்கள் என்னமாதிரியான வேஷங்களில் ஒளிந்து வாழ்கிறார்கள், அங்கே என்னென்ன திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு தகவல் பாக்கியில்லாமல் புட்டுப்புட்டு வைத்துவிட்டார்கள்.

பதறிப்போன மொஸாட், ஐரோப்பாவில் வாழும் தனது ஏஜென்டுகள் பலரை ரகசியமாகத் திரும்ப அழைத்துக்கொண்டது, இன்னும் சிலரை அங்கேயே ஒளிந்து வாழச் சொன்னார்கள்.

ஆனால் இதற்குள், உலக அளவில் மொஸாட்டின் இமேஜ் கெட்டுப்போய்விட்டது. `அது என்ன உளவுத்துறையா? இல்லை, அடியாள் படையா?' என்று ஆளாளுக்குக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எல்லாப் பக்கங்களிலும் டென்ஷன், `ஒழுங்காக மொஸாட்டை அடக்கி வைக்கிறீர்களா? இல்லை, நாங்கள் உங்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்!'

அவர்களுக்குத் தெரியாத விஷயம், இஸ்ரேலின் அரசாங்கத்துக்கு இணையான (அல்லது, அதைவிட ஒரு படி மேலான) சக்தி மொஸாட். யாரும் அவர்களை அடக்கி வைப்பதெல்லாம் சாத்தியமே இல்லை. அவர்களாக வாலைச் சுருட்டிக் கொண்டால்தான் உண்டு!

லில்லிஹாமர் விவகாரத்துக்குப்பிறகு, மொஸாட் கொஞ்சம் அடங்கிப்போக முடிவெடுத்தது, `இப்போது சூழ்நிலை சரியில்லை, பதுங்கிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்!'

உடனடியாக, மியூனிக் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மொஸாட் உளவாளிகள் எல்லோருக்கும் தகவல் பறந்தது. `கைவசம் எந்தத் திட்டம் இருந்தாலும் அதைப் பெட்டியில் போட்டுப் பூட்டிவிடுங்கள், இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம், அமைதியாக வீட்டில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுங்கள்.'

அப்படியானால், அபுஹாசன்? இத்தனை பேரைக் கொன்றுவிட்டுக் கடைசியில் பெரிய திமிங்கிலத்தை நழுவவிடப்போகிறதா மொஸாட்?

ம்ஹூம், சான்ஸே இல்லை, மொஸாட் பதுங்குகிறது என்றாலே, பின்னால் பாயப்போகிறார்கள் என்றுதான் அர்த்தம்!

மொஸாட் மேலிடம் அபுஹாசனை மறந்துவிடவில்லை, அவர் எங்கே இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இந்தமுறை ரொம்ப ரகசியமாக, ரொம்பக் கவனமாக.

அவர்கள் எதிர்பார்த்தபடி, அபுஹாசன் ஒரு தப்புச் செய்தார். 'லில்லிஹாமர் விவகாரத்தில் மொஸாட்டின் மூக்கு உடைந்துவிட்டது. இனிமேல் அவர்களால் வாலாட்ட முடியாது' என்று நினைத்துக்கொண்டு, தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார், பாதுகாப்பு நடவடிக்கைகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, பகிரங்கமாக உலாவ ஆரம்பித்தார்.

இதனால், அதுவரை அபுஹாசனின் இருப்பிடம் தெரியாமல் திணறிக்கொண்டிருந்த மொஸாட்டுக்கு ரொம்ப வசதியாகிவிட்டது. வழக்கம்போல் தன்னுடைய உளவாளிகளை வைத்து அபுஹாசனின் நடவடிக்கைகளை நுணுக்கமாக மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

மொஸாட் புலி, தன்னுடைய அவமானக் காயங்களை நக்கிக்கொண்டது. முன்பைவிட அதிக வெறியுடன் பாயத் தயாரானது!

No comments:

Post a Comment