11.10.09 தொடர்கள் |
ரஃபி எய்டன் கடிகாரத்தைப் பார்த்தார், மணி 8.05. அந்தத் தெரு நன்றாக இருட்டியிருந்தது, அக்கம்பக்கத்தில் வீடுகள், மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. ரஃபி உட்கார்ந்திருந்த கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. தெருவின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக மாறிமாறி கல்யாண ஊர்வலம். தெரு முனையில் ஒரு பஸ் ஸ்டாப். காரில் இருந்த எல்லோரும் அங்கே ஒரு கண்ணைப் பதித்து வைத்திருந்தார்கள். சில நிமிடங்கள் கழித்து, தூரத்தில் இரண்டு வெளிச்சப் பொட்டுகள் தெரிந்தன. அவை கொஞ்சம்கொஞ்சமாகப் பெரிதானதும், ஒரு பஸ் வருவது புரிந்தது. சட்டென்று ரஃபி எய்டனின் உடல் சிலிர்த்துக் கொண்டது. வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்குகிறவர்களைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். ம்ஹூம், இந்த பஸ்ஸிலும் ஐக்மென் இல்லை! என்ன ஆச்சு? வழக்கமாக இந்த நேரத்துக்கு வீடு திரும்பிவிடுவாரே, இன்றைக்கு ஏன் லேட்? ஒருவேளை, விஷயம் வெளியே கசிந்திருக்குமோ? யாராவது ஐக்மெனை உஷார்படுத்தித் தப்பிக்க வைத்துவிட்டார்களா? ம்ஹூம், சான்ஸே இல்லை. இந்தக் கடத்தல் விவகாரத்தில் மொஸாட் மிகக் கவனமாகக் காய்களை நகர்த்தியிருந்தது. வெளியாட்கள் யாருக்கும் திட்டம் தெரிந்துவிடாதபடி கச்சிதமாக வேலைகள் நடந்திருந்தன. பத்து நாள் முன்பாகத்தான், ரஃபி எய்டன், அவருடைய சிறப்புக் குழுவினர் ரஃபி எய்டன் வருவதற்குமுன்பாகவே, கடத்தல் திட்டத்துக்காக நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஏழு வீடுகள் வளைத்துப்போடப்பட்டிருந்தன, கூடவே ஒரு டஜன் கார்களும். ஒற்றை ஆளைக் கடத்துவதற்கு இத்தனை வீடுகள், கார்கள் எதற்கு? அடால்ஃப் ஐக்மென் இப்போது இஸ்ரேலில் இருந்தால் பிரச்னையே இல்லை, மொஸாட் ஏஜெண்ட்கள் ஷேர் ஆட்டோவில்கூடப் புறப்பட்டுப்போய் கோழி அமுக்குவதுபோல் அள்ளிக் கொண்டு வந்துவிடலாம், யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இது வெளிநாடு. அதுவும் ஹிட்லரின் முன்னாள் கூட்டாளிகளுக்கு ஆதரவு தரக்கூடிய நாடு. இங்கே ஓர் அன்னிய உளவுத்துறை ஐக்மென்மேல் கை வைப்பது தெரிந்தால், ரஃபி எய்டனும் மற்ற மொஸாட் ஏஜெண்ட்களும் வாழ்நாள் முழுக்க ஜெயிலில் களி தின்ன வேண்டியதுதான். எல்லை மீறிய சில்மிஷம் என்று எல்லோரையும் தூக்கில் போட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதனால்தான், மொஸாட் இந்த விஷயத்தில் ரிஸ்க்கே எடுக்கவில்லை. ஏழெட்டு வீடுகள், நிறைய கார்கள் என்று பிடித்துப் போட்டால் கடத்தலுக்கு வசதி. ஒரு வீட்டில் ஏதாவது பிரச்னையாகி போலீஸ் ரெய்டு வந்தால்கூட, சட்டென்று தப்பிக்கலாம், ஐக்மெனை வேறு எங்கேயாவது ஒளித்து வைக்கலாம். ஒருவேளை, அர்ஜென்டினா போலீஸ்காரர்கள் ஓவர்டைமில் வேலை செய்து எல்லா மொஸாட் வீடுகளையும் சுற்றி வளைத்துவிட்டால்? `அப்படி ஒரு நிலைமை வந்தால், ஐக்மெனை நானே என் கையால கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுவேன்' என்றார் ரஃபி எய்டன். `அறுபது லட்சம் யூதர்களைக் கொன்ன அயோக்கியனுக்காக, நான் ஒருத்தன் தூக்குல தொங்கினால் பரவாயில்லை.' ரஃபி எய்டன் முன்னாள் ராணுவ வீரர். அங்கேயும், அவர் துப்பாக்கி தூக்கிச் சண்டை போட்டதைவிட, ரகசிய உளவுப் பணிகளில் ஈடுபட்டு எதிரிகளுக்கு வேட்டு வைத்ததுதான் அதிகம். இஸ்ரேல் தேசம் உருவானபிறகு, அதன் உளவுத்துறைக்கு நிறைய திறமைசாலி இளைஞர்கள் தேவைப்பட்டார்கள். அப்படி இழுக்கப்பட்டவர்தான் ரஃபி எய்டன். உண்மையில், ரஃபி எய்டன் மொஸாட் ஏஜெண்ட் இல்லை, `ஷபக்' எனப்படும் இஸ்ரேலிய உள்நாட்டு உளவுத்துறையில் முக்கியப் பொறுப்பு வகித்துக் கொண்டிருந்தவர். `ஷபக்'கா? இது என்ன புதுக்கதை? மொஸாட் இருக்க ஷபக் எதற்கு? இது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம்தான். பெரும்பாலானோர் உள் விவகாரங்களுக்கு, வெளி விவகாரங்களுக்கு எனத் தனித்தனி உளவுத்துறைகளை வைத்திருப்பார்கள். உதாரணமாக, அமெரிக்காவின் `உள்' உளவுத்துறை FBI, `வெளி' உளவுத்துறை CIA. அதுபோல, இஸ்ரேலில் ஷபக், மொஸாட்! 'மொஸாட்' போலவே, `ஷபக்'கும் செல்லப் பெயர்தான். முழு வடிவம்:'Sherut haBitachon haKlali , ஹீப்ரு மொழியில் இதன் அர்த்தம், பொதுப் பாதுகாப்புச் சேவை. 'பாதுகாப்பு' என்று சொன்னாலும், ஷபக் ஏஜெண்ட்களின் முக்கியமான வேலை, உள்ளூரில் வம்பு பண்ணக்கூடிய நபர்களை கவனிப்பது. இவர்களுடைய தினசரி நடவடிக்கைகள் என்னென்ன, சந்தேகத்துக்கு இடமாக ஏதாவது ரகசிய சில்மிஷங்கள் செய்கிறார்களா, யார் யாரெல்லாம் இவர்களுக்குக் கூட்டாளிகள் என்று கவனித்து ரிப்போர்ட் எழுதுவது. இதோடு ஒப்பிடும்போது, மொஸாட்டின் எல்லைகள் மிகவும் பரந்து விரிந்தவை. இஸ்ரேலுக்கு வெளியிலிருந்து வருகிற விவகாரங்களைக் கவனிப்பது, தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், அதிரடி சட்டப்படி பார்த்தால், ஒரு நாட்டின் உள், வெளி உளவுத்துறைகளின் பொறுப்புகள் முற்றிலும் வேறுபட்டவை. ஒன்றுடன் ஒன்று குறுக்கிடவே கூடாது. ஆனால், எதார்த்தத்தில் அப்படி இருக்காது. அவ்வப்போது இந்த இரண்டு குழுக்களும் சேர்ந்து செயல்பட்டால்தான் எதிர் நடவடிக்கைகளை முறியடிக்க முடியும். இப்படித்தான், ஷபக்கைச் சேர்ந்த ரஃபி எய்டன் மொஸாட் ஏஜெண்ட்களுடன் பழக ஆரம்பித்தார். மொஸாட் மேலதிகாரிகள் அவருடைய திறமையை கவனித்துக் குறித்துக் கொண்டார்கள். இந்த நேரத்தில், அடால்ஃப் ஐக்மெனை கடத்துவதற்கான திட்டம் தயாரானது. ரகசியமான, ஆபத்தான இந்த வேலைக்குச் சரியான ஆளைத் தேடிக்கொண்டிருந்தது மொஸாட். உடனே, விஜயகாந்த் படங்களில் வருவதுபோல, `இதைச் செய்யறதுக்கு ஒரே ஒர்த்தராலதான் முடியும்' என்று யார் வசனம் பேசினார்களோ, ரஃபி எய்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து அர்ஜென்டினாவுக்கு அனுப்பி வைத்தார்கள். `சீஃப், அடுத்த பஸ்.' டிரைவரின் குரல் கேட்ட ரஃபி எய்டன் சிந்தனையிலிருந்து விடுபட்டார். மீண்டும் பேருந்து நிறுத்தத்தைக் கவனிக்க ஆரம்பித்தார். இந்தமுறை, அவருடைய உதடுகளில் சின்ன புன்னகை அரும்பியது, அடால்ஃப் ஐக்மென் பேருந்துப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார். ஒருகாலத்தில் லட்சக்கணக்கான யூதர்களுக்கு மரண சாசனம் எழுதிய ஐக்மென். இப்போது அவருடைய உடல் தளர்ந்திருந்தாலும், ரஃபி எய்டனுக்கு அவர்மேல் பரிதாபம் வரவில்லை. `எல்லாரும் ரெடியா?' `யெஸ் சீஃப்.' அடால்ஃப் ஐக்மென் நடக்க ஆரம்பித்தார். அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த மொஸாட் கார் லேசாக வேகம் பிடித்து உரசுவதுபோல் வந்து நின்றது. சட்டென்று கதவைத் திறந்துகொண்டு ஒருவர் இறங்கினார். ஐக்மெனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, ஒதுங்கிப் போக முயற்சி செய்தார். அதற்குள், காரிலிருந்து இறங்கியவர் நிற்க முடியாமல் தடுமாறினார். அவருடைய ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டது. ரஃபி எய்டனுக்கு டென்ஷன். எத்தனை மாதமாகக் கஷ்டப்பட்டுத் தயாரித்த திட்டம், இப்போது ஒரு சின்ன ஷூ லேஸ் பிரச்னையால் மொத்தமும் பாழாகிவிடுமோ? சட்டென்று கதவைத் திறந்துகொண்டு வெளியே பாய்ந்தார். இதற்குள், நடப்பதை ஓரளவு ஊகித்துக்கொண்டிருந்த ஐக்மென், விலகி ஓட முயன்றார், ஆனால் ரஃபி எய்டன் அவரைப் பாய்ந்து பிடித்துவிட்டார். அந்த வயதிலும், ஐக்மென் பலமாகத் திமிறினார். ஆனால் ரஃபியின் வெறித்தனமான உடும்புப் பிடியிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அதே நேரம் மொஸாட் குழுவிலிருந்து இன்னொருவரும் ஐக்மென்மேல் பாய, எல்லோரும் தெருவில் விழுந்து புரண்டார்கள். சில விநாடிகளில், ஐக்மென் காருக்குள் திணிக்கப்பட்டார். யாரோ அவர்மீது ஏறி உட்கார்ந்தார்கள், சத்தம் போடாதபடி வாயைப் பொத்தினார்கள், அவ்வளவு நேரம் தேர்போல ஊர்ந்துகொண்டிருந்த கார் வேகமாகச் சீற ஆரம்பித்தது. சிறிது நேரத்தில், அவர்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார்கள். அடால்ஃப் ஐக்மெனை உள்ளே தள்ளிய ரஃபி எய்டன், `டிரெஸ்ஸையெல்லாம் கழட்டு' என்று சைகையால் உத்தரவிட்டார். ஐக்மெனுக்கு என்ன நடக்கிறது என்று ஒருமாதிரியாக விளங்கியிருக்க வேண்டும். இனிமேல் தப்பிக்க முடியாது என்று புரிந்துகொண்டிருந்தவர் மறுபேச்சில்லாமல் உடைகளைக் கழற்றத் தொடங்கினார். நிர்வாணமாக நின்ற அடால்ஃப் ஐக்மெனின் உயரம், எடை, தலைச் சுற்றளவு, கை, கால் நீளங்கள், மற்ற விவரங்களைக் குறித்துக் கொண்டார் ரஃபி எய்டன். அவற்றைத் தன்னுடைய ஃபைலில் இருந்த அளவுகளுடன் ஒப்பிட்டார், எல்லாம் கச்சிதமாக இருந்தன. `என் அனுமதி இல்லாம யாரும் இந்த ரூமைத் திறக்கக்கூடாது' என்றார் ரஃபி எய்டன். `அந்தாள் ராத்திரி முழுக்கத் தனிமையில கண்டதையும் கற்பனை பண்ணிக் கவலைப்படணும், நாம எப்ப வருவோமோ, அடுத்து என்ன செய்வோமோன்னு யோசிச்சு நடுங்கணும், இனிமே நம்ம கதி அவ்ளோதான்னு எல்லா நம்பிக்கையையும் மொத்தமா இழக்கணும், அதுக்கப்புறமா, நம்ம வேலையை ஆரம்பிப்போம்.' |
Tuesday, November 24, 2009
11kps 11.10.09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment