விதவிதமான முகங்கள், வெவ்வேறு தொழில்களைச் செய்கிறவர்கள், பணக்காரர்கள், அன்றாடங்காய்ச்சிகள், கொழுத்தவர்கள், மெலிந்தவர்கள் எல்லாவகை மக்களையும் அங்கே பார்க்க முடிந்தது. அனைவரும் ஒரேமாதிரியாக உடுத்தியிருந்தார்கள், பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
யூதர்களைப் பொருத்தவரை, அது வெறும் சுவர் அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதே இடத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த ஓர் ஆலயத்தின் அடையாள மிச்சம், அவர்களுடைய
ஜெருசலேம் நகரில் இந்த ஆலயத்தை அமைத்தவன், ஹெரோத் என்கிற யூத அரசன். அந்தக் காலத்தில் யூதர்களின் பெருமைக்குரிய புண்ணியத் தலமாக மதிக்கப்பட்ட கோயில் அது.
கி.பி. எழுபதாம் வருடம், அங்கே படையெடுத்து வந்த ரோமானியர்கள் இந்தக் கோயிலைத்தான் குறிவைத்துத் தாக்கினார்கள். உள்ளே இருந்த விலை மதிக்க முடியாத பொருள்களையெல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு, ஆலயத்தையும் இடித்துவிட்டார்கள்.
இந்த அக்கிரமத்தைத் தடுப்பதற்கு யூதர்கள் எவ்வளவோ போராடினார்கள். ஆனால், ரோமானியப் படைகளின் வெறித்தனத்துக்கு முன்னால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்ணெதிரே அவர்களுடைய கம்பீரமான புனித அடையாளம் தகர்க்கப்பட்டுவிட்டது. கடைசியில் மிஞ்சியது இந்தச் சுவர் மட்டும்தான்.
அதன்பிறகு, உலகம் முழுக்க இருக்கிற யூதர்களுக்கு இந்தச் சுவர் வணக்கத்துக்குரிய மதச் சின்னமாகிவிட்டது. என்றைக்காவது இந்த ஆலயத்தை மீண்டும் கட்டித்தருவதற்கு ஒரு தேவதூதன் வருவான் என்று அவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
கோயில் இருக்கட்டும், அதற்கு முன்னால், அந்தச் சுவர் உள்ள நிலம் யாருக்குச் சொந்தம்? அங்கேதான் பிரச்னை.
ஜெருசலேம் நகரம் இருப்பது பாலஸ்தீனத்தில்.அங்கே பெரும்-பான்மையாக வாழ்வது அரேபியர்கள்தான்.
காலம்காலமாக அரேபியர்களின் தேசம் என்று அறியப்பட்டிருந்த பாலஸ்தீனத்திற்குள், அப்போது யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறிக் கொண்டிருந்தார்கள்.
இதனால், பாலஸ்தீனத்தில் நாலு யூதர்கள் சேர்ந்து உட்கார்ந்து டீ சாப்பிட்டால்கூட, அவர்கள் ஏதோ சதி பண்ணுகிறார்களோ என்று அரேபியர்களுக்கு வயிற்றைக் கலக்கியது, `இந்தப் பயலுங்களைக் கொஞ்சம் தட்டிவைக்கணும், இல்லாட்டி முதலுக்கே மோசமாயிடும்' என்று பேசத் தொடங்கினார்கள்.
அரேபியர்களின் இந்தப் பாதுகாப்பில்லாத உணர்வினால் (Insecurity) அப்போது பாலஸ்தீனத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி யூதர்களுக்குக்கூட ஆபத்து வந்து சேர்ந்தது. `நல்லவன், கெட்டவன் என்றெல்லாம் பார்க்காதே, யூதனா? போட்டுத் தள்ளு' அவ்வளவுதான்!
இப்படித்தான், அன்றைக்கு ஜெருசலேம் புனிதச் சுவரின் முன்னால் வழிபாட்டுக்காகக் கூடியிருந்த யூதர்கள்மீது, திடீர்த் தாக்குதல் தொடங்கியது. எங்கிருந்தோ கற்கள், கட்டைகள், பாட்டில்கள், மற்ற `இன்ஸ்டன்ட்' ஆயுதங்கள் பறந்து வந்தன. பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பல யூதர்கள் அடிபட்டுச் சாய்ந்தார்கள்.
ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்றே யாருக்கும் புரியவில்லை. அப்புறம் சுதாரித்துக்கொண்ட சில இளைஞர்கள் அடிபட்டவர்களை அப்புறப்படுத்தினார்கள். மிச்சமிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினார்கள்.
கொஞ்ச நேரத்துக்குள், அடித்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். புனிதச் சுவருக்கு முன்னால் இருந்த பகுதி போர்க்களம்போல் மாறியிருந்தது. சற்றும் எதிர்பாராத தாக்குதலால், ஏகப்பட்ட யூதர்களுக்குக் காயம்.
இங்கே மட்டுமில்லை, பாலஸ்தீனம் முழுக்கவே யூதர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. ஒரு சின்ன வதந்திகூடப் போதும், அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் நடுவே நெருப்புப் பற்றிக்கொண்டுவிடும். அப்புறம் சண்டையில் எந்தப் பக்கம் எத்தனை உயிர் போகுமோ, கணக்கே இல்லை.
1929 ஆகஸ்ட் 23-ம் தேதி, யூதர்களின் புனித நகரங்களில் ஒன்றான ஹெப்ரானில் பெரிய கலவரம். ஐம்பதுக்கும் மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்தத் தகவல், அதிவேகத்தில் எல்லா நகரங்களுக்கும் பரவியது. இங்கே யூதர்கள் அரேபியர்களைக் கொல்கிறார்கள். அங்கே அரேபியர்கள் யூதர்களைக் கொல்கிறார்கள். இறந்துபோனவர்கள் எண்ணிக்கை இருநூறு, ஐநூறு, ஆயிரம் என்று விதவிதமான வதந்திகள் பீதியூட்டின.
இதனால், பாலஸ்தீனம் முழுக்கக் கலவரச் சூழல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற தெருக்கள், ஏரியாக்கள் எல்லாவற்றிலும் வன்முறை வெடித்துக் கொண்டிருந்தது, ஏகப்பட்ட உயிர்ச் சேதம், பொருள் சேதம்.
பதறிப்போன யூதர்கள், ஒரு முடிவெடுத்தார்கள். `இனிமே தனித்தனியா சண்டை போடறது சரிப்படாது, நம்மைப் பாதுகாத்துக்கணும்னா, கும்பலா மோதறதுதான் புத்திசாலித்தனம். இல்லாட்டி, இந்தப் பாலஸ்தீன மண்ணில யூதர்களோட அடையாளமே இல்லாதபடி அழிச்சுடுவாங்க.'
முதலில், நாம் ஏன் இத்தனை அடி வாங்குகிறோம்? பாலஸ்தீனர்களை எதிர்த்துப் போராட நமக்கு தைரியம் இல்லையா? ஆள் பலம், ஆயுதம் இல்லையா?
எல்லாம் இருக்கிறது. ஆனால், அவர்கள் எப்போது அடிப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை. குடும்பத்தோடு, நண்பர்களோடு ஜாலியாக ரிலாக்ஸ் செய்துகொண்டிருக்கும்போது, பிரார்த்தனை செய்யும்போது, ராத்திரிச் சாப்பாட்டுக்கு உட்கார்கிற நேரத்திலெல்லாம் எதிர்பாராமல் தாக்க ஆரம்பித்தால் நம்மால் என்ன செய்யமுடியும்?
ஆக, இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஒரே வழிதான்: அரேபியர்கள்மீது நிரந்தரமாக ஒரு கண் வைக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் கட்டையைத் தூக்குவதற்கு முன்னால், நாமும் எதிர்த்தாக்குதலுக்குத் தயாராகிவிட வேண்டும்.
ஆனால், அரேபியர்களின் திட்டங்களை நாம் எப்படித் தெரிந்து கொள்வது?
கஷ்டம்தான். ஆனால், கொஞ்சம் மெனக்கெட்டால் நிச்சயமாக முடியும்.
யூதர்கள் இதற்காக நிதி திரட்ட ஆரம்பித்தார்கள். அந்தப் பணத்தை எந்த வழிகளில் செலவு செய்ய வேண்டும், யாரை எப்படிப் பயன்படுத்தி என்னென்ன தகவல்களைச் சேகரிக்கவேண்டும் என்றெல்லாம் யோசித்தார்கள். அவர்களுடைய முதல் உளவுத்துறை உருவாகிவிட்டது.
என்னதான் பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் சண்டை தூள் பறந்தாலும், `யூதர்கள் என்ன பாவம் செஞ்சாங்க? அவங்களும் நம்மோட
இதுதவிர, சில பாலஸ்தீனர்களுக்குக் காசு கொடுத்து ஆசை காட்டினார்கள். `எப்போ, எங்கே, எப்படித் தாக்குதல் நடக்கப்போகுதுன்னு விவரம் சொல்லு, துட்டு தர்றோம்.'
இந்தக் `கையில தகவல், வாயில தோசை' திட்டம் பிரமாதமாக வேலை செய்தது. இதன்மூலம் பல தாக்குதல்களை யூதர்கள் முன்கூட்டியே தெரிந்துகொண்டு பாலஸ்தீனர்களுக்குப் பதிலடி கொடுத்தார்கள்.
பாலஸ்தீனர்களுக்கு எரிச்சல். நம் ஊரில் வந்து உட்கார்ந்துகொண்டு நம்மையே எதிர்க்கிறார்களே என்று யூதர்கள்மீது இன்னும் ஆவேசத்துடன் மோதினார்கள்.
பாலஸ்தீனர்களின் கோபத்தில் நியாயம் இருந்தது. அப்போது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், யூதர்களுக்கும் அங்கே சம உரிமை உண்டு என்பதுபோல் நடந்து கொண்டது. இது அரேபியர்களுக்குப் பிடிக்கவில்லை, `இது எங்களுடைய பூமி. மைனாரிட்டிகளான யூதர்களை எப்படி எங்களுக்குச் சமமாக நடத்தலாம்?' என்று கொதித்தார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், பாலஸ்தீன மண் வருங்காலத்தில் யாருக்குச் சொந்தமாகப் போகிறது என்கிற விஷயத்தில் அரேபியர்கள், யூதர்கள் இருதரப்பினருக்கும் பயம் வந்துவிட்டது. அவர்கள் ரொம்பக் காலம் சேர்ந்து வாழமுடியாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
யூதர்கள் யோசித்தார்கள். இப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்து அரேபியர்கள் அடங்கியிருக்கிறார்கள். நாளைக்கே ஏதாவது பிரச்னை வந்து பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியேறிவிட்டால் நமக்கு யார் பாதுகாப்பு?
வேறு வழியே இல்லை. நம் உளவுத்துறையை இன்னும் வலுவாக்க வேண்டும், நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளவேண்டும், இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு பணமும் செலவழிக்கலாம்!
கஜானாவில் காசு, ராணுவம், ஆயுத பலத்தையெல்லாம்விட, எதிராளியைப்பற்றிய தகவல்கள்தான் முக்கியமானவை என்பதை யூதர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். அதன்பிறகு, அவர்களுடைய போர்த் தந்திரங்களே மாறிவிட்டன, அதுவரை நேரடி யுத்தத்தில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தவர்கள், இப்போது பின்னணியில் ரகசியமாக வேட்டு வைக்கும் முயற்சிகளில் இறங்கினார்கள்.
அப்போது யூதர்கள் கற்றுக்கொண்ட உளவுத்துறைப் பாடங்கள்தான், இன்றுவரை அவர்களுக்குப் பெரிய பலமாக இருக்கின்றன. பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எதிரியைப்பற்றிய தகவல்களைத் திரட்டுவது, பிறகு அதெல்லாம் சரியான விவரங்கள்தானா, அல்லது உட்டாலக்கடியா என்று உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள், நம் படைக்குள் எதிராளி ஊடுருவாதபடி பார்த்துக்கொள்வது, தவறிப்போய் யாராவது உள்ளே வந்துவிட்டாலும், அவர்கள்மூலமே தவறான தகவல்களை அந்தப் பக்கம் பரப்பிவிட்டு விளையாடுவது, நம்முடைய பலம் ஒன்று என்றால், அது நூறு, ஆயிரமாகத் தெரியும்படி மாயத் தோற்றங்களை உருவாக்கி மிரட்டுவது என்று யூதர்களின் உளவு பலம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருந்தது.
யூதர்களின் அதிர்ஷ்டம், இதுமாதிரி கில்லாடித்தனமான வேலைகளைச் செய்வதற்கு ஏகப்பட்ட இளைஞர்கள் முன்வந்தார்கள். உளவுப் பணியில் இருக்கும் ரகசியத்தன்மை, த்ரில் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அடிப்படை விஷயங்களை முனைப்புடன் கற்றுக் கொண்டார்கள், புதுசாக யோசித்து வித்தியாசமாகச் செயல்பட்டு யூதர்களுடைய உளவுத்துறையை `எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்'களாக மாற்றினார்கள்.
இந்த இளைஞர் படைதான், பின்னர் இஸ்ரேல் தேசத்துக்கும், அதன் உளவுத்துறையாகிய மொஸாட்டுக்கும் பலமான அஸ்திவாரமாக அமைந்தது.
kps 2009-10-18
விதவிதமான முகங்கள், வெவ்வேறு தொழில்களைச் செய்கிறவர்கள், பணக்காரர்கள், அன்றாடங்காய்ச்சிகள், கொழுத்தவர்கள், மெலிந்தவர்கள் எல்லாவகை மக்களையும் அங்கே பார்க்க முடிந்தது. அனைவரும் ஒரேமாதிரியாக உடுத்தியிருந்தார்கள், பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
யூதர்களைப் பொருத்தவரை, அது வெறும் சுவர் அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதே இடத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த ஓர் ஆலயத்தின் அடையாள மிச்சம், அவர்களுடைய
ஜெருசலேம் நகரில் இந்த ஆலயத்தை அமைத்தவன், ஹெரோத் என்கிற யூத அரசன். அந்தக் காலத்தில் யூதர்களின் பெருமைக்குரிய புண்ணியத் தலமாக மதிக்கப்பட்ட கோயில் அது.
கி.பி. எழுபதாம் வருடம், அங்கே படையெடுத்து வந்த ரோமானியர்கள் இந்தக் கோயிலைத்தான் குறிவைத்துத் தாக்கினார்கள். உள்ளே இருந்த விலை மதிக்க முடியாத பொருள்களையெல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு, ஆலயத்தையும் இடித்துவிட்டார்கள்.
இந்த அக்கிரமத்தைத் தடுப்பதற்கு யூதர்கள் எவ்வளவோ போராடினார்கள். ஆனால், ரோமானியப் படைகளின் வெறித்தனத்துக்கு முன்னால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்ணெதிரே அவர்களுடைய கம்பீரமான புனித அடையாளம் தகர்க்கப்பட்டுவிட்டது. கடைசியில் மிஞ்சியது இந்தச் சுவர் மட்டும்தான்.
அதன்பிறகு, உலகம் முழுக்க இருக்கிற யூதர்களுக்கு இந்தச் சுவர் வணக்கத்துக்குரிய மதச் சின்னமாகிவிட்டது. என்றைக்காவது இந்த ஆலயத்தை மீண்டும் கட்டித்தருவதற்கு ஒரு தேவதூதன் வருவான் என்று அவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
கோயில் இருக்கட்டும், அதற்கு முன்னால், அந்தச் சுவர் உள்ள நிலம் யாருக்குச் சொந்தம்? அங்கேதான் பிரச்னை.
ஜெருசலேம் நகரம் இருப்பது பாலஸ்தீனத்தில்.அங்கே பெரும்-பான்மையாக வாழ்வது அரேபியர்கள்தான்.
காலம்காலமாக அரேபியர்களின் தேசம் என்று அறியப்பட்டிருந்த பாலஸ்தீனத்திற்குள், அப்போது யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறிக் கொண்டிருந்தார்கள்.
இதனால், பாலஸ்தீனத்தில் நாலு யூதர்கள் சேர்ந்து உட்கார்ந்து டீ சாப்பிட்டால்கூட, அவர்கள் ஏதோ சதி பண்ணுகிறார்களோ என்று அரேபியர்களுக்கு வயிற்றைக் கலக்கியது, `இந்தப் பயலுங்களைக் கொஞ்சம் தட்டிவைக்கணும், இல்லாட்டி முதலுக்கே மோசமாயிடும்' என்று பேசத் தொடங்கினார்கள்.
அரேபியர்களின் இந்தப் பாதுகாப்பில்லாத உணர்வினால் (Insecurity) அப்போது பாலஸ்தீனத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி யூதர்களுக்குக்கூட ஆபத்து வந்து சேர்ந்தது. `நல்லவன், கெட்டவன் என்றெல்லாம் பார்க்காதே, யூதனா? போட்டுத் தள்ளு' அவ்வளவுதான்!
இப்படித்தான், அன்றைக்கு ஜெருசலேம் புனிதச் சுவரின் முன்னால் வழிபாட்டுக்காகக் கூடியிருந்த யூதர்கள்மீது, திடீர்த் தாக்குதல் தொடங்கியது. எங்கிருந்தோ கற்கள், கட்டைகள், பாட்டில்கள், மற்ற `இன்ஸ்டன்ட்' ஆயுதங்கள் பறந்து வந்தன. பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பல யூதர்கள் அடிபட்டுச் சாய்ந்தார்கள்.
ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்றே யாருக்கும் புரியவில்லை. அப்புறம் சுதாரித்துக்கொண்ட சில இளைஞர்கள் அடிபட்டவர்களை அப்புறப்படுத்தினார்கள். மிச்சமிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினார்கள்.
கொஞ்ச நேரத்துக்குள், அடித்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். புனிதச் சுவருக்கு முன்னால் இருந்த பகுதி போர்க்களம்போல் மாறியிருந்தது. சற்றும் எதிர்பாராத தாக்குதலால், ஏகப்பட்ட யூதர்களுக்குக் காயம்.
இங்கே மட்டுமில்லை, பாலஸ்தீனம் முழுக்கவே யூதர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. ஒரு சின்ன வதந்திகூடப் போதும், அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் நடுவே நெருப்புப் பற்றிக்கொண்டுவிடும். அப்புறம் சண்டையில் எந்தப் பக்கம் எத்தனை உயிர் போகுமோ, கணக்கே இல்லை.
1929 ஆகஸ்ட் 23-ம் தேதி, யூதர்களின் புனித நகரங்களில் ஒன்றான ஹெப்ரானில் பெரிய கலவரம். ஐம்பதுக்கும் மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்தத் தகவல், அதிவேகத்தில் எல்லா நகரங்களுக்கும் பரவியது. இங்கே யூதர்கள் அரேபியர்களைக் கொல்கிறார்கள். அங்கே அரேபியர்கள் யூதர்களைக் கொல்கிறார்கள். இறந்துபோனவர்கள் எண்ணிக்கை இருநூறு, ஐநூறு, ஆயிரம் என்று விதவிதமான வதந்திகள் பீதியூட்டின.
இதனால், பாலஸ்தீனம் முழுக்கக் கலவரச் சூழல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற தெருக்கள், ஏரியாக்கள் எல்லாவற்றிலும் வன்முறை வெடித்துக் கொண்டிருந்தது, ஏகப்பட்ட உயிர்ச் சேதம், பொருள் சேதம்.
பதறிப்போன யூதர்கள், ஒரு முடிவெடுத்தார்கள். `இனிமே தனித்தனியா சண்டை போடறது சரிப்படாது, நம்மைப் பாதுகாத்துக்கணும்னா, கும்பலா மோதறதுதான் புத்திசாலித்தனம். இல்லாட்டி, இந்தப் பாலஸ்தீன மண்ணில யூதர்களோட அடையாளமே இல்லாதபடி அழிச்சுடுவாங்க.'
முதலில், நாம் ஏன் இத்தனை அடி வாங்குகிறோம்? பாலஸ்தீனர்களை எதிர்த்துப் போராட நமக்கு தைரியம் இல்லையா? ஆள் பலம், ஆயுதம் இல்லையா?
எல்லாம் இருக்கிறது. ஆனால், அவர்கள் எப்போது அடிப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை. குடும்பத்தோடு, நண்பர்களோடு ஜாலியாக ரிலாக்ஸ் செய்துகொண்டிருக்கும்போது, பிரார்த்தனை செய்யும்போது, ராத்திரிச் சாப்பாட்டுக்கு உட்கார்கிற நேரத்திலெல்லாம் எதிர்பாராமல் தாக்க ஆரம்பித்தால் நம்மால் என்ன செய்யமுடியும்?
ஆக, இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஒரே வழிதான்: அரேபியர்கள்மீது நிரந்தரமாக ஒரு கண் வைக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் கட்டையைத் தூக்குவதற்கு முன்னால், நாமும் எதிர்த்தாக்குதலுக்குத் தயாராகிவிட வேண்டும்.
ஆனால், அரேபியர்களின் திட்டங்களை நாம் எப்படித் தெரிந்து கொள்வது?
கஷ்டம்தான். ஆனால், கொஞ்சம் மெனக்கெட்டால் நிச்சயமாக முடியும்.
யூதர்கள் இதற்காக நிதி திரட்ட ஆரம்பித்தார்கள். அந்தப் பணத்தை எந்த வழிகளில் செலவு செய்ய வேண்டும், யாரை எப்படிப் பயன்படுத்தி என்னென்ன தகவல்களைச் சேகரிக்கவேண்டும் என்றெல்லாம் யோசித்தார்கள். அவர்களுடைய முதல் உளவுத்துறை உருவாகிவிட்டது.
என்னதான் பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் சண்டை தூள் பறந்தாலும், `யூதர்கள் என்ன பாவம் செஞ்சாங்க? அவங்களும் நம்மோட
இதுதவிர, சில பாலஸ்தீனர்களுக்குக் காசு கொடுத்து ஆசை காட்டினார்கள். `எப்போ, எங்கே, எப்படித் தாக்குதல் நடக்கப்போகுதுன்னு விவரம் சொல்லு, துட்டு தர்றோம்.'
இந்தக் `கையில தகவல், வாயில தோசை' திட்டம் பிரமாதமாக வேலை செய்தது. இதன்மூலம் பல தாக்குதல்களை யூதர்கள் முன்கூட்டியே தெரிந்துகொண்டு பாலஸ்தீனர்களுக்குப் பதிலடி கொடுத்தார்கள்.
பாலஸ்தீனர்களுக்கு எரிச்சல். நம் ஊரில் வந்து உட்கார்ந்துகொண்டு நம்மையே எதிர்க்கிறார்களே என்று யூதர்கள்மீது இன்னும் ஆவேசத்துடன் மோதினார்கள்.
பாலஸ்தீனர்களின் கோபத்தில் நியாயம் இருந்தது. அப்போது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், யூதர்களுக்கும் அங்கே சம உரிமை உண்டு என்பதுபோல் நடந்து கொண்டது. இது அரேபியர்களுக்குப் பிடிக்கவில்லை, `இது எங்களுடைய பூமி. மைனாரிட்டிகளான யூதர்களை எப்படி எங்களுக்குச் சமமாக நடத்தலாம்?' என்று கொதித்தார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், பாலஸ்தீன மண் வருங்காலத்தில் யாருக்குச் சொந்தமாகப் போகிறது என்கிற விஷயத்தில் அரேபியர்கள், யூதர்கள் இருதரப்பினருக்கும் பயம் வந்துவிட்டது. அவர்கள் ரொம்பக் காலம் சேர்ந்து வாழமுடியாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
யூதர்கள் யோசித்தார்கள். இப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்து அரேபியர்கள் அடங்கியிருக்கிறார்கள். நாளைக்கே ஏதாவது பிரச்னை வந்து பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியேறிவிட்டால் நமக்கு யார் பாதுகாப்பு?
வேறு வழியே இல்லை. நம் உளவுத்துறையை இன்னும் வலுவாக்க வேண்டும், நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளவேண்டும், இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு பணமும் செலவழிக்கலாம்!
கஜானாவில் காசு, ராணுவம், ஆயுத பலத்தையெல்லாம்விட, எதிராளியைப்பற்றிய தகவல்கள்தான் முக்கியமானவை என்பதை யூதர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். அதன்பிறகு, அவர்களுடைய போர்த் தந்திரங்களே மாறிவிட்டன, அதுவரை நேரடி யுத்தத்தில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தவர்கள், இப்போது பின்னணியில் ரகசியமாக வேட்டு வைக்கும் முயற்சிகளில் இறங்கினார்கள்.
அப்போது யூதர்கள் கற்றுக்கொண்ட உளவுத்துறைப் பாடங்கள்தான், இன்றுவரை அவர்களுக்குப் பெரிய பலமாக இருக்கின்றன. பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எதிரியைப்பற்றிய தகவல்களைத் திரட்டுவது, பிறகு அதெல்லாம் சரியான விவரங்கள்தானா, அல்லது உட்டாலக்கடியா என்று உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள், நம் படைக்குள் எதிராளி ஊடுருவாதபடி பார்த்துக்கொள்வது, தவறிப்போய் யாராவது உள்ளே வந்துவிட்டாலும், அவர்கள்மூலமே தவறான தகவல்களை அந்தப் பக்கம் பரப்பிவிட்டு விளையாடுவது, நம்முடைய பலம் ஒன்று என்றால், அது நூறு, ஆயிரமாகத் தெரியும்படி மாயத் தோற்றங்களை உருவாக்கி மிரட்டுவது என்று யூதர்களின் உளவு பலம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருந்தது.
யூதர்களின் அதிர்ஷ்டம், இதுமாதிரி கில்லாடித்தனமான வேலைகளைச் செய்வதற்கு ஏகப்பட்ட இளைஞர்கள் முன்வந்தார்கள். உளவுப் பணியில் இருக்கும் ரகசியத்தன்மை, த்ரில் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அடிப்படை விஷயங்களை முனைப்புடன் கற்றுக் கொண்டார்கள், புதுசாக யோசித்து வித்தியாசமாகச் செயல்பட்டு யூதர்களுடைய உளவுத்துறையை `எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்'களாக மாற்றினார்கள்.
இந்த இளைஞர் படைதான், பின்னர் இஸ்ரேல் தேசத்துக்கும், அதன் உளவுத்துறையாகிய மொஸாட்டுக்கும் பலமான அஸ்திவாரமாக அமைந்தது
kps 2009-10-15
முரண்டு பிடிக்கிறவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கு நிறைய உத்திகள் இருக்கின்றன. அன்பாகச் சொல்லலாம், ஆசை காட்டலாம், இரண்டுக்கும் பணியாவிட்டால், மிரட்டலாம், அடிக்கலாம், போதை ஊசி போட்டு அரை மயக்கத்தில் நிஜத்தைக் கக்கவைக்கலாம்.
ஆனால், இதெல்லாம் ஒன்றரையணா கிரிமினல்களிடம் பயன்படும். அடால்ஃப் ஐக்மென் மாதிரி அயோக்கிய சிகாமணி அத்தனை சுலபத்தில் மசிந்துவிடுவானா? ரஃபி எய்டனுக்குச் சந்தேகமாகவே இருந்தது.
ஆகவேதான், அவர் கொஞ்சம் வித்தியாசமான ஒரு வழியைப் பயன்படுத்தினார்: ஐக்மெனைத் தனிமையில் தள்ளிவிடுவது, அவரிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், மிரட்டாமல், அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயத்திலேயே அவரைக் குழப்பியடிப்பது, நடுங்கச்செய்வது, இப்படி அவருடைய மனத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் தகர்த்துவிட்டால், வேறு வழியில்லாமல் பார்ட்டி உளற ஆரம்பித்துவிடும்.
முந்தின நாள் இரவு ஐக்மெனைக் கடத்தியதுமுதல், இஸ்ரேல் உளவாளிகள் யாரும் அவரிடம் பேசவில்லை. `பல லட்சம் யூதர்களை இரக்கமற்றுக் கொன்று குவித்த நீசனே, உன்னை என்ன செய்கிறோம் பார்' என்று வீர வசனம் கிடையாது. `நீ செய்த அக்கிரமத்துக்கெல்லாம் தெய்வம் சரியான
ஆங்கிலத்தில் இதனை ‘Psychological Torture’என்று சொல்வார்கள். எப்பேர்ப்பட்ட வலுவான மனிதனையும், இப்படி அடுத்து என்ன என்று தெரியாதபடி தவிக்கவிட்டால் அவனுடைய மனமும் உடலும் சோர்ந்துபோய்விடும். அதன்பிறகு அவனைப் பேசவைப்பது சுலபம்.
ராத்திரி முழுக்கச் சங்கிலிகளில் கட்டிப் போடப்பட்டிருந்த ஐக்மெனை, மறுநாள் காலை வெளியே கொண்டுவந்தார்கள். அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டார்கள், `உன் பேர் என்ன?'
`ரிகார்டோ க்ளெமென்ட்.'
`அது இப்போ நீ வெச்சுகிட்ட பேர், அதுக்கு முன்னாடி?'
சட்டென்று பதில் வந்தது, `அடால்ஃப் ஐக்மென்.'
அவ்வளவுதான். மறுபடியும் அவர், அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டார்.
அடுத்த ஒரு வாரத்துக்கு, அந்த வீட்டில் இருந்த யாரும் ஐக்மெனுடன் பேசவில்லை. வேளாவேளைக்குச் சாப்பாடு தருவார்கள், வேறு ஏதாவது கேட்டால் கொண்டுவருவார்கள். ம
காரணம், அவர்களுடைய கடமை இன்னும் முடியவில்லை. அடால்ஃப் ஐக்மெனைக் கடத்தினால்மட்டும் போதாது, அர்ஜென்டினா போலீஸுக்கோ, அரசாங்கத்துக்கோ தெரியாதபடி அவரைப் பத்திரமாக இஸ்ரேலுக்குக் கொண்டுசெல்ல வேண்டும், நீதிமன்றத்தின்முன் நிறுத்த வேண்டும்.
சென்னையில் இருக்கிற ஒருவரை மதுரைக்குக் கடத்தவேண்டுமென்றால், ஒரு வண்டி போதும். ஆனால் அதே பார்ட்டியை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் ரொம்பக் கஷ்டம். பாஸ்போர்ட், விசா, இன்னும் என்னென்னவோ ஆவணங்கள் தேவைப்படும், ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
மொஸாட் இதுமாதிரியான காகிதச் சடங்குகளில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அடால்ஃப் ஐக்மெனை அவர்கள் பிடித்துவைத்திருக்கிற விஷயம் தெரிந்தால், உடனடியாக அர்ஜென்டினா அரசாங்கம் உஷாராகிவிடும். அங்கிருந்து காக்கா, குருவிகூட வெளியே பறக்கமுடியாதபடி வேலி போட்டுவிடுவார்கள்.
ஆனால், இந்தக் கடத்தலைப்பற்றி ஆயிரம் விஷயம் யோசித்த மொஸாட், இதைமட்டும் விட்டுவைப்பார்களா? அதற்கும் கச்சிதமாக ஒரு திட்டம் உருவாக்கியிருந்தார்கள்.
அடால்ஃப் ஐக்மென் கடத்தப்பட்டு பத்து நாள் கழித்து, அவருக்கு ஒரு புதிய ஆடை அணிவிக்கப்பட்டது: விமான அதிகாரி யூனிஃபார்ம்!
இந்தப் பத்து நாட்களுக்குள், ஐக்மென் மனதளவில் ரொம்பத் தளர்ந்திருந்தார். தப்பிக்கமுடியும் என்கிற நம்பிக்கை சுத்தமாக மறைந்திருந்தது. தன்னைக் கடத்தியவர்கள் எது சொன்னாலும் மறுபேச்சு இல்லாமல் ஒத்துழைக்க ஆரம்பித்திருந்தார்.
அடால்ஃப் ஐக்மென் விமான அதிகாரி சீருடையை அணிந்துகொண்டதும், அடுத்த ஸ்பெஷல் ஐட்டம் வந்தது: ஒரு பாட்டில் விஸ்கி!
யூனிஃபார்ம் சரி, விஸ்கி எதற்கு? ஒருவேளை, விஸ்கியில் விஷம் கலந்திருக்குமோ?
யாரும் பதில் சொல்லவில்லை, `பேசாமல் குடி' என்றுமட்டும் சைகை காட்டினார்கள்.
ஏதோ, இந்தமட்டும் புண்ணியவான்கள் அடி, உதை கொடுக்காமல் இலவசமாகச் சரக்கு ஊற்றித் தருகிறார்கள். நாளைக்கு இஸ்ரேல் போனபிறகு உடம்பில் உயிர் இருக்குமோ இருக்காதோ தெரியவில்லை, சாகிற நேரத்தில் இந்தச் சந்தோஷமாவது மிஞ்சட்டுமே. மொத்தத்தையும் குடித்துமுடித்தார் ஐக்மென்.
அவர் போதையில் கண் செருகிக்கொண்டிருக்கும்போது, மொஸாட் ஏஜெண்ட்களும் அதே மாதிரியான விமான அதிகாரி யூனிஃபார்ம்களை அணிந்துகொண்டார்கள். விஸ்கி பாட்டிலைத் திறந்து, பன்னீர்போல தாராளமாக மேலே தெளித்துக்கொண்டார்கள்.
இப்போது, அவர்கள் எல்லோர்மீதும் காத்திரமான விஸ்கி வாடை. திருப்தியாகத் தலையாட்டினார் ரஃபி எய்டன்.
சில நிமிடங்கள் கழித்து, அவர்களுடைய கார் விமான நிலையத்துக்குள் நுழைந்தது. பாதுகாப்புப் பரிசோதனைக்காக வண்டியை நெருங்கிய காவலர்கள், சட்டென்று மூக்கைப் பொத்திக்கொண்டார்கள். `இதென்ன காரா, இல்லை சாராய வண்டியா?'
`ஸாரி, இன்னிக்குக் கொஞ்சம் ஜாஸ்தி ஊத்திக்கிட்டோம்' என்றார் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர். `உங்க ஊர் விஸ்கி ரொம்ப ஸ்ட்ராங்க், எங்களால தாங்கமுடியலை.'
இதைக் கேட்டதும், அந்த ஊர்க் காவலர்கள் பெருமையுடன் சிரித்தார்கள். `பின்னே? அர்ஜென்டினா சரக்குன்னா சும்மாவா?'
இந்தக் களேபரத்தில், அவர்கள் யாரும் அடால்ஃப் ஐக்மெனைக் கவனிக்கவில்லை. `இனிமேலாவது கொஞ்சம் பார்த்துக் குடிங்கப்பா' என்று பொதுவாக அட்வைஸ் பண்ணி வழியனுப்பிவிட்டார்கள்.
உள்ளே ஐக்மெனுக்காக ஓர் இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் விமானம் காத்திருந்தது. அரை மயக்க நிலையிலேயே அவரை மேலே ஏற்றி யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைத்துவிட்டார்கள்.
அப்போதும், மொஸாட் ஏஜெண்ட்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை. எந்த நேரத்தில் மறுபடி போலீஸ் வருமோ என்று கொஞ்சம் திகிலோடுதான் உட்கார்ந்திருந்தார்கள்.
ஆனால், அவர்கள் நினைத்ததுபோல் எந்த திடீர்ப் பரிசோதனையும் நடக்கவில்லை. விஸ்கி நாடகம் பிரமாத மாக வேலை செய்திருந்தது.
சிறிது நேரத்தில், அவர்களுடைய விமானம் புறப்பட்டது. பல வாரங்களுக்குப் பிறகு முதல்முறையாக மொஸாட் ஏஜெண்ட்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
இரண்டு நாள் கழித்து, இஸ்ரேல் பிரதமர் டேவிட் பென்குரியன் அந்த நாட்டுப் பாராளுமன்றத்தில் பெருமையுடன் அறிவித்தார், `நாங்கள் அடால்ஃப் ஐக்மெனைக் கைது செய்துவிட்டோம்.'
ஹிட்லர் காலத்துக்குப் பிறகு காணாமலே போய்விட்ட ஐக்மெனை மறுபடி கண்டுபிடித்துக் கைது செய்தது பெரிய விஷயம்தான். ஆனால், அதற்காக மொஸாட் நடத்திய கடத்தல் நாடகமெல்லாம் வெளியே தெரிந்தபோது, அது பெரிய பிரச்னையாகிவிட்டது.
உடனடியாக, அர்ஜென்டினா அரசாங்கம் பெரிய எழுத்துகளில் அலறியது, `இது மனித உரிமை மீறல். எங்கள் எல்லைக்குள் வந்து, எங்கள் நாட்டுக் குடிமகன் ஒருவரைக் கடத்தியிருக்கிறீர்கள். ஒழுங்காக ஐக்மெனைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.'
`ம்ஹூம், சான்ஸே இல்லை' என்றது இஸ்ரேல் அரசாங்கம். `அவர்மீது முறைப்படி வழக்கு நடத்துகிறோம். ஐக்மென் தப்புச் செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால், அதற்கு ஏற்ப தண்டனை கொடுப்போம்.'
சொன்னபடி, அடால்ஃப் ஐக்மெனை நீதிமன்றத்தின்முன் நிறுத்தியது இஸ்ரேல். அவரை ஒரு குண்டு துளைக்காத கூண்டுக்குள் பத்திரமாக உட்காரவைத்துவிட்டு, ஹிட்லர் ஆட்சியின்கீழ் அவர் செய்த அக்கிரமங்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் புட்டுப்புட்டு வைத்தார்கள்.
சென்ற நூற்றாண்டின் மிகப் பிரபலமான வழக்குகளில் ஒன்று அது. லட்சக்கணக்கான அப்பாவி யூதர்களுக்கு ஐக்மென் செய்த கொடுமைகளெல்லாம் வெளியே தெரிந்தபோது, `இப்படியெல்லாம்கூட ஒரு மனிதனால் கொடூரமாக யோசிக்க முடியுமா' என்று உறைந்துபோனது உலகம்.
அடால்ஃப் ஐக்மென் எதையும் மறுக்கவில்லை. ஆனால், `இதெல்லாம் நான் விரும்பிச் செய்தது இல்லை, யாரோ அதிகாரிகள் சொன்னார்கள், நான் நிறைவேற்றினேன், அவ்வளவுதான்' என்று கதையைத் திருப்பிப்போட்டார்.
ஆனால், இந்தக் கடைசி நேர நாடகம் பலிக்கவில்லை. பல லட்சம் யூதர்களின் மரணத்துக்கு அடால்ஃப் ஐக்மென் நேரடிக் காரணமாக இருந்திருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. நீதிபதிகள் அவருக்கு மரண தண்டனை விதித்தார்கள்.
ஐக்மென் கடத்தல் விவகாரத்துக்குப் பிறகு உளவுத்துறையினர் மத்தியில் மொஸாட்டின் இமேஜ் கன்னாபின்னாவென்று எகிறிவிட்டது. பின்னே? தங்களுக்கு முன்பின் பரிச்சயமே இல்லாத ஒரு வெளிநாட்டுக்குப் போய், ரகசியமாக ஒரு நபரைக் கடத்திக் கொண்டுவருவது என்றால் சாதாரண விஷயமா? இன்றைக்கு அர்ஜென்டினா அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவியவர்கள், நாளைக்கு இன்னும் எங்கெங்கே என்னென்னவெல்லாம் செய்வார்களோ? பல நாடுகள் மொஸாட்டைப் பிரம்மிப்புடனும், கொஞ்சம் பயத்துடனும் பார்க்க ஆரம்பித்தார்கள்.
(தொடரும்)
11kps 11.10.09
| 11.10.09 தொடர்கள் |
| ரஃபி எய்டன் கடிகாரத்தைப் பார்த்தார், மணி 8.05. அந்தத் தெரு நன்றாக இருட்டியிருந்தது, அக்கம்பக்கத்தில் வீடுகள், மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. ரஃபி உட்கார்ந்திருந்த கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. தெருவின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக மாறிமாறி கல்யாண ஊர்வலம். தெரு முனையில் ஒரு பஸ் ஸ்டாப். காரில் இருந்த எல்லோரும் அங்கே ஒரு கண்ணைப் பதித்து வைத்திருந்தார்கள். சில நிமிடங்கள் கழித்து, தூரத்தில் இரண்டு வெளிச்சப் பொட்டுகள் தெரிந்தன. அவை கொஞ்சம்கொஞ்சமாகப் பெரிதானதும், ஒரு பஸ் வருவது புரிந்தது. சட்டென்று ரஃபி எய்டனின் உடல் சிலிர்த்துக் கொண்டது. வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்குகிறவர்களைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். ம்ஹூம், இந்த பஸ்ஸிலும் ஐக்மென் இல்லை! என்ன ஆச்சு? வழக்கமாக இந்த நேரத்துக்கு வீடு திரும்பிவிடுவாரே, இன்றைக்கு ஏன் லேட்? ஒருவேளை, விஷயம் வெளியே கசிந்திருக்குமோ? யாராவது ஐக்மெனை உஷார்படுத்தித் தப்பிக்க வைத்துவிட்டார்களா? ம்ஹூம், சான்ஸே இல்லை. இந்தக் கடத்தல் விவகாரத்தில் மொஸாட் மிகக் கவனமாகக் காய்களை நகர்த்தியிருந்தது. வெளியாட்கள் யாருக்கும் திட்டம் தெரிந்துவிடாதபடி கச்சிதமாக வேலைகள் நடந்திருந்தன. பத்து நாள் முன்பாகத்தான், ரஃபி எய்டன், அவருடைய சிறப்புக் குழுவினர் ரஃபி எய்டன் வருவதற்குமுன்பாகவே, கடத்தல் திட்டத்துக்காக நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஏழு வீடுகள் வளைத்துப்போடப்பட்டிருந்தன, கூடவே ஒரு டஜன் கார்களும். ஒற்றை ஆளைக் கடத்துவதற்கு இத்தனை வீடுகள், கார்கள் எதற்கு? அடால்ஃப் ஐக்மென் இப்போது இஸ்ரேலில் இருந்தால் பிரச்னையே இல்லை, மொஸாட் ஏஜெண்ட்கள் ஷேர் ஆட்டோவில்கூடப் புறப்பட்டுப்போய் கோழி அமுக்குவதுபோல் அள்ளிக் கொண்டு வந்துவிடலாம், யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இது வெளிநாடு. அதுவும் ஹிட்லரின் முன்னாள் கூட்டாளிகளுக்கு ஆதரவு தரக்கூடிய நாடு. இங்கே ஓர் அன்னிய உளவுத்துறை ஐக்மென்மேல் கை வைப்பது தெரிந்தால், ரஃபி எய்டனும் மற்ற மொஸாட் ஏஜெண்ட்களும் வாழ்நாள் முழுக்க ஜெயிலில் களி தின்ன வேண்டியதுதான். எல்லை மீறிய சில்மிஷம் என்று எல்லோரையும் தூக்கில் போட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதனால்தான், மொஸாட் இந்த விஷயத்தில் ரிஸ்க்கே எடுக்கவில்லை. ஏழெட்டு வீடுகள், நிறைய கார்கள் என்று பிடித்துப் போட்டால் கடத்தலுக்கு வசதி. ஒரு வீட்டில் ஏதாவது பிரச்னையாகி போலீஸ் ரெய்டு வந்தால்கூட, சட்டென்று தப்பிக்கலாம், ஐக்மெனை வேறு எங்கேயாவது ஒளித்து வைக்கலாம். ஒருவேளை, அர்ஜென்டினா போலீஸ்காரர்கள் ஓவர்டைமில் வேலை செய்து எல்லா மொஸாட் வீடுகளையும் சுற்றி வளைத்துவிட்டால்? `அப்படி ஒரு நிலைமை வந்தால், ஐக்மெனை நானே என் கையால கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுவேன்' என்றார் ரஃபி எய்டன். `அறுபது லட்சம் யூதர்களைக் கொன்ன அயோக்கியனுக்காக, நான் ஒருத்தன் தூக்குல தொங்கினால் பரவாயில்லை.' ரஃபி எய்டன் முன்னாள் ராணுவ வீரர். அங்கேயும், அவர் துப்பாக்கி தூக்கிச் சண்டை போட்டதைவிட, ரகசிய உளவுப் பணிகளில் ஈடுபட்டு எதிரிகளுக்கு வேட்டு வைத்ததுதான் அதிகம். இஸ்ரேல் தேசம் உருவானபிறகு, அதன் உளவுத்துறைக்கு நிறைய திறமைசாலி இளைஞர்கள் தேவைப்பட்டார்கள். அப்படி இழுக்கப்பட்டவர்தான் ரஃபி எய்டன். உண்மையில், ரஃபி எய்டன் மொஸாட் ஏஜெண்ட் இல்லை, `ஷபக்' எனப்படும் இஸ்ரேலிய உள்நாட்டு உளவுத்துறையில் முக்கியப் பொறுப்பு வகித்துக் கொண்டிருந்தவர். `ஷபக்'கா? இது என்ன புதுக்கதை? மொஸாட் இருக்க ஷபக் எதற்கு? இது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம்தான். பெரும்பாலானோர் உள் விவகாரங்களுக்கு, வெளி விவகாரங்களுக்கு எனத் தனித்தனி உளவுத்துறைகளை வைத்திருப்பார்கள். உதாரணமாக, அமெரிக்காவின் `உள்' உளவுத்துறை FBI, `வெளி' உளவுத்துறை CIA. அதுபோல, இஸ்ரேலில் ஷபக், மொஸாட்! 'மொஸாட்' போலவே, `ஷபக்'கும் செல்லப் பெயர்தான். முழு வடிவம்:'Sherut haBitachon haKlali , ஹீப்ரு மொழியில் இதன் அர்த்தம், பொதுப் பாதுகாப்புச் சேவை. 'பாதுகாப்பு' என்று சொன்னாலும், ஷபக் ஏஜெண்ட்களின் முக்கியமான வேலை, உள்ளூரில் வம்பு பண்ணக்கூடிய நபர்களை கவனிப்பது. இவர்களுடைய தினசரி நடவடிக்கைகள் என்னென்ன, சந்தேகத்துக்கு இடமாக ஏதாவது ரகசிய சில்மிஷங்கள் செய்கிறார்களா, யார் யாரெல்லாம் இவர்களுக்குக் கூட்டாளிகள் என்று கவனித்து ரிப்போர்ட் எழுதுவது. இதோடு ஒப்பிடும்போது, மொஸாட்டின் எல்லைகள் மிகவும் பரந்து விரிந்தவை. இஸ்ரேலுக்கு வெளியிலிருந்து வருகிற விவகாரங்களைக் கவனிப்பது, தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், அதிரடி சட்டப்படி பார்த்தால், ஒரு நாட்டின் உள், வெளி உளவுத்துறைகளின் பொறுப்புகள் முற்றிலும் வேறுபட்டவை. ஒன்றுடன் ஒன்று குறுக்கிடவே கூடாது. ஆனால், எதார்த்தத்தில் அப்படி இருக்காது. அவ்வப்போது இந்த இரண்டு குழுக்களும் சேர்ந்து செயல்பட்டால்தான் எதிர் நடவடிக்கைகளை முறியடிக்க முடியும். இப்படித்தான், ஷபக்கைச் சேர்ந்த ரஃபி எய்டன் மொஸாட் ஏஜெண்ட்களுடன் பழக ஆரம்பித்தார். மொஸாட் மேலதிகாரிகள் அவருடைய திறமையை கவனித்துக் குறித்துக் கொண்டார்கள். இந்த நேரத்தில், அடால்ஃப் ஐக்மெனை கடத்துவதற்கான திட்டம் தயாரானது. ரகசியமான, ஆபத்தான இந்த வேலைக்குச் சரியான ஆளைத் தேடிக்கொண்டிருந்தது மொஸாட். உடனே, விஜயகாந்த் படங்களில் வருவதுபோல, `இதைச் செய்யறதுக்கு ஒரே ஒர்த்தராலதான் முடியும்' என்று யார் வசனம் பேசினார்களோ, ரஃபி எய்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து அர்ஜென்டினாவுக்கு அனுப்பி வைத்தார்கள். `சீஃப், அடுத்த பஸ்.' டிரைவரின் குரல் கேட்ட ரஃபி எய்டன் சிந்தனையிலிருந்து விடுபட்டார். மீண்டும் பேருந்து நிறுத்தத்தைக் கவனிக்க ஆரம்பித்தார். இந்தமுறை, அவருடைய உதடுகளில் சின்ன புன்னகை அரும்பியது, அடால்ஃப் ஐக்மென் பேருந்துப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார். ஒருகாலத்தில் லட்சக்கணக்கான யூதர்களுக்கு மரண சாசனம் எழுதிய ஐக்மென். இப்போது அவருடைய உடல் தளர்ந்திருந்தாலும், ரஃபி எய்டனுக்கு அவர்மேல் பரிதாபம் வரவில்லை. `எல்லாரும் ரெடியா?' `யெஸ் சீஃப்.' அடால்ஃப் ஐக்மென் நடக்க ஆரம்பித்தார். அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த மொஸாட் கார் லேசாக வேகம் பிடித்து உரசுவதுபோல் வந்து நின்றது. சட்டென்று கதவைத் திறந்துகொண்டு ஒருவர் இறங்கினார். ஐக்மெனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, ஒதுங்கிப் போக முயற்சி செய்தார். அதற்குள், காரிலிருந்து இறங்கியவர் நிற்க முடியாமல் தடுமாறினார். அவருடைய ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டது. ரஃபி எய்டனுக்கு டென்ஷன். எத்தனை மாதமாகக் கஷ்டப்பட்டுத் தயாரித்த திட்டம், இப்போது ஒரு சின்ன ஷூ லேஸ் பிரச்னையால் மொத்தமும் பாழாகிவிடுமோ? சட்டென்று கதவைத் திறந்துகொண்டு வெளியே பாய்ந்தார். இதற்குள், நடப்பதை ஓரளவு ஊகித்துக்கொண்டிருந்த ஐக்மென், விலகி ஓட முயன்றார், ஆனால் ரஃபி எய்டன் அவரைப் பாய்ந்து பிடித்துவிட்டார். அந்த வயதிலும், ஐக்மென் பலமாகத் திமிறினார். ஆனால் ரஃபியின் வெறித்தனமான உடும்புப் பிடியிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அதே நேரம் மொஸாட் குழுவிலிருந்து இன்னொருவரும் ஐக்மென்மேல் பாய, எல்லோரும் தெருவில் விழுந்து புரண்டார்கள். சில விநாடிகளில், ஐக்மென் காருக்குள் திணிக்கப்பட்டார். யாரோ அவர்மீது ஏறி உட்கார்ந்தார்கள், சத்தம் போடாதபடி வாயைப் பொத்தினார்கள், அவ்வளவு நேரம் தேர்போல ஊர்ந்துகொண்டிருந்த கார் வேகமாகச் சீற ஆரம்பித்தது. சிறிது நேரத்தில், அவர்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார்கள். அடால்ஃப் ஐக்மெனை உள்ளே தள்ளிய ரஃபி எய்டன், `டிரெஸ்ஸையெல்லாம் கழட்டு' என்று சைகையால் உத்தரவிட்டார். ஐக்மெனுக்கு என்ன நடக்கிறது என்று ஒருமாதிரியாக விளங்கியிருக்க வேண்டும். இனிமேல் தப்பிக்க முடியாது என்று புரிந்துகொண்டிருந்தவர் மறுபேச்சில்லாமல் உடைகளைக் கழற்றத் தொடங்கினார். நிர்வாணமாக நின்ற அடால்ஃப் ஐக்மெனின் உயரம், எடை, தலைச் சுற்றளவு, கை, கால் நீளங்கள், மற்ற விவரங்களைக் குறித்துக் கொண்டார் ரஃபி எய்டன். அவற்றைத் தன்னுடைய ஃபைலில் இருந்த அளவுகளுடன் ஒப்பிட்டார், எல்லாம் கச்சிதமாக இருந்தன. `என் அனுமதி இல்லாம யாரும் இந்த ரூமைத் திறக்கக்கூடாது' என்றார் ரஃபி எய்டன். `அந்தாள் ராத்திரி முழுக்கத் தனிமையில கண்டதையும் கற்பனை பண்ணிக் கவலைப்படணும், நாம எப்ப வருவோமோ, அடுத்து என்ன செய்வோமோன்னு யோசிச்சு நடுங்கணும், இனிமே நம்ம கதி அவ்ளோதான்னு எல்லா நம்பிக்கையையும் மொத்தமா இழக்கணும், அதுக்கப்புறமா, நம்ம வேலையை ஆரம்பிப்போம்.' |
10kps 2009-10-08
அவள் பெயர் சில்வியா, நல்ல அழகி.
சில்வியாவை ஓர் இளைஞன் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அவன் பெயர் க்ளாஸ்.
அழகான ஒரு பெண்ணைக் காதலிக்கிற பையன் என்ன செய்வான்? தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் விதவிதமாக அவளிடம் அளந்து விடுவான், ‘நாங்க இப்படியாக்கும், அப்படியாக்கும்’ என்று பெருமை அடித்துக்கொண்டு அவளை ஈர்க்க முயற்சி செய்வான்.
க்ளாஸ் இதையெல்லாம் ரொம்பச் சிரத்தையாகச் செய்தான். ‘அந்தக் காலத்தில, ஹிட்லர் படையில எங்க அப்பா பெரிய ஆள், தெரியுமா?’
சில்வியாவுக்கு இதிலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் இல்லை, ‘ஹிட்லரே போயாச்சு, அப்புறம் என்ன?’ என்று அலட்சியமாக இருந்துவிட்டாள்.
ஆனால், சில்வியாவின் தந்தை லோதர் ஹெர்மன் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது, அவருக்கு லேசாகச் சந்தேகம் எழுந்தது, ‘அந்தப் பையனோட முழுப் பெயர் என்ன?’ என்று விசாரித்தார்.
‘க்ளாஸ் ஐக்மென்.’
அந்தப் பெயரைக் கேட்ட லோதருக்கு, ஏதோ லேசாகப் பொறி தட்டியது. ஆனால், அது என்ன என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அப்போதைக்கு அந்த விஷயத்தை மறந்துவிட்டார்.
ஹிட்லரின் சித்திரவதை கேம்ப்களில் சிக்கிச் சிரமப்பட்டவர் லோதர் ஹெர்மன். அங்கே அனுபவித்த கொடுமைகளால், அவருக்குப் பார்வை பறிபோயிருந்தது.
அதனால்தான், க்ளாஸின் தந்தை ஒரு பழைய நாஜி என்பது தெரிந்ததும், லோதர் ஆர்வமாக விசாரித்தார். ஆனால் அப்போதும், ‘ஐக்மென்’ என்கிற பெயரை அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
கொஞ்ச நாள் கழித்து, லோதர் ஹெர்மன் எதேச்சையாக ஒரு பத்திரிகைச் செய்தியைப் படித்தார். அதில் அடால்ஃப் ஐக்மென், அவருடைய ரத்த வெறியாட்டத்தைப்பற்றி விரிவாக எழுதியிருந்தார்கள். கூடவே, ‘இப்போது அடால்ஃப் ஐக்மென் எங்கேயோ மறைந்து வாழ்கிறார்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
சட்டென்று லோதருக்கு ‘க்ளாஸ் ஐக்மென்’ என்கிற பெயர் ஞாபகம் வந்தது, ‘அந்தப் பையனுக்கும் இந்த அடால்ஃப் ஐக்மெனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?’
உடனடியாக, லோதர் தன் மகளை அழைத்தார், ‘க்ளாஸ்ன்னு ஒரு பையன் உன் பின்னாடி சுத்திக்கிட்டிருந்தானே, ஞாபகமிருக்கா?’
‘ஆமா, அவனுக்கு என்ன?’
‘அவனோட அப்பா பேர் என்ன? உனக்குத் தெரியுமா?’
சில்வியா கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னாள், ‘ரிகார்டோ க்ளெமென்ட்.’
லோதர் ஹெர்மன் புன்னகைத்துக்கொண்டார், ‘இது நிச்சயமாகப் பொய்ப் பெயர்தான்!’
பின்னே? இத்தனூண்டு தப்பு செய்த நாஜிக்களையெல்லாம் யூதர்கள் தேடிப் பிடித்துப் பழிவாங்கிக்கொண்டிருக்கும்போது, லட்சக்கணக்கான யூத இனத்தவர்களை மொத்தமாக அழித்த அடால்ஃப் ஐக்மெனை விட்டுவைப்பார்களா? அதனால்தான், இந்தக் கொலைகாரன் பெயரை மாற்றிக்கொண்டு ஒளிந்திருக்கிறான்! உடனடியாக, அடால்ஃப் ஐக்மெனைப்பற்றி இஸ்ரேலுக்குத் தகவல் அனுப்ப முடிவெடுத்தார் லோதர் ஹெர்மன். ஆனால் அதற்கு முன்னால், அந்த ஆள் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும்.
க்ளாஸ் பலமுறை சில்வியா வீட்டுக்கு வந்திருக்கிறான். ஆனால், சில்வியா ஒருமுறைகூட அவன் வீட்டுக்குப் போனதில்லை.
’நீங்க கவலைப்படாதீங்கப்பா, அவனோட அட்ரஸை நான் கண்டுபிடிக்கறேன்’ என்றாள் சில்வியா. சொன்னபடி எப்படியோ கஷ்டப்பட்டு க்ளாஸின் வீட்டைக் கண்டறிந்து கதவைத் தட்டிவிட்டாள்.
சில நிமிடங்கள் கழித்து, கதவு திறக்கப்பட்டது, சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் சில்வியாவைச் சந்தேகமாகப் பார்த்தார், ‘யாரும்மா நீ? உனக்கு என்ன வேணும்?’
‘க்ளாஸ் வீடு இதுதானே?’
‘ஆமா, ஆனா அவன் வெளியே போயிருக்கானே’
‘நீங்க?’
அவர் கொஞ்சம் தயங்கினார். பிறகு, ‘நான் க்ளாஸோட அப்பா’ என்றார்.
அவ்வளவுதான். அந்த நிமிடத்தில் அடால்ஃப் ஐக்மெனின் முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டது. என்னதான் பொய்ப் பெயரில் ஒளிந்து வாழ்ந்தாலும், தன்னுடைய மகனுடைய பெயரில் இருக்கும் ‘ஐக்மென்’ என்கிற ஒற்றை வார்த்தையை மறைக்காத சின்னத் தப்பு, அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டது.
உடனடியாக, இந்தத் தகவல் இஸ்ரேலுக்குப் பறந்தது, ’அடால்ஃப் ஐக்மென் இப்போது அர்ஜென்டினாவின் தலைநகரம் ப்யூனஸ் ஐரிஸில் இருக்கிறார், அவருடைய பொய்ப் பெயர் ரிகார்டோ க்ளெமென்ட், முகவரி...’
அப்புறம் என்ன? நேராக அர்ஜென்டினாவுக்குப் போய் ஐக்மென் சட்டையைப் பிடித்து இழுத்து வரவேண்டியதுதானே? ம்ஹூம், விஷயம் அத்தனை சுலபம் இல்லை, இதில் பல சர்வதேசச் சிக்கல்கள் இருக்கின்றன.
முதலில், இந்த ரிகார்டோ க்ளெமென்ட்தான் ஐக்மென் என்பதற்கு என்ன ஆதாரம்? யாரோ சொல்வதை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது, சாட்சி வேண்டும், அல்லது சம்பந்தப்பட்ட ஆளே தன்னை ஐக்மென் என்று ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்க வேண்டும்.
அப்போதும், அர்ஜென்டினாவில் வாழ்கிற ஒருவரை இஸ்ரேல் போலீஸோ, உளவுத்துறையோ கைது செய்ய முடியாது. அந்த நாட்டு அரசாங்கம் இதற்கு நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
எதற்கு இத்தனை வம்பு? பேசாமல் அந்த ஐக்மெனைச் சுட்டுத் தள்ளிவிட்டால் என்ன?
அடால்ஃப் ஐக்மென் செய்திருப்பது சாதாரணக் குற்றம் இல்லை. அதற்குத் தண்டனையாக அவரை வெறுமனே கொலை செய்தால் போதாது, நீதிமன்றத்தில் நிறுத்திவைத்து, செய்த தப்புகளையெல்லாம் ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும், அப்போதுதான் ஹிட்லர் ஆட்சியின் மிருகத்தனமான நடவடிக்கைகள், யூதர்கள் அனுபவித்த கொடுமைகளெல்லாம் உலகத்திற்குப் புரியும்.
சுருக்கமாகச் சொன்னால், நூலில் விழுந்த சேலையை எடுப்பதுபோல, மிகவும் கவனமாகச் செயல்படவேண்டிய விஷயம் இது. கொஞ்சம் சொதப்பினாலும் மொத்தமும் கிழிந்து நாசமாகிவிடும்.
உடனடியாக, இஸ்ரேல் அரசாங்கம் மொஸாட்டைக் கூப்பிட்டது, விஷயத்தைச் சொல்லி, அடால்ஃப் ஐக்மென் பற்றிய குறிப்புகளை ஒப்படைத்தார்கள்.
அப்போதைய மொஸாட் தலைவர் ஐஸர் ஹரேல். ஒரு மாலை நேரத்தில் ஐக்மென் ஃபைலைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார் அவர்.
அன்று ராத்திரி முழுக்க அவர் தூங்கவில்லை. அடால்ஃப் ஐக்மெனின் திருவிளையாடல்களை ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க, அவருக்கு இந்த வேட்டையின் முக்கியத்துவம் புரிந்தது.
மறுநாள் காலை, இஸ்ரேலின் பிரதமர் டேவிட் பென்குரியனைச் சந்தித்தார் ஐஸர் ஹரேல். இதுவரை கிடைத்திருக்கும் தகவல்கள், தனது திட்டத்தை விளக்கிச் சொன்னார், ‘அர்ஜென்டினாவில் இருக்கிற அடால்ஃப் ஐக்மெனை ரகசியமாக கைது செஞ்சு இஸ்ரேலுக்குக் கொண்டுவரணும், அதுக்கு உங்க அனுமதி வேணும் சார்.’
‘ஓகே’ என்றார் பிரதமர்.
உடனடியாக, ‘ஆபரேஷன் ஐக்மென்’ தொடங்கியது, மொஸாட்டின் மிகச் சிறந்த ஏஜென்ட்கள் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். அவர்கள் வெவ்வேறு பெயர்களில் அர்ஜென்டினாவுக்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விரைவில், மொஸாட் உளவாளிகள் அர்ஜென்டினாவின் தலைநகரமான ப்யூனஸ் ஐரிஸுக்கு வந்து சேர்ந்தார்கள். வெவ்வேறு வீடுகளில் தங்கிக்கொண்டு வேலைகளைத் தொடங்கினார்கள்.
முதலில், அடால்ஃப் ஐக்மெனின் வீடு, அலுவலகம், சுற்றுப்புறம் ஆகியவற்றைக் கண்காணித்துக் குறிப்பு எடுக்க வேண்டும், பிறகு அவர் தினந்தோறும் எத்தனை மணிக்கு ஆபீஸ் போகிறார், எப்படிப் போகிறார், எப்போது திரும்பி வருகிறார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும், மற்ற தினசரி நடவடிக்கைகளையும் இதேபோல் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும், பிறகு இந்தத் தகவல்களின் அடிப்படையில் எங்கே, எப்போது வலை விரித்தால் பட்சி சிக்கும் என்று கணக்குப் போடவேண்டும், இதுதான் ஃபார்முலா.
ஆனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிய மொஸாட் உளவாளிகளுக்கு, ஆரம்பத்திலேயே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களிடம் இருந்த முகவரிக்குச் சென்று பார்த்தால், அங்கே அடால்ஃப் ஐக்மெனையும் காணோம், ரிகார்டோ க்ளெமென்டையும் காணோம்!
என்ன ஆச்சு? மொஸாட் தன்னைத் தேடி வருகிறது என்று தெரிந்து கொண்டு ஐக்மென் உஷாராகிவிட்டாரா? வேறு எங்கேயாவது
தப்பித்துப் போய்விட்டாரா?
மொஸாட் ஏஜென்ட்கள் மெல்ல அக்கம்பக்கத்தில் விசாரித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நூலைப் பிடித்துக்கொண்டு போய் ரிகார்டோ க்ளெமென்டின் புதிய முகவரியைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
அதன்பிறகு, வழக்கமான கண்காணிப்புப் பணிகள் தொடங்கின. ரிகார்டோ க்ளெமென்டின் நிழல்போல ஏஜென்ட்கள் பின்தொடர்ந்து தகவல் திரட்டினார்கள். அவருடைய குத்துமதிப்பான உயரம், எடை, தோற்றம், மற்ற விவரங்களெல்லாம் சேகரிக்கப்பட்டன, நிறைய புகைப்படங்களையும் எடுத்தார்கள்.
இந்த ஏஜென்ட்கள் அனுப்பிவைத்த தகவல்கள் அனைத்தையும், மொஸாட் மேலிடம் அடால்ஃப் ஐக்மெனுடன் ஒப்பிட்டுப்பார்த்தது. இதன் அடிப்படையில் ரிகார்டோ க்ளெமென்ட்தான் அடால்ஃப் ஐக்மென் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.
ஆனால், இதை எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது? சரியாகத் தெரியாமல் யாரையோ கைது செய்து இஸ்ரேலுக்குக் கொண்டுசென்றுவிட்டால் மொஸாட்டுக்குப் பெரிய அவமானம் இல்லையா?
1960 மார்ச் 21_ம் தேதி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய ரிகார்டோ க்ளெமென்ட் கையில் ஒரு பூங்கொத்து. அதைத் தன்னுடைய மனைவிக்குக் கொடுத்தார் அவர். வீட்டில் எல்லோர் முகத்திலும் ஏகப்பட்ட சிரிப்பு, சந்தோஷம்.
இதைக் கவனித்த மொஸாட் ஏஜென்ட்கள், சட்டென்று ஐக்மென் ஃபைலைப் பிரித்தார்கள், பரபரப்பாகத் தேடினார்கள்.
மார்ச் 21: அடால்ஃப் ஐக்மென் திருமண நாள்!
இந்த ஆதாரம் போதுமே. ரிகார்டோ க்ளெமென்ட் என்கிற அடால்ஃப் ஐக்மெனைக் கடத்த நாள் குறித்துவிட்டது மொஸாட்.
kps 04.10.09
சென்ற நூற்றாண்டின் மிகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்று, அடால்ஃப் ஹிட்லரின் நாஜிப் படைகள் யூதர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த இனப் படுகொலை.
அப்போது யூதர்களுக்குத் தனி தேசம் எதுவும் இல்லை. உலகம் முழுக்க, குறிப்பாக ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் பரவியிருந்தார்கள்.
ஏனோ, இது ஹிட்லரின் கண்களை உறுத்தியது. யூதர்கள் அழித்து ஒழிக்கப்படவேண்டியவர்கள் என்று முடிவெடுத்துவிட்டார்.
இதனால், ஹிட்லர் ஆட்சியின்கீழ் வந்த ஒவ்வொரு தேசத்திலும் யூதர்கள் வேட்டையாடப்பட்டார்கள், சித்திரவதை கேம்ப்களில் அவர்கள் உடலும் மனமும் நரக அவஸ்தையை அனுபவித்தது. தினமும் இத்தனை ஆயிரம் யூதர்களைக் கொல்ல வேண்டும் என்று கணக்கு வைத்துக்கொண்டு செயல்பட்டது நாஜிப் படை.
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் அடால்ஃப் ஹிட்லர்தான் சூத்திரதாரி. ஆனால், அவருக்குக் கீழிருந்த அடுத்த கட்டத் தலைவர்கள், ஜூனியர் அடிப்பொடிகளும்கூட இந்த விஷயத்தில் ஹிட்லருக்கு இணையான கொடூரர்களாக இருந்தார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பு(?) இல்லாமல், ஹிட்லரால் இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் இத்தனை லட்சம் யூதர்களைக் கொன்று தீர்த்திருக்க முடியாது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், அவருடைய சிஷ்யப் பிள்ளைகள்?
சிலர், ஹிட்லரின் வழியைப் பின்பற்றித் துப்பாக்கி அல்லது சயனைட் உதவியுடன் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்னும் சிலர் எதிரிப் படையினரிடம் சிக்கினார்கள். மற்றவர்கள் தப்பித்து ஓடி காணாமல் போனார்கள்.
யுத்தத்துக்குப் பிறகு, ஒட்டுமொத்த உலகமும் அமைதியைத் தேடிக்கொண்டிருந்த நேரம். யூதர்களின் மனம் மட்டும் ஆறவில்லை.
'ஐயா பெரியவர்களே, நீங்களெல்லாம் நிலம் இழந்தீர்கள், அல்லது பணம் இழந்தீர்கள், அல்லது பதவி இழந்தீர்கள். நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிர்க்கதியாக நிற்கிறோம். இந்தக் கொடுமைகளுக்குப் பழிவாங்காமல் விடமாட்டோம்.'
ஆனால், இனிமேல் யாரைப் பழிவாங்க முடியும்? ஹிட்லர்தான் மேலே போய்ச் சேர்ந்துவிட்டாரே!
அதனால் என்ன? ஹிட்லருக்குச் சமமாக, அல்லது அவரைவிட ஒரு படி மேலே போய் யூதர்கள்மேல் இரக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட கொடுமைக்காரர்கள் பலர் இன்னும் உயிரோடுதானே இருக்கிறார்கள்? அவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டனை கொடுப்போம்!
இப்படிச் சொன்ன யூதர்கள், தங்களுக்கு `நாக்மின்' என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள். இதன் அர்த்தம், `பழிவாங்குபவர்கள்!'
நாக்மின் என்பது, யாரும் அதிகாரபூர்வமாக ரிப்பன் வெட்டித் தொடங்கிவைத்த அமைப்பு இல்லை. ஹிட்லர் படைகளின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட யூதர்கள் பலர் தாங்களே ஒருங்கிணைந்து இந்த ரகசிய இயக்கத்தை உருவாக்கினார்கள்.
ஒருவிதத்தில், யூதர்களின் முதல் உளவுத்துறை அதுதான். முன்பு ஹிட்லருக்குக் கீழே பணிபுரிந்த முக்கியப் புள்ளிகளில் யார் யார் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்று முதலில் பட்டியல் போட்டார்கள். அதன்பிறகு, அவர்கள் இப்போது எங்கே, என்ன வேஷத்தில் ஒளிந்திருக்கிறார்கள் என்பதைக் கவனமாகத் துப்புத்துலக்க ஆரம்பித்தார்கள்.
அடுத்தபடியாக, இந்த முன்னாள் நாஜிக்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடங்கின. சிலரைக் காட்டிக்கொடுத்துக் கைது செய்து உள்ளே தள்ளினார்கள். இன்னும் சிலரை நேரடியாகக் கொலை செய்து முடித்துவைத்தார்கள். இதற்கெல்லாம் அவர்கள் யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்கவில்லை.
இந்தக் காலகட்டத்தில்தான், யூதர்களுக்கான தனி நாடு (இஸ்ரேல்) உருவாகியிருந்தது. அவர்களுக்குப் பல அரசியல் பிரச்னைகள், எல்லைக் குளறுபடிகள், மற்ற தலைவலிகள், இதையெல்லாம் ஒருவழியாக ஒழுங்கு செய்வதற்குள் இஸ்ரேல் ஆட்சியாளர்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது.
இப்படி இஸ்ரேல் தனது 'ஸ்டார்ட்டிங் ட்ரபுள்'களைச் சமாளிக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம், `நாக்மின்'களிடமிருந்து தப்பிய முன்னாள் நாஜிப் படையினர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆங்காங்கே செட்டிலாகியிருந்தார்கள். பொய்ப் பெயர்தான், டுபாக்கூர் அடையாளங்கள்தான், ஆனால் யாருடைய தொந்தரவும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை, போதுமே!
1954-ம் வருடம், இஸ்ரேலுக்கு ஒரு தகவல் கிடைத்தது, `அந்த அழுக்குப் பன்றி, இப்போது அர்ஜென்டினாவில் இருக்கிறது.'
இங்கே `அழுக்குப் பன்றி' என்று குறிப்பிடப்படுபவர், ஒரு முன்னாள் நாஜி, அவர் பெயர் அடால்ஃப் ஐக்மென்.
ஜெர்மனியில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஐக்மென், சின்ன வயதிலேயே தாயை இழந்துவிட்டார். அதன்பிறகு, அவரது குடும்பம் ஆஸ்திரியாவுக்குக் குடிபெயர்ந்தது.
ஐக்மெனுக்குப் படிப்பு ஏறவில்லை. பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு வேலைக்குப் போனார், அதுவும் சரிப்படவில்லை.
இதனால், ஐக்மென் தாழ்வு மனப்பான்மையில் மூழ்கினார். எப்படியாவது, ஏதாவது ஒரு விஷயத்தில் தன் திறமையை நிரூபித்துவிடவேண்டும் என்று துடித்தார்.
கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான், ஹிட்லர் ஐரோப்பா முழுக்கப் பிரபலமாக ஆரம்பித்தார். அவர் ஹீரோவா, வில்லனா என்று புரியாமல் குழம்பியது உலகம்.
அடால்ஃப் ஐக்மெனுக்கு ஹிட்லரைப் பிடித்திருந்தது. அவரையே தனது ஆதர்சமாக ஏற்றுக்கொண்டு, நாஜிக் கட்சியில் இணைந்துவிட்டார்.
`கட்சி' என்றால், பொதுக்குழு, செயற்குழு, தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகி ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் கிடையாது. ஹிட்லர் இன்னும் பெரிய திட்டங்கள் வைத்திருந்தார். அவற்றை நிறைவேற்றுவதற் கான ஒரு படையைத் திரட்டிக்கொண்டிருந்தார்.
இந்தப் படையில், அடால்ஃப் ஐக்மெனுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, யூதர்களை வெளியேற்றுவது!
ஏதோ காரணத்தால், தன் ராஜ்ஜியத்தில் யூதர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார் ஹிட்லர். ஜெர்மனியில் மட்டுமில்லை, அவர் எங்கெல்லாம் கால் பதிக்கிறாரோ, அங்கெல்லாம் களை பிடுங்குவதுபோல் யூதர்கள் பிய்த்து எறியப்பட்டார்கள்.
ஆரம்பத்தில், ஹிட்லர் படையினர் கொலை ஆயுதத்தைக் கையில் எடுக்கவில்லை. யூதர்களை ஜஸ்ட் வெளியே துரத்தினார்கள், `எங்கேயாவது போய்விடுங்கள், எப்படியாவது பிழைத்துக் கொள்ளுங்கள், ஹிட்லர் கண்ணில்மட்டும் பட்டுவிடாதீர்கள்.'
அடால்ஃப் ஐக்மென் யோசித்தார், `இப்போது இந்த யூதர்களெல்லாம் எங்கே போவார்கள்? அவர்கள் எங்கே தஞ்சம் புகுந்தாலும், சீக்கிரத்தில் ஹிட்லர் அந்த தேசத்தையும் ஆக்கிரமித்துவிடுவார். அதன்பிறகு மீண்டும் யூதர்களை அங்கிருந்து துரத்தவேண்டும். அநாவசியத் தொல்லை.'
இந்தத் தொந்தரவுக்குப் பதிலாக, யூதர்களை மொத்தமாக அழித்துவிடலாம்' என்றார் ஐக்மென், இந்தத் திட்டத்துக்கு அவர் சூட்டிய பெயர், `கடைசித் தீர்வு.'
ஐக்மெனின் யோசனைக்கு, சீனியர் நாஜிக்களின் அனுமதி உடனடியாகக் கிடைத்துவிட்டது. மளமளவென்று இதனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
அதன்பிறகு நிகழ்ந்ததுதான் உச்சகட்டக் கொடுமை. ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்று வித்தியாசமே பார்க்காமல் யூதர்கள் உடனுக்குடன் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.
யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரு காரணம் போதும், விசாரணை எதுவும் கிடையாது. உடனடித் தண்டனை மட்டுமே.
ஆனால், இப்படி ஸ்லோமோஷனில் ஒவ்வொருவராகச் சுட்டுக்கொண்டிருந்தால், ஒட்டுமொத்த யூதர்களையும் காலி செய்வதற்குப் பல வருஷம் ஆகும். அதுவரை யாரால் காத்திருக்க முடியும்?
அடால்ஃப் ஐக்மெனுக்கு அவசரம். மிக விரைவில் யூதர்களை `முடித்து'விட்டு ஹிட்லர் கையால் மெடல் வாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார்.
இதனால், குறைந்த நேரத்தில் அதிக யூதர்களைக் கொல்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தார் ஐக்மென். அவருடைய குரூர மனத்தில் ஏகப்பட்ட புதிய உத்திகள் தோன்றின.
உடனடியாக, ஹிட்லர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு தேசத்திலும், யூதக் கைதிகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். அவர்களை ரயிலில் மாடுகளை அடைப்பதுபோல் திணித்துவைத்துச் சித்திரவதை கேம்ப்களுக்குக் கொண்டு சென்றார்கள்.
கொடுமையான இந்தப் பயணத்திலேயே பல யூதர்கள் இறந்து போனார்கள். மிச்சமிருந்தவர்களுக்கு வெந்நீர்த் தொட்டிகள், விஷ வாயு அறைகள், நெருப்புக் குளியல் என்று பலவிதமான தண்டனைகள் காத்திருந்தன.
இப்படி அடால்ஃப் ஐக்மெனின் உத்தரவால் உயிர் இழந்த யூதர்களின் எண்ணிக்கை, ஐந்தாயிரம், பத்தாயிரம் இல்லை, அரைக் கோடிக்குமேல்!
`லட்சக்கணக்கில அப்பாவி யூதர்களைக் கொல்றீங்களே, இதுபத்தி உங்களுக்குக் கவலையோ, வருத்தமோ, குற்றவுணர்ச்சியோ இல்லையா?' யாரோ ஐக்மெனிடம் கேட்டார்கள், `நாளைக்கு ஒருவேளை ஹிட்லர் தோத்துப்போயிட்டா, இந்தக் கொலைக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல வேண்டியிருக்குமே?'
அடால்ஃப் ஐக்மென் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், `நூறு பேர் இறந்துபோனா, அது சம்பவம். ஆனா, லட்சம் பேர் இறந்தா, வெறும் புள்ளிவிவரம், அவ்ளோதான்!'
ஹிட்லருக்கு இணையான ரத்த வேட்கை கொண்டவர் ஐக்மென். யூதர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. ஆனாலும் அவரது கண்ணசைவில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.
இதனால், போருக்குப்பிறகு உயிர் தப்பிய நாஜிக்களில் யூதர்களின் நம்பர் ஒன் விரோதி என்றால், அடால்ஃப் ஐக்மென்தான். அவருடைய கொலைவெறியுடன் ஒப்பிடும்போது, மற்ற நாஜிக்களின் குற்றங்களெல்லாம் சாதாரண `பிக்பாக்கெட்' ரகத்தில் அடங்கிவிடும்.
ஆனால், ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு ஐக்மென் எங்கே போனார் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. `நாக்மின்'களின் வேட்டையிலும் அவர் அகப்படவில்லை.
இதனால், அடுத்த பல வருடங்களுக்கு எல்லோரும் ஐக்மெனைப் பற்றி கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார்கள். அந்த நேரத்தில்தான், இந்தக் கடிதத்தின்மூலம் `அழுக்குப் பன்றி' வெளியே வந்தது.
உடனடியாக, இஸ்ரேல் அரசாங்கம், உளவுத்துறை அடால்ஃப் ஐக்மென் ஃபைலைத் தூசு தட்டி எடுத்தது. அவரை என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.
kps 01.10.09
லில்லிஹாமர் சொதப்பல்கள் நடந்து முழுசாக ஐந்து வருடமாகிவிட்டது!
இந்த இடைவெளிக்குள், இஸ்ரேலில் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள். இரண்டு பிரதம மந்திரிகள் மாறிவிட்டார்கள். அந்த நாட்டு அரசாங்கத்திலும் சரி, மொஸாட்டிலும் சரி, பழைய `சக்தி'கள் ரிடையராகி, பல புதியவர்கள் தலை தூக்கியிருந்தார்கள்.
ஆனால், இஸ்ரேல் இன்னும் அபுஹாஸனை மறந்திருக்கவில்லை. வெளிப் பார்வைக்கு மொஸாட் நல்ல பிள்ளைபோல் சமர்த்தாக உட்கார்ந்திருந்தாலும், பின்னணியில் தகவல்கள் திரட்டுவது, அலசுவது, திட்டம் தயார் செய்வது, அப்புறம் மொத்தத்தையும் எச்சில் போட்டு அழித்துவிட்டு மறுபடி பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிப்பது என்று தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஐந்து ஆண்டுகளில் அபுஹாஸனும் நிறைய மாறியிருந்தார், ஒரு காலத்தில் ஹை க்ளாஸ் அடியாள்போல் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு திரிந்தவருக்கு, இப்போது அரசியல் வட்டாரங்களில் ஏகப்பட்ட செல்வாக்கு. அவர்தான் யாசிர் அராஃபத்துக்கு அடுத்த வாரிசு என்றெல்லாம் பேச்சு அடிபட்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் மட்டுமில்லை, அதற்கு வெளியிலும் அபுஹாஸனுக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வுக்கும், பாலஸ்தீனத் தலைவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அவர் இயங்கி வருகிறார் என்று வதந்தி.
1978-ம் வருடம், அபுஹாஸன் கல்யாணம் செய்துகொண்டார். அவருடைய புது மனைவி ஜார்ஜினா ரிஜ்க், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ்!
ஜார்ஜினாவுடன் ஹனிமூன் சென்ற அபுஹாஸன், விரைவில் பெய்ரூட் திரும்பிவிட்டார். லெபனான் நாட்டுத் தலைநகரமான இந்த ஊர்தான், இப்போது அவருடைய கோட்டை!
பெய்ரூட்டில் அபுஹாஸனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். அதைவிட அதிக எண்ணிக்கையில் நண்பிகள்!
கல்யாணமான பிறகும், அபுஹாஸன் தன்னுடைய பழைய `ப்ளேபாய்' வாழ்க்கையை மறந்துவிடவில்லை. ஒவ்வொரு நாளையும் ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்கிற கொள்கையுடன் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார்.
இதைக் கவனித்த அபுஹாஸனின் நண்பர்கள், அவரைக் கடுமையாக எச்சரித்தார்கள், `நீங்க உங்க இஷ்டம்போல விளையாடுங்க. வேணாம்ன்னு சொல்லலை. ஆனா, இப்படி அசட்டையா இருக்காதீங்க. அப்பப்போ உங்க பயணத் திட்டத்தை மாத்துங்க. ஒரே இடத்துக்கு டெய்லி போகாதீங்க. முன்பின் தெரியாதவங்ககிட்டே பழகாதீங்க. மொஸாட் இன்னும் உங்களைத் துரத்திக்கிட்டுத்தான் இருக்கு. அதை மறந்துடாதீங்க!'
அவர்களுடைய அக்கறையான வார்த்தைகளை அபு ஹாஸன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. `இந்த ஊர்ல எவனும் என்மேல கை வைக்க முடியாது' என்கிற மொட்டை தைரியத்தில் அலட்சியமாக இருந்துவிட்டார்.
அந்தப் பக்கம், இஸ்ரேலின் புதிய பிரதமர் மெனகெம் பெகின் மொஸாட்டைக் கூப்பிட்டார், `அந்த அபுஹாஸன் மேட்டர் என்ன ஆச்சு? அந்தாள் எங்கே இருக்கான்னு தெரியுமா?'
`தெரியும் ஸார்.'
`அப்புறம் ஏன் சும்மா இருக்கீங்க?'
இது போதுமே, அதுவரை காகிதத்தில் கோட்டை கட்டிக்கொண்டிருந்தவர்கள், பெய்ரூட்டுக்கு டிக்கெட் எடுக்கக் கிளம்பினார்கள்.
இந்தமுறை, மொஸாட் வெறும் கத்தி, கபடா, துப்பாக்கியை நம்பவில்லை. அபு ஹாஸனின் பலவீனம் எது என்று தெரிந்து, அதற்காகவே ஒரு ஸ்பெஷல் ஆயுதத்தைக் கொண்டு வந்தார்கள்.
அந்த ஆயுதம், ஒரு பெண் உளவாளி. இந்தத் திட்டத்துக்காக அவருக்குச் சூட்டப்பட்ட கற்பனைப் பெயர், எரிகா சாம்பர்ஸ். இதுவே அவரது உண்மைப் பெயராகவும் இருக்கலாம்!
பிரிட்டனைச் சேர்ந்த எரிகாவுக்கு, சமூகப் பணி(?)களில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, பாலஸ்தீன அகதிகளுக்குச் சேவை செய்வது என்றால் எக்ஸ்ட்ரா பிரியம்.
இதற்காக, 1978-ம் ஆண்டு இறுதியில் அவர் லெபனானுக்கு அழைக்கப்பட்டார். பெய்ரூட் வந்து சேர்ந்து வீடு எடுத்துத் தங்கிக்கொண்டு சேவை செய்ய ஆரம்பித்தார்.
எரிகா சாம்பர்ஸ் ஒரு மொஸாட் உளவாளி என்கிற தகவல் அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் அவருடன் சகஜமாகப் பழகத் தொடங்கினார்கள்.
அதே நேரத்தில், இன்னும் பல மொஸாட் ஏஜெண்டுகள் பெய்ரூட் வந்து சேர்ந்தார்கள், எல்லோருக்கும் வெவ்வேறு (பொய்ப்) பெயர்கள், வெவ்வேறு நாட்டு பாஸ்போர்ட்கள். லில்லிஹாமரில் நிகழ்ந்த தவறை அவர்கள் மறுபடியும் செய்வதாக இல்லை.
பெய்ரூட்டில் எரிகா சாம்பர்ஸ், மற்ற மொஸாட் ஏஜெண்டுகள் திரட்டுகிற தகவல்கள் அனைத்தும், மேலிடத்துக்கு அனுப்பப்பட்டன. இதன் அடிப்படையில் அவர்கள் வெவ்வேறு கொலைத் திட்டங்களைத் தயார் செய்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள், எதுவும் சரிப்படவில்லை.
இதற்கு நடுவே, மொஸாட்டின் ஒரிஜினல் திட்டப்படி எரிகா சாம்பர்ஸ் பாலஸ்தீன விடுதலை இயக்கப் போராளிகள், தலைவர்கள் வட்டாரத்தில் ஊடுருவ ஆரம்பித்திருந்தார். அபுஹாஸனையும் நெருங்கிவிட்டார்.
சாதாரணமாகவே அபுஹாஸன் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். இப்படி ஒரு வெளிநாட்டுப் பெண் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்றதும், அவருக்குச் சுத்தமாகச் சந்தேகமே வரவில்லை.
அபுஹாஸன், எரிகா சாம்பர்ஸ் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, அவருடைய தினசரி நடவடிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் மொஸாட்டுக்குச் சென்று சேர்ந்தது. இதன் அடிப்படையில் புதிய திட்டங்கள் தயார் செய்யப்பட்டன.
1979-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி, அபு ஹாஸன் வழக்கமாகப் பயணம் செய்கிற சாலையில் ஒரு வோல்ஸ்வாகன் கார் வந்து நின்றது. அதில் நூறு கிலோ எடையுள்ள வெடிபொருள்களைப் பதுக்கிவைத்திருந்தது மொஸாட்.
இந்த காரை வெடிக்கச் செய்வதற்கான ரிமோட் கன்ட்ரோல், பக்கத்திலேயே இன்னொரு வீட்டில் இருந்தது. பட்டனில் விரலை வைத்து அழுத்தியபடி அவர்கள் அபு ஹாஸனுக்காகக் காத்திருந்தார்கள்.
அபுஹாஸனுக்குக் கொஞ்சமாவது உயிர் பயம் இருந்திருந்தால், அவர் தினந்தோறும் ஒரே சாலைவழியே பயணம் செய்திருக்கமாட்டார். வேண்டுமென்றே காரை மாற்றி, ரூட்டை மாற்றி, சந்திப்புத் திட்டங்களை மாற்றி ஏதாவது ஒரு வழியில் தன்னுடைய எதிரிகளைக் குழப்பப் பார்த்திருப்பார்.
ஆனால் அவருக்கு அந்தப் பயமோ, பதற்றமோ சுத்தமாக இல்லை. `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரண மில்லை' என்று பாட்டுப் பாடிக்கொண்டு அதே வழியில் வந்து சேர்ந்தார்.
அப்புறம் என்ன? சரியாக அபு ஹாஸனின் கார் அந்த வோல்ஸ்வாகனைக் கடக்கும்போது, ரிமோட்வழியே குண்டு வெடிக்கப்பட்டது. அபு ஹாஸன், அவருடைய பாதுகாவலர்கள், பக்கத்தில் இருந்த அப்பாவிகள் என்று மொத்தம் ஒன்பது பேர் இறந்துபோனார்கள்.
அடுத்த சில மணி நேரங்களுக்குள், எரிகா சாம்பர்ஸ், மற்ற மொஸாட் ஏஜெண்டுகள் சத்தமில்லாமல் பெய்ரூட்டிலிருந்து வெளியேறிவிட்டார்கள். லெபனான் காவல்துறையும் பாலஸ்தீன விடுதலைப் போராளிகளும் விழித்துக்கொண்டு துப்புத்துலக்க ஆரம்பிப்பதற்குள், எல்லாத் தடயங்களும் சுத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன.
ரொம்ப நாளைக்குப் பிறகு, இஸ்ரேல் மொஸாட் வட்டாரங்களில் அன்றைக்குத் திருவிழாக் கோலம். மியூனிக் பழிவாங்கல் லிஸ்டில் கடைசியாக மிச்சமிருந்த அபு ஹாஸனின் பெயருக்கு எதிராக டிக் போட்டுக் கொண்டாடினார்கள்.
மொஸாட்டுக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த இஸ்ரேலின் அரசியல் சரித்திரத்திலும் இது மிக முக்கியமான சம்பவம். இதன்மூலம், `யாராக இருந்தாலும் சரி, எங்கள்மீது கை வைத்தால் தொலைத்துவிடுவோம்' என்கிற செய்தியைச் சொல்லாமல் சொல்லியிருந்தது இஸ்ரேல்.
இதனால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அழிந்துவிடவில்லை. ஆனால் அதேசமயம், இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் யூதர்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்தன. மொஸாட்டுக்கு அதுதானே வேண்டும்?
மியூனிக் படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக, மொஸாட் எத்தனை பேரைக் கொன்றது என்கிற கணக்கு சரியாகத் தெரியவில்லை. சிலர் பத்து என்கிறார்கள், இன்னும் சிலர் பன்னிரண்டு, பதினைந்து, இருபது, முப்பது என்று இஷ்டத்துக்கு அடுக்குகிறார்கள்.
ஆனால் ஒன்று, இப்படிக் கொல்லப்பட்ட எல்லோரும் மியூனிக் படுகொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. `இந்தச் சம்பவத்தை நல்ல சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, இஸ்ரேலுக்கு எதிராக இயங்குகிறவர்களையெல்லாம் மொஸாட் திட்டம் போட்டு அழித்துவிட்டது' என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில், மியூனிக் படுகொலையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள், அதாவது, அங்கே கொலை செய்யப்பட்ட இஸ்ரேல் விளையாட்டு வீரர்களின் குடும்பத்தினருக்கு, இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகளில் சுத்தமாக ஒப்புதல் இல்லை.
`ஒரு கொலைக்குப் பழிவாங்குவதற்காக, இன்னொரு கொலை செய்வது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. இப்படிக் கொல்லப்பட்டவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்.
மனைவி, குழந்தைகள் இருப்பார்கள். இப்படிப் பழிவாங்குகிறேன் பேர்வழி என்று அவர்களுடைய சந்தோஷத்தையெல்லாம் அழித்துவிட்டால் சரியாப்போச்சா? இறந்துபோன எங்களுடைய கணவர்கள், மகன்கள் மறுபடியும் உயிரோடு திரும்பி வந்துவிடுவார்களா?'
அப்படியானால், மொஸாட் வேறு என்ன செய்திருக்க வேண்டும்?
`சில வருஷம் முன்னாடி அடால்ஃப் ஐக்மெனை என்ன செஞ்சீங்க? மறந்துபோச்சா?'
அடால்ஃப் ஹிட்லர் தெரியும். அது யார் அடால்ஃப் ஐக்மென்? அவரை மொஸாட் என்ன செய்தது?