அவள் பெயர் சில்வியா, நல்ல அழகி.
சில்வியாவை ஓர் இளைஞன் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அவன் பெயர் க்ளாஸ்.
அழகான ஒரு பெண்ணைக் காதலிக்கிற பையன் என்ன செய்வான்? தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் விதவிதமாக அவளிடம் அளந்து விடுவான், ‘நாங்க இப்படியாக்கும், அப்படியாக்கும்’ என்று பெருமை அடித்துக்கொண்டு அவளை ஈர்க்க முயற்சி செய்வான்.
க்ளாஸ் இதையெல்லாம் ரொம்பச் சிரத்தையாகச் செய்தான். ‘அந்தக் காலத்தில, ஹிட்லர் படையில எங்க அப்பா பெரிய ஆள், தெரியுமா?’
சில்வியாவுக்கு இதிலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் இல்லை, ‘ஹிட்லரே போயாச்சு, அப்புறம் என்ன?’ என்று அலட்சியமாக இருந்துவிட்டாள்.
ஆனால், சில்வியாவின் தந்தை லோதர் ஹெர்மன் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது, அவருக்கு லேசாகச் சந்தேகம் எழுந்தது, ‘அந்தப் பையனோட முழுப் பெயர் என்ன?’ என்று விசாரித்தார்.
‘க்ளாஸ் ஐக்மென்.’
அந்தப் பெயரைக் கேட்ட லோதருக்கு, ஏதோ லேசாகப் பொறி தட்டியது. ஆனால், அது என்ன என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அப்போதைக்கு அந்த விஷயத்தை மறந்துவிட்டார்.
ஹிட்லரின் சித்திரவதை கேம்ப்களில் சிக்கிச் சிரமப்பட்டவர் லோதர் ஹெர்மன். அங்கே அனுபவித்த கொடுமைகளால், அவருக்குப் பார்வை பறிபோயிருந்தது.
அதனால்தான், க்ளாஸின் தந்தை ஒரு பழைய நாஜி என்பது தெரிந்ததும், லோதர் ஆர்வமாக விசாரித்தார். ஆனால் அப்போதும், ‘ஐக்மென்’ என்கிற பெயரை அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
கொஞ்ச நாள் கழித்து, லோதர் ஹெர்மன் எதேச்சையாக ஒரு பத்திரிகைச் செய்தியைப் படித்தார். அதில் அடால்ஃப் ஐக்மென், அவருடைய ரத்த வெறியாட்டத்தைப்பற்றி விரிவாக எழுதியிருந்தார்கள். கூடவே, ‘இப்போது அடால்ஃப் ஐக்மென் எங்கேயோ மறைந்து வாழ்கிறார்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
சட்டென்று லோதருக்கு ‘க்ளாஸ் ஐக்மென்’ என்கிற பெயர் ஞாபகம் வந்தது, ‘அந்தப் பையனுக்கும் இந்த அடால்ஃப் ஐக்மெனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?’
உடனடியாக, லோதர் தன் மகளை அழைத்தார், ‘க்ளாஸ்ன்னு ஒரு பையன் உன் பின்னாடி சுத்திக்கிட்டிருந்தானே, ஞாபகமிருக்கா?’
‘ஆமா, அவனுக்கு என்ன?’
‘அவனோட அப்பா பேர் என்ன? உனக்குத் தெரியுமா?’
சில்வியா கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னாள், ‘ரிகார்டோ க்ளெமென்ட்.’
லோதர் ஹெர்மன் புன்னகைத்துக்கொண்டார், ‘இது நிச்சயமாகப் பொய்ப் பெயர்தான்!’
பின்னே? இத்தனூண்டு தப்பு செய்த நாஜிக்களையெல்லாம் யூதர்கள் தேடிப் பிடித்துப் பழிவாங்கிக்கொண்டிருக்கும்போது, லட்சக்கணக்கான யூத இனத்தவர்களை மொத்தமாக அழித்த அடால்ஃப் ஐக்மெனை விட்டுவைப்பார்களா? அதனால்தான், இந்தக் கொலைகாரன் பெயரை மாற்றிக்கொண்டு ஒளிந்திருக்கிறான்! உடனடியாக, அடால்ஃப் ஐக்மெனைப்பற்றி இஸ்ரேலுக்குத் தகவல் அனுப்ப முடிவெடுத்தார் லோதர் ஹெர்மன். ஆனால் அதற்கு முன்னால், அந்த ஆள் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும்.
க்ளாஸ் பலமுறை சில்வியா வீட்டுக்கு வந்திருக்கிறான். ஆனால், சில்வியா ஒருமுறைகூட அவன் வீட்டுக்குப் போனதில்லை.
’நீங்க கவலைப்படாதீங்கப்பா, அவனோட அட்ரஸை நான் கண்டுபிடிக்கறேன்’ என்றாள் சில்வியா. சொன்னபடி எப்படியோ கஷ்டப்பட்டு க்ளாஸின் வீட்டைக் கண்டறிந்து கதவைத் தட்டிவிட்டாள்.
சில நிமிடங்கள் கழித்து, கதவு திறக்கப்பட்டது, சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் சில்வியாவைச் சந்தேகமாகப் பார்த்தார், ‘யாரும்மா நீ? உனக்கு என்ன வேணும்?’
‘க்ளாஸ் வீடு இதுதானே?’
‘ஆமா, ஆனா அவன் வெளியே போயிருக்கானே’
‘நீங்க?’
அவர் கொஞ்சம் தயங்கினார். பிறகு, ‘நான் க்ளாஸோட அப்பா’ என்றார்.
அவ்வளவுதான். அந்த நிமிடத்தில் அடால்ஃப் ஐக்மெனின் முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டது. என்னதான் பொய்ப் பெயரில் ஒளிந்து வாழ்ந்தாலும், தன்னுடைய மகனுடைய பெயரில் இருக்கும் ‘ஐக்மென்’ என்கிற ஒற்றை வார்த்தையை மறைக்காத சின்னத் தப்பு, அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டது.
உடனடியாக, இந்தத் தகவல் இஸ்ரேலுக்குப் பறந்தது, ’அடால்ஃப் ஐக்மென் இப்போது அர்ஜென்டினாவின் தலைநகரம் ப்யூனஸ் ஐரிஸில் இருக்கிறார், அவருடைய பொய்ப் பெயர் ரிகார்டோ க்ளெமென்ட், முகவரி...’
அப்புறம் என்ன? நேராக அர்ஜென்டினாவுக்குப் போய் ஐக்மென் சட்டையைப் பிடித்து இழுத்து வரவேண்டியதுதானே? ம்ஹூம், விஷயம் அத்தனை சுலபம் இல்லை, இதில் பல சர்வதேசச் சிக்கல்கள் இருக்கின்றன.
முதலில், இந்த ரிகார்டோ க்ளெமென்ட்தான் ஐக்மென் என்பதற்கு என்ன ஆதாரம்? யாரோ சொல்வதை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது, சாட்சி வேண்டும், அல்லது சம்பந்தப்பட்ட ஆளே தன்னை ஐக்மென் என்று ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்க வேண்டும்.
அப்போதும், அர்ஜென்டினாவில் வாழ்கிற ஒருவரை இஸ்ரேல் போலீஸோ, உளவுத்துறையோ கைது செய்ய முடியாது. அந்த நாட்டு அரசாங்கம் இதற்கு நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
எதற்கு இத்தனை வம்பு? பேசாமல் அந்த ஐக்மெனைச் சுட்டுத் தள்ளிவிட்டால் என்ன?
அடால்ஃப் ஐக்மென் செய்திருப்பது சாதாரணக் குற்றம் இல்லை. அதற்குத் தண்டனையாக அவரை வெறுமனே கொலை செய்தால் போதாது, நீதிமன்றத்தில் நிறுத்திவைத்து, செய்த தப்புகளையெல்லாம் ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும், அப்போதுதான் ஹிட்லர் ஆட்சியின் மிருகத்தனமான நடவடிக்கைகள், யூதர்கள் அனுபவித்த கொடுமைகளெல்லாம் உலகத்திற்குப் புரியும்.
சுருக்கமாகச் சொன்னால், நூலில் விழுந்த சேலையை எடுப்பதுபோல, மிகவும் கவனமாகச் செயல்படவேண்டிய விஷயம் இது. கொஞ்சம் சொதப்பினாலும் மொத்தமும் கிழிந்து நாசமாகிவிடும்.
உடனடியாக, இஸ்ரேல் அரசாங்கம் மொஸாட்டைக் கூப்பிட்டது, விஷயத்தைச் சொல்லி, அடால்ஃப் ஐக்மென் பற்றிய குறிப்புகளை ஒப்படைத்தார்கள்.
அப்போதைய மொஸாட் தலைவர் ஐஸர் ஹரேல். ஒரு மாலை நேரத்தில் ஐக்மென் ஃபைலைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார் அவர்.
அன்று ராத்திரி முழுக்க அவர் தூங்கவில்லை. அடால்ஃப் ஐக்மெனின் திருவிளையாடல்களை ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க, அவருக்கு இந்த வேட்டையின் முக்கியத்துவம் புரிந்தது.
மறுநாள் காலை, இஸ்ரேலின் பிரதமர் டேவிட் பென்குரியனைச் சந்தித்தார் ஐஸர் ஹரேல். இதுவரை கிடைத்திருக்கும் தகவல்கள், தனது திட்டத்தை விளக்கிச் சொன்னார், ‘அர்ஜென்டினாவில் இருக்கிற அடால்ஃப் ஐக்மெனை ரகசியமாக கைது செஞ்சு இஸ்ரேலுக்குக் கொண்டுவரணும், அதுக்கு உங்க அனுமதி வேணும் சார்.’
‘ஓகே’ என்றார் பிரதமர்.
உடனடியாக, ‘ஆபரேஷன் ஐக்மென்’ தொடங்கியது, மொஸாட்டின் மிகச் சிறந்த ஏஜென்ட்கள் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். அவர்கள் வெவ்வேறு பெயர்களில் அர்ஜென்டினாவுக்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விரைவில், மொஸாட் உளவாளிகள் அர்ஜென்டினாவின் தலைநகரமான ப்யூனஸ் ஐரிஸுக்கு வந்து சேர்ந்தார்கள். வெவ்வேறு வீடுகளில் தங்கிக்கொண்டு வேலைகளைத் தொடங்கினார்கள்.
முதலில், அடால்ஃப் ஐக்மெனின் வீடு, அலுவலகம், சுற்றுப்புறம் ஆகியவற்றைக் கண்காணித்துக் குறிப்பு எடுக்க வேண்டும், பிறகு அவர் தினந்தோறும் எத்தனை மணிக்கு ஆபீஸ் போகிறார், எப்படிப் போகிறார், எப்போது திரும்பி வருகிறார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும், மற்ற தினசரி நடவடிக்கைகளையும் இதேபோல் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும், பிறகு இந்தத் தகவல்களின் அடிப்படையில் எங்கே, எப்போது வலை விரித்தால் பட்சி சிக்கும் என்று கணக்குப் போடவேண்டும், இதுதான் ஃபார்முலா.
ஆனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிய மொஸாட் உளவாளிகளுக்கு, ஆரம்பத்திலேயே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களிடம் இருந்த முகவரிக்குச் சென்று பார்த்தால், அங்கே அடால்ஃப் ஐக்மெனையும் காணோம், ரிகார்டோ க்ளெமென்டையும் காணோம்!
என்ன ஆச்சு? மொஸாட் தன்னைத் தேடி வருகிறது என்று தெரிந்து கொண்டு ஐக்மென் உஷாராகிவிட்டாரா? வேறு எங்கேயாவது
தப்பித்துப் போய்விட்டாரா?
மொஸாட் ஏஜென்ட்கள் மெல்ல அக்கம்பக்கத்தில் விசாரித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நூலைப் பிடித்துக்கொண்டு போய் ரிகார்டோ க்ளெமென்டின் புதிய முகவரியைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
அதன்பிறகு, வழக்கமான கண்காணிப்புப் பணிகள் தொடங்கின. ரிகார்டோ க்ளெமென்டின் நிழல்போல ஏஜென்ட்கள் பின்தொடர்ந்து தகவல் திரட்டினார்கள். அவருடைய குத்துமதிப்பான உயரம், எடை, தோற்றம், மற்ற விவரங்களெல்லாம் சேகரிக்கப்பட்டன, நிறைய புகைப்படங்களையும் எடுத்தார்கள்.
இந்த ஏஜென்ட்கள் அனுப்பிவைத்த தகவல்கள் அனைத்தையும், மொஸாட் மேலிடம் அடால்ஃப் ஐக்மெனுடன் ஒப்பிட்டுப்பார்த்தது. இதன் அடிப்படையில் ரிகார்டோ க்ளெமென்ட்தான் அடால்ஃப் ஐக்மென் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.
ஆனால், இதை எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது? சரியாகத் தெரியாமல் யாரையோ கைது செய்து இஸ்ரேலுக்குக் கொண்டுசென்றுவிட்டால் மொஸாட்டுக்குப் பெரிய அவமானம் இல்லையா?
1960 மார்ச் 21_ம் தேதி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய ரிகார்டோ க்ளெமென்ட் கையில் ஒரு பூங்கொத்து. அதைத் தன்னுடைய மனைவிக்குக் கொடுத்தார் அவர். வீட்டில் எல்லோர் முகத்திலும் ஏகப்பட்ட சிரிப்பு, சந்தோஷம்.
இதைக் கவனித்த மொஸாட் ஏஜென்ட்கள், சட்டென்று ஐக்மென் ஃபைலைப் பிரித்தார்கள், பரபரப்பாகத் தேடினார்கள்.
மார்ச் 21: அடால்ஃப் ஐக்மென் திருமண நாள்!
இந்த ஆதாரம் போதுமே. ரிகார்டோ க்ளெமென்ட் என்கிற அடால்ஃப் ஐக்மெனைக் கடத்த நாள் குறித்துவிட்டது மொஸாட்.
No comments:
Post a Comment