அவர்கள் பேசப்பேச, முனிருக்கு ஆச்சர்யம், ‘எங்களோட ஈராக் ராணுவம், எங்க ஊர் விமான நிலையத்தைப்பத்தியெல்லாம் எங்களைவிட உங்களுக்கு தான் அதிக விவரம் தெரிஞ்சிருக்கு, அது எப்படி?’ என்று கேட்டார்.
மொஸாட் அவருக்குப் பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டார்கள்.
ஈராக்மட்டுமில்லை, அநேகமாக எல்லா உலக நாடுகளிலும் முக்கியமான இடங்களில் மொஸாட் உளவாளிகள் ஊடுருவியிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாமல் எங்கேயும் எதுவும் நடந்துவிடமுடியாது.border=0 hspace=0 alt="" align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-12/imagefolder/pg8a.jpg" width=200 height=180>
குறிப்பாக, இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருந்த பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் மத்தியில் பல அரேபியர்களை விலைக்கு வாங்கியிருந்தது மொஸாட். இவர்கள் அனுப்பி வைக்கிற தகவல்களை வைத்துக்கொண்டு, இஸ்ரேலால் எப்பேர்ப்பட்ட தாக்குதலையும் சுலபமாகச் சமாளித்துவிட முடிந் தது.
மிய்ர் அமித் காலத்தில் மொஸாடின் உளவு நெட்வொர்க் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தது. ஒருபக்கம் திறமைசாலி ஏஜென்டுகள், இன்னொருபக்கம் அமெரிக்கா, சி.ஐ.ஏ. புண்ணியத்தில் அதிநவீன சாதனங்கள், மூன்றாவதாக மொஸாட் நிபுணர்கள் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிக்கொண்ட தனித் ’ திறமை’கள், தொழில்நுட்ப சாகசங்கள் எல்லாமாகச் சேர்ந்து அவர்களை உலகத் தரத்துக்கு உயர்த்தியிருந்தது.
மிக்21 கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவத் தலைவர்கள், அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் என எல்லோரும் மொஸாடைத் தனி மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். எப்பேர்ப்பட்ட விஷயத்தையும் அவர்களிடம் நம்பி ஒப்படைக்கலாம், தலைகீழாக நின்று தண்ணீர் குடித் தாவது வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை பிறந்திருந்தது.
இதனால், இஸ்ரேலைச் சுற்றிலும் எங்கே எந்தப் பிரச்னை என்றாலும், முதலில் மொஸாடைக் கூப்பிடுவது வழக்கமாகிவிட்டது, ‘நாங்கள் இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டோம், உண்மைதானா? இதுபற்றி உங்களிடம் ஏதாவது கூடுதல் தகவல்கள் இருக்கிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் இப்போது என்ன செய்தால் பிரச்னையைச் சமாளிக்கலாம்?’
border=0 hspace=0 alt="" align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-12/imagefolder/pg8b.jpg" width=123 height=183>இப்படி அவர்கள் கேட்கிற விவரங்கள் எல்லாமே, மொஸாட் ஏஜென்டுகளின் விரல் நுனியில் தயாராக இருந்தன. இஸ்ரேலுக்கு எதிராகச் செயல் படக்கூடிய தலைவர்கள், ஆட்சியாளர்கள், தீவிரவாதிகள், தொழில்முறைக் கொலைகாரர்கள் என எல்லோரைப்பற்றியும் கச்சிதமாக ஃபைல் போட்டு, ஃபோட்டோ சகிதம் விவரங்களைத் தொகுத்து வைத்திருந்தார்கள்.
அறுபதுகளின் மத்தியில், இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் நடுவே நிறைய அரசியல் பிரச்னைகள். எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பிரயோஜனம் இல்லை. அவர்கள் நம்மை அடிப்பதற்குமுன்னால் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது இஸ்ரேல்.
உடனடியாக, மொஸாடுக்கு அழைப்பு வந்தது, ‘நாம எகிப்துமீது படையெடுக்கணும். அதை எப்போ செய்யலாம், எப்படிச் செய்யலாம்னு கொஞ்சம் கவனிச்சுச் சொல்லுங்க’ மிய்ர் அமித் சுறுசுறுப்பானார். எகிப்தில் இருக்கும் மொஸாட் உளவாளிகளைக் கூப்பிட்டுப் பேசினார், அங்கே இன்னும் பல முக்கிய இடங்களில் தன் னுடைய ஆட்களை நுழைப்பதற்குத் திட்டம் தயாரித்தார்.
அப்போது எகிப்து நாட்டின் மிகப் பெரிய பலம், அவர்களுடைய அதிநவீன விமானப் படை. அதோடு ஒப்பிடும்போது, இஸ்ரேல் சின்னக் கரப்பான் பூச்சியைப்போல. போர் தொடங்கி, எகிப்து விமானங்கள் இஸ்ரேல்மீது பறந்தால் அவ்வளவுதான், சில மணி நேரங்களுக்குள் மொத்தத் தேசத்தையும் தரைமட்டமாக்கிவிடுவார்கள்.
ஆக, இஸ்ரேல் எகிப்தை அடிக்க வேண்டுமென்றால், முதலில் அவர்களுடைய விமானப் படையை முடக்க வேண்டும். அதைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து நிற்கும்போது, சண்டையை நமக்குச் சாதகமாகத் திருப்பிவிடலாம்!
ஆனால், எகிப்து விமானங்கள் மிகப் பிரமாதமான தொழில்நுட்பங்களைக் கொண்டவை. இஸ்ரேல் நாட்டுப் பேப்பர் ராக்கெட்களை வைத்துக்கொண்டு இவற்றை எப்படி அழிக்க முடியும்?border=0 hspace=0 alt="" align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-12/imagefolder/pg8c.jpg" width=97 height=141>
இங்கேதான், மொஸாடின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. எகிப்தில் எங்கெல்லாம் போர் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன, இவற்றை இயக்குகிற விமானிகள் யார், அவர்களுக்குக் கட்டளையிடுகிற அதிகாரிகள் எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள், இந்தப் பார்ட்டிகளுக்கு ஏதாவது பலவீனம் உண்டா, மது, மாது, இன்னபிற ஐட்டங்களுக்கு மயங்குவார்களா, தினந்தோறும் எத்தனை மணிக்கு இந்த விமானங்கள் தயார் நிலையில் இருக்கும், அவற்றுக்கு எரிபொருள் நிரப்புகிற நேரம் என்ன, ஒவ்வொரு விமான நிலையமும் எப்போது மிகப் பரபரப்பாக இருக்கும், எப்போது தூங்கி வழியும் என்ப துபோன்ற விவரங்களைத் திரட்டி இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
இஸ்ரேல் ராணுவம் இந்தத் தகவல்களை மேலோட்டமாகப் புரட்டிப்பார்த்தது. அப்படியே ஆடிப்போய்விட்டார்கள், எகிப்து ராணுவத்துக்கேகூட அவர்களுடைய விமான நிலையங்களைப்பற்றி இத்தனை நுணுக்கமான விவரங்கள் தெரிந்திருக்காது, மொஸாடுக்கு எப்படி இதெல்லாம் தெரியவந்தது?
’அதெல்லாம் தொழில் ரகசியம்’ என்றது மொஸாட், ‘இப்போ நீங்க எதுவும் பேசவேண்டாம், ஒழுங்கா நாங்க சொல்றதைமட்டும் கேளுங்க.’
’சரி, சொல்லுங்க, நாங்க என்ன செய்யணும்?’
’பெரும்பாலான எகிப்து விமான நிலையங்கள், காலை எட்டு மணிக்கு ரொம்பச் சுறுசுறுப்பா இருக்கும். எங்கே பார்த்தாலும் விமானங்கள், அதுக்கு எரிபொருள் நிரப்பற வண்டிகள், பறக்கறதுக்கு ரெடியாகிட்டிருக்கிற விமானிகள்னு எல்லோரும் அவங்கவங்க வேலையில பிஸியா இருப்பாங்க. அந்த நேரம் பார்த்து நீங்க அதிரடியாத் தாக்கினா, கொஞ்ச நேரத்துக்குள்ள நிறைய சேதம் உண்டாக்கிடலாம்.’
’ஒருவேளை, அவங்களும் பதிலுக்குத் தாக்க ஆரம்பிச்சா?’
border=0 hspace=0 alt="" align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-12/imagefolder/pg8d.jpg" width=109 height=163> ‘கவலையேபடாதீங்க, அந்த நேரத்தில பெரும்பாலான அதிகாரிங்க ஆஃபீசுக்கே வந்திருக்கமாட்டாங்க. இல்லைன்னா, பக்கத்து கேன்டீன்ல அரட்டை அடிச்சுக்கிட்டு காப்பி, மசால்வடை சாப்பிட்டு கிட்டிருப்பாங்க. அவங்களுக்கு முழிப்பு வந்து, விமானிங்களுக்குக் கட்டளை போட்டு, நம்மைத் திருப்பித் தாக்கறதுக்குள்ள, நாம அடிச்சு வெளாசிட்டுத் திரும்பி வந்துடலாம்.’
முதன்முறையாக, இஸ்ரேல் ராணுவத்தினருக்கு எகிப்தை ஜெயித்துவிட முடியும் என்று நம்பிக்கை வந்தது. ஒரு நல்ல உளவு நெட்வொர்க்கின் பலம் எப்பேர்ப்பட்டது என்று அனுபவபூர்வமாகப் புரிந்து கொண்டார்கள்.
‘சரி, நாங்க கரெக்டா எத்தனை மணிக்குப் புறப்படணும்?’
‘ஏழே முக்கால்’ என்று முகூர்த்த நேரம் குறித்துக் கொடுத்தது மொஸாட். ‘சரியா எட்டு மணிக்கு அவங்களை அடிக்க ஆரம்பிக்கணும், அவ்ளோதான்.’
1967-ம் வருடம் ஜூன் 5-ம் தேதி, இஸ்ரேல் பிரதமர் லெவி இஷ்கல் எகிப்தின்மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். சரித்திரத்தில் ‘ஆறு நாள் போர்’ (ஷிவீஜ் ஞிணீஹ் கீணீக்ஷீ) என்று வர்ணிக்கப்படும் அதிவேக யுத்தம் தொடங்கியது.
அன்றைய தினம் எகிப்தை நோக்கி விரைந்த இஸ்ரேல் விமானங்கள், மிகத் துல்லியமாக 8:01க்குத் தாழ்வாகக் கீழே பறந்தன. அடிக்க ஆரம்பித்தார்கள்.
மொஸாட் சொன்னதுபோலவே, எகிப்து விமானிகள், ராணுவத்தினர் யாரும் இந்தத் திடீர் தாக்குதலைச் சமாளிக்கக்கூடிய நிலைமையில் இல்லை. அவர்கள் சுதாரித்துக்கொள்வதற்குள், எகிப்து விமானங்கள், எரிபொருள் வண்டிகளை இஸ்ரேல் குண்டுகள் வரிசையாகத் தகர்க்க ஆரம்பித்தன. இவை ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக வெடித்துச் சிதற, எக்ஸ்ட்ரா லார்ஜ் சேதம்.
சில நிமிடங்களுக்குள், நூற்றுக்கணக்கான எகிப்து விமானங்கள், வீரர்களை அழித்துவிட்டது இஸ்ரேல். அப்போதே, இந்தப் போரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது.
அப்போதைய எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர். இத்தனை பிரமாதமான தனது விமானப் படை இப்படிக் கண் சிமிட்டும் நேரத்துக்குள் உடைத்து எறியப்பட்டுவிட்டதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
அவ்வளவு ஏன்? இஸ்ரேலுக்குள்ளேயே, பலரால் இந்த வெற்றியை நம்பமுடியவில்லை. எல்லோரும் மொஸாடின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து கொண்டிருந்தார்கள்.
உண்மையில், இது தீர்க்க தரிசனமும் இல்லை, ஒரு புண்ணாக்கும் இல்லை. பல மாதங்கள் பொறுமையாக உட்கார்ந்து தகவல் திரட்டியதன் பலன், அந்தத் தகவல்களை ஒழுங்காக அலசி, அதனைச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்தினால் அதன்மூலம் மிகப் பெரிய வெற்றிகளைப் பெறமுடியும் என்று சாட்சியுடன் நிரூபித்துவிட்டது மொஸாட்.
ஒருவேளை, அந்த ஜூன் 5-ம் தேதி இஸ்ரேலிய ராணுவம் ஜஸ்ட் கால் மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டிருந்தால்கூட, எகிப்து விமானங்கள் அனை த்தும் தயார் நிலையில் இருந்திருக்கும், அதிகாரிகள் மசால் வடையைத் தின்று ஏப்பம் விட்ட கையோடு இஸ்ரேல் விமானங்களை நடுவானத்தில் கொளுத்திச் சொக்கப்பனை கொண்டாடியிருப்பார்கள். ஒட்டுமொத்தப் போரும் எகிப்துக்குச் சாதகமாகத் திசை மாறியிருக்கும்!
ஆறு நாள் போரில் இஸ்ரேல் பெற்ற வெற்றிகளுக்கு, அவர்களுடைய உளவுத்துறை பலம் ஒரு மிக முக்கியமான காரணம். இதன்மூலம், மொஸாட் நினைத்தால் எங்கேயும் ஊடுருவமுடியும், எப்பேர்ப்பட்ட எதிரியின் பலவீனங்களையும் கண்டுபிடித்துத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது உறுதியாகிவிட்டது. அதன்பிறகு, பல நாடுகள் தங்கள் மண்ணில் இஸ்ரேலுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கத் தயங்கினார்கள்.
இதைப் பார்த்து உற்சாகமான இஸ்ரேல் அரசாங்கம், தங்களுடைய உளவுத்துறைக்கு இன்னும் பல அதிகாரங்கள், முக்கியப் பொறுப்புகளை அள்ளி வழங்கியது. மொஸாடின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment