color=#000099>`color=#ff0000 size=6>குட்மார்னிங் ரெட்ஃபா.'
`மார்னிங்', முனிர் ரெட்ஃபா அந்த ஈராக் விமானிகளைச் சலனமில்லாமல் பார்த்தார். இப்போது சிரித்துக்கொண்டே காலை வணக்கம் சொல்லும் இவர்கள், இன்னும் சில மணி நேரம் கழித்து, என்னை வில்லனாகப் பார்க்கப்போகிறார்கள். கொலை வெறியோடு துரத்தப்போகிறார்கள். `துரோகியைச் சுட்டு வீழ்த்தவேண்டும்' என்று துடிக்கப்போகிறார்கள்.
'அதற்குள், நான் ஈராக் எல்லையைக் கடந்து ரொம்ப தூரம் போய்விடுவேன்' என்று நினைத்துக் கொண்டார் ரெட்ஃபா, `அதன்பிறகு எந்தப் பிரச்னையும் இருக்காது, என்மீது தூசு துரும்புகூடப் படாமல் இஸ்ரேல்காரர்கள் கவனித்துக்கொள்வார்கள்.'
இப்படி ஆயிரம்தான் சமாதானம் சொன்னாலும், அவரால் பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லாம் ஒழுங்காக நடக்குமா என்கிற தவிப்பு. முதல்முறையாகச் சட்டத்தை, அதுவும் ராணுவ நியதிகளை மீறித் தப்பு செய்கிற படபடப்பு. கொஞ்ச நேரம் கழித்து உடம்பில் உயிர் இருக்குமோ இருக் காதோ என்கிற பயம்.
முனிர் ரெட்ஃபா பிறவி கிரிமினல் இல்லை. இப்போதுகூட, அவர் நினைத்தால் திரும்பிச் சென்றுவிடலாம். ஈராக் ராணுவத்திடம் சரணடைந்து, `இஸ்ரேல்காரர்கள் என்னை மிரட்டி மிக்21 விமானத்தைக் கடத்தச் சொன்னார்கள், நான் ஒப்புக்கொள்ளவில்லை' என்று நைசாகக் கட்சி மாறிவிடலாம்.
ம்ஹூம், அது முடியாது. முனிரின் உறவினர்களெல்லாம் இப்போது இஸ்ரேல் கையில், அவர் லேசாகத் தயங்குகிறார் என்று தெரிந்தாலும்கூட, ப்ளாக்மெயில் ஆரம்பமாகிவிடும்.
அதுமட்டுமில்லை. அப்போது முனிருக்குத் தெரியாத விஷயம், அவர் இஸ்ரேல் வந்திருந்தபோது மொஸாட் திருட்டுத்தனமாகப் பல புகைப்படங்களை எடுத்துவைத்திருந்தது. ஒருவேளை நாளைக்கு முனிர் நல்ல பிள்ளை வேஷம் போட்டுக்கொண்டால், அவரை மிரட்டி வழிக்குக் கொண்டுவருவதற்காகத்தான் இந்த ஏற்பாடு.
ஆனால், மொஸாட் நினைத்ததுபோல், முனிர் ரெட்ஃபாவின் மனத்தில் பெரிய குழப்பம், சலனம் எதுவும் இல்லை. அவருக்கு ஈராக் ராணுவத்தின்மீது உண்மையான கோபம் இருந்தது. ஆத்மசுத்தியுடன் விமானக் கடத்தலுக்குத் தயாராகிவிட்டார்.
பொதுவாக, மிக்21 விமானங்களில் முழு டேங்க் எரிபொருள் நிரப்பமாட்டார்கள். அன்றைய தேதிக்கு எத்தனை தூரம் பறக்கவேண்டும், அதற்கு எவ்வளவு எரிபொருள் செலவாகும் என்று கவனமாகக் கணக்குப் போட்டு, அதற்குமேல் போனால் போகிறது என்று அரை சொட்டோ, ஒரு சொட்டோ அனுமதிப்பார்கள், அவ்வளவுதான்.
இதுவும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான். யாராவது ஒரு விமானி மிக்21ஐக் கடத்திக்கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயற்சி செய்தால், பாதியில் எரிபொருள் தீர்ந்துவிடும். அப்படியே தொப்பென்று கீழே விழுந்து சிதறவேண்டியதுதான்.
முனிர் ரெட்ஃபாவுக்கு இந்த விவரம் நன்றாகத் தெரியும். இதைச் சமாளிப்பதற்கும் அவர் ஒரு திட்டம் யோசித்து வைத்திருந்தார்.
மிக்21 விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புகிறவர்கள் எல்லோரும் ஈராக் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு முனிர் ரெட்ஃபாமீது நல்ல மரியாதை இருந்தது.
1966-ம் வருடம் ஆகஸ்ட் 16-ம் தேதி காலை, அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார் முனிர் ரெட்ஃபா, `இன்னிக்கு என்னோட விமானத்துக்கு ஃபுல் டேங்க் நிரப்பிடுங்க' என்று கம்பீரமான குரலில் கட்டளையிட்டார்.
நியாயப்படி பார்த்தால், `எதற்காக ஃபுல் டேங்க்?' என்று அவர்கள் முனிரைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். பெரிய அதிகாரியின் அனுமதி இல்லாமல் மிக்21க்கு அவ்வளவு எரிபொருள் நிரப்பமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும்.
ஆனால், முனிர் ரெட்ஃபா மாதிரி ஒரு சீனியர் பைலட்மீது அவர்களுக்குச் சந்தேகம் வரவில்லை. இன்றைக்கு ஏதோ அவசர வேலையாக ஐயா ரொம்ப தூரம் பயணம் செய்யப்போகிறார்போல என்று நினைத்துக் கொண்டார்கள். அவர் கேட்டபடி முழு டேங்க் எரிபொருளை நிரப்பிவிட்டார்கள்.
சில நிமிடங்களில், முனிரின் மிக்21 விமானம் புறப்பட்டது. யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக, வழக்கமான பாதையில் சிறிது நேரம் பறந்துகொண்டிருந்தார் முனிர் ரெட்ஃபா.
border=0 hspace=10 alt="" vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-08/imagefolder/08a.jpg" width=200 height=271>
யாரும் எதிர்பார்க்காத ஒரு விநாடியில், சட்டென்று அந்த விமானத்தின் பாதை மாறியது. ஈராக் எல்லையை நோக்கி அதிவேகமாகப் பறக்கத் தொடங்கியது.
`அவ்வளவுதான், இனிமேல் நான் திரும்புவதற்கு வழியே இல்லை' பெருமூச்சுடன் நினைத்துக்கொண்டார் முனிர். `ஈராக்கைப் பொருத்தவரை நான் ஒரு தேசத்துரோகியாகிவிட்டேன். எந்த நிமிடத்திலும் அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பித்துவிடுவார்கள்.'
அவர் நினைத்ததுபோல், கீழே விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஈராக் அதிகாரிகள் அலறத் தொடங்கியிருந்தார்கள், `இந்தப் பைலட்டுக்கு என்ன ஆச்சு? கேனத்தனமா எங்கேயோ பறக்கறான்? அவனை ரேடியோவிலே பிடிங்க.'
அடுத்த நிமிடம், கரகர குரலில் ரேடியோ அறிவித்தது. `மிஸ்டர் பைலட், காலங்காத்தால தண்ணி போட்டுட்டு விமானத்தைக் கண்டபடி ஓட்டிக்கிட்டிருக்கீங்க. இதெல்லாம் நல்லதுக்கில்லை. உடனடியாத் திரும்பிடுங்க.'
முனிர் சிரித்துக்கொண்டார். பதில் பேசவில்லை.
ரேடியோ மீண்டும் அலறியது, `உங்களுக்குக் கடைசி சான்ஸ், மரியாதையா இப்பவே விமானத்தை யுடர்ன் எடுங்க, இல்லாட்டி உங்களைச் சுட்டு வீழ்த்திடுவோம், ஜாக்கிரதை.'
அவர்கள் மிரட்டிக்கொண்டிருக்கும்போதே, ரேடியோவை அணைத்துவிட்டார் முனிர் ரெட்ஃபா, `மை டியர் ஆஃபீஸர்ஸ், இனிமேல் இது ஈராக் நாட்டு விமானம் இல்லை. இஸ்ரேலுக்குச் சொந்தமானது!'
அப்போதுதான், ஈராக் ராணுவத்துக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. அவசரமாக மற்ற விமானிகளை அழைத்தார்கள், `முனிர் ரெட்ஃபான்னு ஒரு பைலட் மிக்21ஐக் கடத்தப் பார்க்கிறான். அவனைத் துரத்திப் போய் சுட்டுத் தள்ளுங்க' என்று கட்டளையிட்டார்கள்.
ஆனால், அவர்கள் சுதாரித்துக்கொண்டு விமானத்தைத் திருப்புவதற்குள், முனிர் ரெட்ஃபா ரொம்பத் தூரம் போயிருந்தார். இனிமேல் அவரைக் கண்டுபிடித்துச் சுடுவதெல்லாம் சாத்தியமே இல்லை!
`அந்த விமானத்தில எவ்வளவு எரிபொருள் இருக்கு?' பதற்றத்துடன் விசாரித்தது ஈராக்.
`ஃபுல் டேங்க்' என்று பதில் வந்தது.
`படுபாவிங்களா, உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? யாரைக் கேட்டு மிக்21க்கு முழு டேங்க் ரொப்பினீங்க? இப்ப அந்த பைலட் நம்ம விமானத்தை எங்கே கொண்டுபோறானோ, யாருக்குத் தெரியும்?'
அதேநேரம், அங்கே இஸ்ரேலில் உளவாளிகளும் விமானப்படையும் தயார் நிலையில் இருந்தார்கள். முனிர் ரெட்ஃபாவையும் அவருடைய விமானத்தையும் பாதுகாப்புடன் அழைத்து வருவதற்காகக் கச்சிதமான திட்டம் தயாராகியிருந்தது. ஏற்கெனவே முடிவு செய்திருந்த ரகசியப் பாதையின் வழியே மிக்21 பத்திரமாக இஸ்ரேலுக்குள் வந்து இறங்கியது!
மிக்21 கடத்தல் திட்டம், மொஸாட்டுக்கு மிகப் பெரிய வெற்றி. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளின் உளவுத்துறைகளெல்லாம் முயற்சி செய்து தோற்றுப்போன விஷயத்தை, மொஸாட் சர்வசாதாரணமாக ஊதித் தள்ளிவிட்டது.
இதனால், மொஸாட் தலைவர் மிய்ர் அமித்மீது மற்ற அதிகாரிகள், உளவாளிகள், ராணுவத்தினருக்கு இருந்த சந்தேகமெல்லாம் காணாமல்போனது, `பார்ட்டி புத்திசாலிதான்' என்று ஒப்புக்கொண்டு தோளைத் தட்டிக்கொடுத்தது இஸ்ரேல் அரசாங்கம்.
இன்னொரு பக்கம், மூக்கு உடைந்த ஈராக் ராணுவமும் சோவியத் யூனியனும் கோபத்தில் குதித்தன. `எங்களுக்குச் சொந்தமான விமானத்தை அநியாயமாக் கடத்திட்டீங்க, ஒழுங்குமருவாதியா அதைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இல்லாட்டி தொலைச்சுப்புடுவோம்' என்று இஸ்ரேலை மிரட்டினார்கள்.
ஆனால், இஸ்ரேல் இந்தச் சலசலப்புகளையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் ஏற்கெனவே மிக்21க்குள் புகுந்து தோண்டித் துருவ ஆரம்பித்திருந்தார்கள். அதன் தொழில்நுட்ப சூட்சுமங்கள் அவர்களுக்கு மெல்லப் புரியத் தொடங்கியிருந்தன.
இதைக் கேள்விப்பட்ட அமெரிக்கா, உடனடியாக இஸ்ரேலைத் தொடர்புகொண்டது, `எங்களுக்கு அந்த மிக்21 வேணுமே!'
`தர்றோம். ஆனா, பதிலுக்கு நீங்க எங்களுக்கு என்ன கொடுப்பீங்க?'
அமெரிக்கா திகைத்தது. நேற்றுவரை நம்முடைய ஆதரவில் வளர்ந்த பயல்கள், இப்போது நம்மிடமே பேரம் பேசுகிற அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள்.
ஆனால், இப்போது இவர்களை முறைத்துக்கொண்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவர்களிடம் மிக்21 இருக்கிறது. நம்மிடம் இல்லை. ஆகவே, கொஞ்சம் பணிந்துபோவதுதான் புத்திசாலித்தனம். இஸ்ரேல் கேட்டதைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டது அமெரிக்கா.
border=0 hspace=10 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-08/imagefolder/08b.jpg" width=200 height=135>
அப்போதும், இஸ்ரேல் உடனடியாக மிக்21ஐ அமெரிக்காவுக்குத் தந்துவிடவில்லை. அதன் நிபுணர்கள் அந்த விமானத்தை நன்கு ஆராய்ச்சி செய்து ஒட்டுமொத்த ஜாதகத்தையும் எழுதிக் கட்டம்போட்டு முடித்தார்கள். அதன்பிறகுதான் அமெரிக்கர்களுக்கு மிக்21 தரிசனம் கிடைத்தது.
இந்தக் கடத்தல் அத்தியாயத்தால் இஸ்ரேலுக்கு இரட்டை லாபம். அடுத்து வந்த போர்களில் மிக்21ஐச் சமாளிப்பது எப்படி என்று புரிந்துவிட்டது, எக்ஸ்ட்ரா வருமானமாக, அந்த மிக்21ஐ அமெரிக்காவுக்குத் தள்ளிவிட்டு, பதிலுக்கு `ஃபான்டம்' என்கிற நவீனரகப் போர் விமானங்களைச் சம்பாதித்துவிட்டார்கள். இதன்மூலம் இஸ்ரேலின் விமானப் படை பலம் கணிசமாக அதிகரித்தது.
இத்தனைக்கும் அடிப்படை, மொஸாட் உளவாளிகளின் கச்சிதமான வேலை. யாராலும் உள்ளே நுழைய முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்த ஈராக்கிலிருந்து ஒரு பெரிய விமானத்தையே தேட்டை போட்டுக் கொண்டுவருவது என்றால் சாதாரண விஷயமா? அதுவரை சி.ஐ.ஏ.வின் நிழலில் இயங்குகிற தம்மாத்தூண்டு கூட்டாளியாக இருந்த மொஸாட், அடுத்த சில ஆண்டுகளில் மிகப் பிரமாண்டமாக வளர்ந்துவிட்டது, தனக்குப் பால் ஊட்டி வளர்த்த அமெரிக்காவையே திருட்டுத்தனமாக நோட்டம் விடத் தொடங்கியது!
No comments:
Post a Comment