அந்தப் பக்கமாக ஒரு போலீஸ்காரர் வருகிறார். இவர்களுடைய சண்டையைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி விசாரிக்கிறார், `என்னப்பா கலாட்டா?'
உடனே, பயந்துபோன இருவரும் சண்டையை நிறுத்திவிடுகிறார்கள். தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்கிறார்கள்.
இந்த நிலைமையில், சட்டத்தைக் கையில் வைத்திருக்கிற அந்த போலீஸ்காரர் என்ன செய்ய வேண்டும்? இரண்டு பேருக்கும் பொதுவாக, நியாயமான ஒரு தீர்ப்பைச் சொல்ல வேண்டும், இல்லையா?
அதற்குப் பதிலாக, அவர் இந்த சண்டைப் பார்ட்டிகளில் ஒருவரோடு சேர்ந்துகொள்கிறார். `ஏன்ய்யா வெறும் கையால அடிக்கறே? இந்த லத்தியை வெச்சுக்கோ' என ஆயுதம் கொடுத்து ஊக்குவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அது அநீதி இல்லையா?
பாலஸ்தீனப் பிரச்னையில், பிரிட்டிஷ் அரசாங்கம் அப்படித்தான் நடந்துகொண்டது. அரேபியர்கள், யூதர்கள் இடையே பிரச்னை வந்தபோது, அவர்கள் ஏனோ அடாவடியாக யூதர்களைத் தொடர்ந்து ஆதரித்தார்கள். பாலஸ்தீன மண்ணில் யூதர்களின் பலம் பெருகுவதற்குப் பல உதவிகளைச் செய்தார்கள்.
இந்தப் புண்ணிய கைங்கர்யத்தை ஆரம்பித்து வைத்தவர், ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபர் எனும் இங்கிலாந்து அதிகாரி. 1917-ல் அவர் வெளியிட்ட `பால்ஃபர் பிரகடனம்'தான், பாலஸ்தீனத்தில் யூதர்களின் உரிமைகளை அழுத்தமாக உறுதிப்படுத்தியது.
பிரிட்டிஷ்காரர்களே பச்சைக்கொடி காண்பித்துவிட்ட பிறகு, யூதர்கள் சும்மா இருப்பார்களா? உலகம் முழுவதிலும் இருந்து தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்களையெல்லாம் பாலஸ்தீனத்துக்குள் கொண்டு வந்தார்கள்.
இப்படி வருகிறவர்களுக்கு பாஸ்போர்ட், விசா எதுவும் தேவையில்லை. யூதனா? உள்ளே வா. இஷ்டமித்ர பந்துக்களுடன் வந்தால் இன்னும் சந்தோஷம். பாலஸ்தீனத்தில் நீ நிலம் வாங்கலாம், வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கலாம், படிக்கலாம், வேலை பார்க்கலாம், தொழில் செய்யலாம். திருமணம் செய்துகொண்டு, பிள்ளை பெற்றுக்கொண்டு குடும்பம் நடத்தலாம். எதற்கும் தடையில்லை. என்ஜாய்!
பிரிட்டிஷ் அரசாங்கம் இப்படி வெளிப்படையாக யூதர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்க ஆரம்பித்தவுடன், அரேபியர்கள் கலவரமாகிவிட்டார்கள். கட்சிக் கூட்டத்துக்கு லாரியில் ஆள் பிடிப்பதுபோல் யூதர்களின் எண்ணிக்கை எகிறிக்கொண்டேபோனால் பாலஸ்தீனத்தில் அவர்கள் மெஜாரிட்டி ஆகிவிடுவார்களோ என்று பயந்தார்கள்.
இதற்குள், பிரிட்டிஷ் ஆசீர்வாதத்துடன் பாலஸ்தீனம் முழுக்க யூதக் குடியிருப்புகள் அதிகரித்தன. அவர்களே சமூகக் குழுக்களை அமைத்துக்கொண்டு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தினார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டார்கள். ஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொண்டார்கள். தங்களுக்கென்று சொந்தமாக ஆட்சி அமைத்து அரசாங்கம் நடத்தாததுதான் பாக்கி.
முப்பதுகளின் இறுதியில், யூதர்களின் நிம்மதி யான வாழ்க்கையில் இடி விழுந்தது. அதற்குக் காரணகர்த்தா, ஷ்ரீமான் அடால்ஃப் ஹிட்லர்.
எங்கேயோ ஜெர்மனியில் ஹிட்லர் அராஜகம் செய்கிறார். யூதர்களை வதைக்கிறார். அதனால் பாலஸ்தீனத்தில் உட்கார்ந்திருக்கிற நமக்கு என்ன வந்தது?
யூதர்களால் எப்போதும் அப்படி நினைக்க முடியாது. உலகில் எங்கே இருந்தாலும், தாங்கள் ஒரே மாயக் குடையின்கீழ் வாழ்வதுபோல்தான் அவர்கள் உணர்வார்கள். ஒருவருக்குப் பிரச்னை என்றால் மற்றவர்கள் ஓடி வருவார்கள்.
பலன் எதிர்பார்க்காமல் பரஸ்பர உதவிகளைச் செய்துகொள்வார்கள்.
இதனால், அங்கே ஐரோப்பாவில் ஹிட்லர் தடியைத் தூக்கியவுடன், பாலஸ்தீனத்தில் இருக்கிற யூதர்கள் எதிர்நடவடிக்கைகளை யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஹிட்லரின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட யூதர்களை பாலஸ்தீனத்துக்குள் கொண்டுவருவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால், இந்தத் திட்டங்களை அவர்களால் ஒழுங்காக நிறைவேற்ற முடியவில்லை. காரணம், இதுவரை யூதர்களுக்கு ஆதரவாக இருந்த பிரிட்டிஷ்காரர்கள் இப்போது முரண்டு பிடித்தார்கள். `எங்களுடைய அனுமதி இல்லாமல் யூதர்கள் யாரும் இங்கே வரக்கூடாது' என்று கதவைச் சாத்தி திண்டுக்கல் பூட்டு மாட்டிவிட்டார்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் ஏன் இப்படித் திடீரென்று மனம் மாறவேண்டும்? அதற்கும் காரணம் இருந்தது.
1938 நவம்பர் 7-ம் தேதி. பாரிஸில் ஹெர்ஷெல் க்ரின்ஸ்பன் என்ற யூத இளைஞன், காலையில் எழுந்து பல் தேய்த்தான். தன்னுடைய பெற்றோருக்குக் கடிதம் எழுதினான். கடைக்குப் போய் ஒரு துப்பாக்கி வாங்கிக்கொண்டான். அந்த ஊரில் உள்ள ஜெர்மனி தூதரகத்துக்கு ரயில் பிடித்தான்.
ஹெர்ஷெலுக்கு ஜெர்மனிமீது கோபம். ஹிட்லரின் ஆட்சியால் அவன் குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
நியாயப்படி பார்த்தால், ஹெர்ஷெல் ஹிட்லரைத்தான் சுட்டிருக்க வேண்டும். அதற்கான வசதி, வாய்ப்புகள் இல்லாததால், பாரிஸில் இருக்கிற ஜெர்மனி தூதரகத்துக்குப் போனான். எதிர்ப்பட்ட அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டான்.
இந்தக் கொலைச் சம்பவம், யாரும் எதிர்பார்க்காத அதிர்வுகளை உண்டாக்கியது. ஹிட்லர் ஆட்சியின்கீழ் வாழ்கிற யூதர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள். அவர்களுடைய கடைகள், தொழிற்சாலைகள் நொறுக்கப்பட்டன. ஐரோப்பாவிலிருந்து யூதச் சமூகத்தை மொத்தமாக நீக்கிவிடுகிற ஆவேசத்துடன் ஹிட்லரின் அடிப்பொடிகள் வேலையில் இறங்கினார்கள்.
இதனால், ஹிட்லர் ராஜ்ஜியத்திலும், அக்கம்பக்கத்து நாடுகளிலும் வாழ்ந்த யூதர்களுக்கு மரண பயம் தொற்றிக் கொண்டது. இங்கேயே இருந்து உயிரை விடுவதற்குப் பதிலாக, பாலஸ்தீனத்துக்குப் போய் மற்ற யூதர்களுடன் பிழைத்துக் கொள்ளலாம் என்று யோசித்தார்கள்.
உடனடியாக, பிரிட்டன் உஷாராகிவிட்டது. ஹிட்லரிடமிருந்து தப்பித்த யூதர்கள் எல்லோரும் பாலஸ்தீனத்தில் வந்து குவிந்தால், உள்ளூரில் ஏகப்பட்ட நெருக்கடிகள் வரும். அந்த அவஸ்தைகளைத் தவிர்ப்பதற்கு என்ன வழி?
அவசர அவசரமாகப் பாலஸ்தீன எல்லைகளில் பாதுகாப்பை அதிகப்படுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். `வருடத்துக்கு இத்தனை யூதர்கள்தான் உள்ளே வரலாம். மற்றவர்கள் வேறு எங்கேயாவது போய்ப் பிழைத்துக்கொள்ளுங்கள்' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.
யூத சமூகம் கொதித்துப்போனது. பாலஸ்தீன மண்ணை அவர்கள் தங்களுக்குச் சொந்தமாகவே நினைக்க ஆரம்பித்திருந்தார்கள். இங்கே யூதர்களுக்கு இடமில்லை என்றால், என்ன நியாயம்?
உடனடியாக, வெளிநாடுகளில் வாழ்கிற யூதர்களைப் பாலஸ்தீனத்துக்குள் கொண்டுவருவதற்கு ஒரு ரகசியக் குழு உருவாக்கப்பட்டது. அதன் பெயர், `மொஸாட் லிஅலியா பெட்'.
கொஞ்சம் நீளமான பெயர்தான். பின்னாட்களில் இந்த `மொஸாட் லிஅலியா பெட்'தான் இஸ்ரேல் உளவுத்துறையாக உருவெடுத்தது என்பதால், நம்முடைய வசதிக்காக இதனை `பழைய மொஸாட்' என்று அழைக்கலாம்.
பழைய மொஸாட்டின் நோக்கம், பிரிட்டிஷ் கண்களில் அகப்படாமல் யூதர்களை பாலஸ்தீனத்துக்குள் கடத்திக் கொண்டுவருவது. அதற்காக என்னென்ன தில்லுமுல்லுகள் செய்வதற்கும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.
இதுமாதிரி திருட்டுத்தனமாக ஆள் கடத்துவதற்குக் கடல் வழிதான் வசதி. பழைய மொஸாட் ஏஜெண்டுகள் உலகம் சுற்றிக் கப்பல் தேட ஆரம்பித்தார்கள்.
இவர்களுடைய அவசரத்தைப் புரிந்துகொண்ட கப்பல் கம்பெனிகள், ஒன்றுக்கு நான்கு மடங்காக விலை சொன்னார்கள். யூதர்கள் அசரவில்லை, `எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, கப்பலைக் கொடுங்க' என்று காசை நீட்டினார்கள்.
இப்படிப் பெரிய, சிறிய கப்பல்கள், படகுகள், கள்ளத் தோணிகள்வரை பல வழிகளில் யூதர்கள் பாலஸ்தீனத்துக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் பிரிட்டிஷ் கண்ணில் படாமல் உள்ளே வருவதற்காக ஏகப்பட்ட தந்திரங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றியது மொஸாட்.
உடனே, பிரிட்டன் விழித்துக்கொண்டுவிட்டது. பாலஸ்தீனக் கடற்கரை முழுக்க ரோந்துப் பாதுகாப்பைப் பலப்படுத்தினார்கள். சட்டவிரோதமாகத் தென்படுகிற கப்பல்களை, `அப்படியே யு டர்ன் எடுத்து ஓடிப்போயிடுங்க' என்று மிரட்டினார்கள்.
பிரிட்டிஷ்காரர்களுடன் ஒப்பிடும்போது, மொஸாட் ஏஜெண்டுகளிடம் பெரிய படை பலமோ, ஆயுதங்களோ நவீன கருவிகளோ இல்லை. ஆனால் அப்போதும், அவர்கள் தங்களுடைய கடமையிலிருந்து தவறவில்லை. எல்லைப் பாதுகாப்பு எவ்வளவு கடுமையாக இருந்தாலும், தொடர்ந்து ஏகப்பட்ட மொஸாட் கப்பல்கள் பாலஸ்தீனத்தை நோக்கி வந்துகொண்டுதான் இருந்தன.
இந்தக் கப்பல்களில் இருந்த யூதர்கள், தங்களுடைய நாட்டில் பணம், சொத்துகளையெல்லாம் இழந்து உயிரைமட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வந்திருந்தார்கள். அவர்களுடைய கடைசி நம்பிக்கை, மொஸாட், பாலஸ்தீன மண், அங்கே தங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை அமையும் என்கிற எண்ணம்.
இப்படிப் பரிதாபமான நிலைமையில் பாலஸ்தீனத்துக்கு வந்த யூதர்களை, பிரிட்டன் அதட்டித் துரத்தியது. ஹிட்லரே பரவாயில்லை என்று நினைக்கவைக்கும்படியான முகாம்களில் அடைத்து வைத்தது.
அதைவிடக் கொடுமை, பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து தப்பித்து பாலஸ்தீனத்துக்குள் நுழைய வேண்டும் என்கிற பதற்றத்தில், மொஸாட் உளவாளிகள், சில ஆபத்தான வழிகளில் கப்பல்களைக் கொண்டுவந்தார்கள். ஒவ்வொரு கப்பலிலும் அதிகபட்ச அளவுக்குமேல் யூதர்கள் பயணம் செய்தார்கள். இதனால், அவ்வப்போது விபத்துகள் நேர்ந்தன. ஏகப்பட்ட யூதர்கள் கடலில் மூழ்கிப் பலியானார்கள்.
இந்தச் சூழ்நிலையில், பிரிட்டன் மட்டும் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு யோசித்திருந்தால், யூதர்கள் மொஸாட் என்கிற ரகசிய உளவு நிறுவனம், கடத்தல் படையை உருவாக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. ஹிட்லரின் பிடியிலிருந்து தப்பிய ஆயிரக்கணக்கான யூதர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கும்.
ஆனால், எல்லா பிரிட்டிஷ்காரர்களுக்கும் கல் மனசு இல்லை. அங்கேயும் மொஸாட்டுக்கு ஆதரவாக, யூதர்கள் தப்பிக்க உதவி செய்த பல நல்ல உள்ளங்கள் இருந்தன. உளவாளிகள், ராணுவ அதிகாரிகள், காவலர்களுக்குக்கூடக் கருணை மனம் உண்டு என்று நிரூபித்த நெகிழ்ச்சிக் கதைகள் அவை.
(தொடரும்)
No comments:
Post a Comment