Tuesday, November 24, 2009

10kps 2009-10-08

வள் பெயர் சில்வியா, நல்ல அழகி.

சில்வியாவை ஓர் இளைஞன் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அவன் பெயர் க்ளாஸ்.

அழகான ஒரு பெண்ணைக் காதலிக்கிற பையன் என்ன செய்வான்? தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் விதவிதமாக அவளிடம் அளந்து விடுவான், ‘நாங்க இப்படியாக்கும், அப்படியாக்கும்’ என்று பெருமை அடித்துக்கொண்டு அவளை ஈர்க்க முயற்சி செய்வான்.

க்ளாஸ் இதையெல்லாம் ரொம்பச் சிரத்தையாகச் செய்தான். ‘அந்தக் காலத்தில, ஹிட்லர் படையில எங்க அப்பா பெரிய ஆள், தெரியுமா?’

சில்வியாவுக்கு இதிலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் இல்லை, ‘ஹிட்லரே போயாச்சு, அப்புறம் என்ன?’ என்று அலட்சியமாக இருந்துவிட்டாள்.

ஆனால், சில்வியாவின் தந்தை லோதர் ஹெர்மன் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது, அவருக்கு லேசாகச் சந்தேகம் எழுந்தது, ‘அந்தப் பையனோட முழுப் பெயர் என்ன?’ என்று விசாரித்தார்.

‘க்ளாஸ் ஐக்மென்.’

அந்தப் பெயரைக் கேட்ட லோதருக்கு, ஏதோ லேசாகப் பொறி தட்டியது. ஆனால், அது என்ன என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அப்போதைக்கு அந்த விஷயத்தை மறந்துவிட்டார்.

ஹிட்லரின் சித்திரவதை கேம்ப்களில் சிக்கிச் சிரமப்பட்டவர் லோதர் ஹெர்மன். அங்கே அனுபவித்த கொடுமைகளால், அவருக்குப் பார்வை பறிபோயிருந்தது.

அதனால்தான், க்ளாஸின் தந்தை ஒரு பழைய நாஜி என்பது தெரிந்ததும், லோதர் ஆர்வமாக விசாரித்தார். ஆனால் அப்போதும், ‘ஐக்மென்’ என்கிற பெயரை அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

கொஞ்ச நாள் கழித்து, லோதர் ஹெர்மன் எதேச்சையாக ஒரு பத்திரிகைச் செய்தியைப் படித்தார். அதில் அடால்ஃப் ஐக்மென், அவருடைய ரத்த வெறியாட்டத்தைப்பற்றி விரிவாக எழுதியிருந்தார்கள். கூடவே, ‘இப்போது அடால்ஃப் ஐக்மென் எங்கேயோ மறைந்து வாழ்கிறார்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

சட்டென்று லோதருக்கு ‘க்ளாஸ் ஐக்மென்’ என்கிற பெயர் ஞாபகம் வந்தது, ‘அந்தப் பையனுக்கும் இந்த அடால்ஃப் ஐக்மெனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?’

உடனடியாக, லோதர் தன் மகளை அழைத்தார், ‘க்ளாஸ்ன்னு ஒரு பையன் உன் பின்னாடி சுத்திக்கிட்டிருந்தானே, ஞாபகமிருக்கா?’

‘ஆமா, அவனுக்கு என்ன?’

‘அவனோட அப்பா பேர் என்ன? உனக்குத் தெரியுமா?’

சில்வியா கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னாள், ‘ரிகார்டோ க்ளெமென்ட்.’

லோதர் ஹெர்மன் புன்னகைத்துக்கொண்டார், ‘இது நிச்சயமாகப் பொய்ப் பெயர்தான்!’

பின்னே? இத்தனூண்டு தப்பு செய்த நாஜிக்களையெல்லாம் யூதர்கள் தேடிப் பிடித்துப் பழிவாங்கிக்கொண்டிருக்கும்போது, லட்சக்கணக்கான யூத இனத்தவர்களை மொத்தமாக அழித்த அடால்ஃப் ஐக்மெனை விட்டுவைப்பார்களா? அதனால்தான், இந்தக் கொலைகாரன் பெயரை மாற்றிக்கொண்டு ஒளிந்திருக்கிறான்! உடனடியாக, அடால்ஃப் ஐக்மெனைப்பற்றி இஸ்ரேலுக்குத் தகவல் அனுப்ப முடிவெடுத்தார் லோதர் ஹெர்மன். ஆனால் அதற்கு முன்னால், அந்த ஆள் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

க்ளாஸ் பலமுறை சில்வியா வீட்டுக்கு வந்திருக்கிறான். ஆனால், சில்வியா ஒருமுறைகூட அவன் வீட்டுக்குப் போனதில்லை.

’நீங்க கவலைப்படாதீங்கப்பா, அவனோட அட்ரஸை நான் கண்டுபிடிக்கறேன்’ என்றாள் சில்வியா. சொன்னபடி எப்படியோ கஷ்டப்பட்டு க்ளாஸின் வீட்டைக் கண்டறிந்து கதவைத் தட்டிவிட்டாள்.
சில நிமிடங்கள் கழித்து, கதவு திறக்கப்பட்டது, சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் சில்வியாவைச் சந்தேகமாகப் பார்த்தார், ‘யாரும்மா நீ? உனக்கு என்ன வேணும்?’

‘க்ளாஸ் வீடு இதுதானே?’

‘ஆமா, ஆனா அவன் வெளியே போயிருக்கானே’

‘நீங்க?’

அவர் கொஞ்சம் தயங்கினார். பிறகு, ‘நான் க்ளாஸோட அப்பா’ என்றார்.
அவ்வளவுதான். அந்த நிமிடத்தில் அடால்ஃப் ஐக்மெனின் முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டது. என்னதான் பொய்ப் பெயரில் ஒளிந்து வாழ்ந்தாலும், தன்னுடைய மகனுடைய பெயரில் இருக்கும் ‘ஐக்மென்’ என்கிற ஒற்றை வார்த்தையை மறைக்காத சின்னத் தப்பு, அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டது.

உடனடியாக, இந்தத் தகவல் இஸ்ரேலுக்குப் பறந்தது, ’அடால்ஃப் ஐக்மென் இப்போது அர்ஜென்டினாவின் தலைநகரம் ப்யூனஸ் ஐரிஸில் இருக்கிறார், அவருடைய பொய்ப் பெயர் ரிகார்டோ க்ளெமென்ட், முகவரி...’

அப்புறம் என்ன? நேராக அர்ஜென்டினாவுக்குப் போய் ஐக்மென் சட்டையைப் பிடித்து இழுத்து வரவேண்டியதுதானே? ம்ஹூம், விஷயம் அத்தனை சுலபம் இல்லை, இதில் பல சர்வதேசச் சிக்கல்கள் இருக்கின்றன.

முதலில், இந்த ரிகார்டோ க்ளெமென்ட்தான் ஐக்மென் என்பதற்கு என்ன ஆதாரம்? யாரோ சொல்வதை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது, சாட்சி வேண்டும், அல்லது சம்பந்தப்பட்ட ஆளே தன்னை ஐக்மென் என்று ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்க வேண்டும்.

அப்போதும், அர்ஜென்டினாவில் வாழ்கிற ஒருவரை இஸ்ரேல் போலீஸோ, உளவுத்துறையோ கைது செய்ய முடியாது. அந்த நாட்டு அரசாங்கம் இதற்கு நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

எதற்கு இத்தனை வம்பு? பேசாமல் அந்த ஐக்மெனைச் சுட்டுத் தள்ளிவிட்டால் என்ன?

அடால்ஃப் ஐக்மென் செய்திருப்பது சாதாரணக் குற்றம் இல்லை. அதற்குத் தண்டனையாக அவரை வெறுமனே கொலை செய்தால் போதாது, நீதிமன்றத்தில் நிறுத்திவைத்து, செய்த தப்புகளையெல்லாம் ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும், அப்போதுதான் ஹிட்லர் ஆட்சியின் மிருகத்தனமான நடவடிக்கைகள், யூதர்கள் அனுபவித்த கொடுமைகளெல்லாம் உலகத்திற்குப் புரியும்.

சுருக்கமாகச் சொன்னால், நூலில் விழுந்த சேலையை எடுப்பதுபோல, மிகவும் கவனமாகச் செயல்படவேண்டிய விஷயம் இது. கொஞ்சம் சொதப்பினாலும் மொத்தமும் கிழிந்து நாசமாகிவிடும்.

உடனடியாக, இஸ்ரேல் அரசாங்கம் மொஸாட்டைக் கூப்பிட்டது, விஷயத்தைச் சொல்லி, அடால்ஃப் ஐக்மென் பற்றிய குறிப்புகளை ஒப்படைத்தார்கள்.

அப்போதைய மொஸாட் தலைவர் ஐஸர் ஹரேல். ஒரு மாலை நேரத்தில் ஐக்மென் ஃபைலைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார் அவர்.
அன்று ராத்திரி முழுக்க அவர் தூங்கவில்லை. அடால்ஃப் ஐக்மெனின் திருவிளையாடல்களை ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க, அவருக்கு இந்த வேட்டையின் முக்கியத்துவம் புரிந்தது.

மறுநாள் காலை, இஸ்ரேலின் பிரதமர் டேவிட் பென்குரியனைச் சந்தித்தார் ஐஸர் ஹரேல். இதுவரை கிடைத்திருக்கும் தகவல்கள், தனது திட்டத்தை விளக்கிச் சொன்னார், ‘அர்ஜென்டினாவில் இருக்கிற அடால்ஃப் ஐக்மெனை ரகசியமாக கைது செஞ்சு இஸ்ரேலுக்குக் கொண்டுவரணும், அதுக்கு உங்க அனுமதி வேணும் சார்.’

‘ஓகே’ என்றார் பிரதமர்.


உடனடியாக, ‘ஆபரேஷன் ஐக்மென்’ தொடங்கியது, மொஸாட்டின் மிகச் சிறந்த ஏஜென்ட்கள் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். அவர்கள் வெவ்வேறு பெயர்களில் அர்ஜென்டினாவுக்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விரைவில், மொஸாட் உளவாளிகள் அர்ஜென்டினாவின் தலைநகரமான ப்யூனஸ் ஐரிஸுக்கு வந்து சேர்ந்தார்கள். வெவ்வேறு வீடுகளில் தங்கிக்கொண்டு வேலைகளைத் தொடங்கினார்கள்.

முதலில், அடால்ஃப் ஐக்மெனின் வீடு, அலுவலகம், சுற்றுப்புறம் ஆகியவற்றைக் கண்காணித்துக் குறிப்பு எடுக்க வேண்டும், பிறகு அவர் தினந்தோறும் எத்தனை மணிக்கு ஆபீஸ் போகிறார், எப்படிப் போகிறார், எப்போது திரும்பி வருகிறார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும், மற்ற தினசரி நடவடிக்கைகளையும் இதேபோல் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும், பிறகு இந்தத் தகவல்களின் அடிப்படையில் எங்கே, எப்போது வலை விரித்தால் பட்சி சிக்கும் என்று கணக்குப் போடவேண்டும், இதுதான் ஃபார்முலா.

ஆனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிய மொஸாட் உளவாளிகளுக்கு, ஆரம்பத்திலேயே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களிடம் இருந்த முகவரிக்குச் சென்று பார்த்தால், அங்கே அடால்ஃப் ஐக்மெனையும் காணோம், ரிகார்டோ க்ளெமென்டையும் காணோம்!
என்ன ஆச்சு? மொஸாட் தன்னைத் தேடி வருகிறது என்று தெரிந்து கொண்டு ஐக்மென் உஷாராகிவிட்டாரா? வேறு எங்கேயாவது

தப்பித்துப் போய்விட்டாரா?

மொஸாட் ஏஜென்ட்கள் மெல்ல அக்கம்பக்கத்தில் விசாரித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நூலைப் பிடித்துக்கொண்டு போய் ரிகார்டோ க்ளெமென்டின் புதிய முகவரியைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

அதன்பிறகு, வழக்கமான கண்காணிப்புப் பணிகள் தொடங்கின. ரிகார்டோ க்ளெமென்டின் நிழல்போல ஏஜென்ட்கள் பின்தொடர்ந்து தகவல் திரட்டினார்கள். அவருடைய குத்துமதிப்பான உயரம், எடை, தோற்றம், மற்ற விவரங்களெல்லாம் சேகரிக்கப்பட்டன, நிறைய புகைப்படங்களையும் எடுத்தார்கள்.

இந்த ஏஜென்ட்கள் அனுப்பிவைத்த தகவல்கள் அனைத்தையும், மொஸாட் மேலிடம் அடால்ஃப் ஐக்மெனுடன் ஒப்பிட்டுப்பார்த்தது. இதன் அடிப்படையில் ரிகார்டோ க்ளெமென்ட்தான் அடால்ஃப் ஐக்மென் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

ஆனால், இதை எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது? சரியாகத் தெரியாமல் யாரையோ கைது செய்து இஸ்ரேலுக்குக் கொண்டுசென்றுவிட்டால் மொஸாட்டுக்குப் பெரிய அவமானம் இல்லையா?

1960 மார்ச் 21_ம் தேதி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய ரிகார்டோ க்ளெமென்ட் கையில் ஒரு பூங்கொத்து. அதைத் தன்னுடைய மனைவிக்குக் கொடுத்தார் அவர். வீட்டில் எல்லோர் முகத்திலும் ஏகப்பட்ட சிரிப்பு, சந்தோஷம்.

இதைக் கவனித்த மொஸாட் ஏஜென்ட்கள், சட்டென்று ஐக்மென் ஃபைலைப் பிரித்தார்கள், பரபரப்பாகத் தேடினார்கள்.

மார்ச் 21: அடால்ஃப் ஐக்மென் திருமண நாள்!

இந்த ஆதாரம் போதுமே. ரிகார்டோ க்ளெமென்ட் என்கிற அடால்ஃப் ஐக்மெனைக் கடத்த நாள் குறித்துவிட்டது மொஸாட்.

kps 04.10.09

சென்ற நூற்றாண்டின் மிகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்று, அடால்ஃப் ஹிட்லரின் நாஜிப் படைகள் யூதர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த இனப் படுகொலை.

அப்போது யூதர்களுக்குத் தனி தேசம் எதுவும் இல்லை. உலகம் முழுக்க, குறிப்பாக ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் பரவியிருந்தார்கள்.

ஏனோ, இது ஹிட்லரின் கண்களை உறுத்தியது. யூதர்கள் அழித்து ஒழிக்கப்படவேண்டியவர்கள் என்று முடிவெடுத்துவிட்டார்.

இதனால், ஹிட்லர் ஆட்சியின்கீழ் வந்த ஒவ்வொரு தேசத்திலும் யூதர்கள் வேட்டையாடப்பட்டார்கள், சித்திரவதை கேம்ப்களில் அவர்கள் உடலும் மனமும் நரக அவஸ்தையை அனுபவித்தது. தினமும் இத்தனை ஆயிரம் யூதர்களைக் கொல்ல வேண்டும் என்று கணக்கு வைத்துக்கொண்டு செயல்பட்டது நாஜிப் படை.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் அடால்ஃப் ஹிட்லர்தான் சூத்திரதாரி. ஆனால், அவருக்குக் கீழிருந்த அடுத்த கட்டத் தலைவர்கள், ஜூனியர் அடிப்பொடிகளும்கூட இந்த விஷயத்தில் ஹிட்லருக்கு இணையான கொடூரர்களாக இருந்தார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பு(?) இல்லாமல், ஹிட்லரால் இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் இத்தனை லட்சம் யூதர்களைக் கொன்று தீர்த்திருக்க முடியாது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், அவருடைய சிஷ்யப் பிள்ளைகள்?

சிலர், ஹிட்லரின் வழியைப் பின்பற்றித் துப்பாக்கி அல்லது சயனைட் உதவியுடன் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்னும் சிலர் எதிரிப் படையினரிடம் சிக்கினார்கள். மற்றவர்கள் தப்பித்து ஓடி காணாமல் போனார்கள்.

யுத்தத்துக்குப் பிறகு, ஒட்டுமொத்த உலகமும் அமைதியைத் தேடிக்கொண்டிருந்த நேரம். யூதர்களின் மனம் மட்டும் ஆறவில்லை.

'ஐயா பெரியவர்களே, நீங்களெல்லாம் நிலம் இழந்தீர்கள், அல்லது பணம் இழந்தீர்கள், அல்லது பதவி இழந்தீர்கள். நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிர்க்கதியாக நிற்கிறோம். இந்தக் கொடுமைகளுக்குப் பழிவாங்காமல் விடமாட்டோம்.'

ஆனால், இனிமேல் யாரைப் பழிவாங்க முடியும்? ஹிட்லர்தான் மேலே போய்ச் சேர்ந்துவிட்டாரே!

அதனால் என்ன? ஹிட்லருக்குச் சமமாக, அல்லது அவரைவிட ஒரு படி மேலே போய் யூதர்கள்மேல் இரக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட கொடுமைக்காரர்கள் பலர் இன்னும் உயிரோடுதானே இருக்கிறார்கள்? அவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டனை கொடுப்போம்!

இப்படிச் சொன்ன யூதர்கள், தங்களுக்கு `நாக்மின்' என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள். இதன் அர்த்தம், `பழிவாங்குபவர்கள்!'

நாக்மின் என்பது, யாரும் அதிகாரபூர்வமாக ரிப்பன் வெட்டித் தொடங்கிவைத்த அமைப்பு இல்லை. ஹிட்லர் படைகளின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட யூதர்கள் பலர் தாங்களே ஒருங்கிணைந்து இந்த ரகசிய இயக்கத்தை உருவாக்கினார்கள்.

ஒருவிதத்தில், யூதர்களின் முதல் உளவுத்துறை அதுதான். முன்பு ஹிட்லருக்குக் கீழே பணிபுரிந்த முக்கியப் புள்ளிகளில் யார் யார் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்று முதலில் பட்டியல் போட்டார்கள். அதன்பிறகு, அவர்கள் இப்போது எங்கே, என்ன வேஷத்தில் ஒளிந்திருக்கிறார்கள் என்பதைக் கவனமாகத் துப்புத்துலக்க ஆரம்பித்தார்கள்.

அடுத்தபடியாக, இந்த முன்னாள் நாஜிக்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடங்கின. சிலரைக் காட்டிக்கொடுத்துக் கைது செய்து உள்ளே தள்ளினார்கள். இன்னும் சிலரை நேரடியாகக் கொலை செய்து முடித்துவைத்தார்கள். இதற்கெல்லாம் அவர்கள் யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில்தான், யூதர்களுக்கான தனி நாடு (இஸ்ரேல்) உருவாகியிருந்தது. அவர்களுக்குப் பல அரசியல் பிரச்னைகள், எல்லைக் குளறுபடிகள், மற்ற தலைவலிகள், இதையெல்லாம் ஒருவழியாக ஒழுங்கு செய்வதற்குள் இஸ்ரேல் ஆட்சியாளர்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது.

இப்படி இஸ்ரேல் தனது 'ஸ்டார்ட்டிங் ட்ரபுள்'களைச் சமாளிக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம், `நாக்மின்'களிடமிருந்து தப்பிய முன்னாள் நாஜிப் படையினர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆங்காங்கே செட்டிலாகியிருந்தார்கள். பொய்ப் பெயர்தான், டுபாக்கூர் அடையாளங்கள்தான், ஆனால் யாருடைய தொந்தரவும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை, போதுமே!

1954-ம் வருடம், இஸ்ரேலுக்கு ஒரு தகவல் கிடைத்தது, `அந்த அழுக்குப் பன்றி, இப்போது அர்ஜென்டினாவில் இருக்கிறது.'

இங்கே `அழுக்குப் பன்றி' என்று குறிப்பிடப்படுபவர், ஒரு முன்னாள் நாஜி, அவர் பெயர் அடால்ஃப் ஐக்மென்.

ஜெர்மனியில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஐக்மென், சின்ன வயதிலேயே தாயை இழந்துவிட்டார். அதன்பிறகு, அவரது குடும்பம் ஆஸ்திரியாவுக்குக் குடிபெயர்ந்தது.

ஐக்மெனுக்குப் படிப்பு ஏறவில்லை. பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு வேலைக்குப் போனார், அதுவும் சரிப்படவில்லை.


இதனால், ஐக்மென் தாழ்வு மனப்பான்மையில் மூழ்கினார். எப்படியாவது, ஏதாவது ஒரு விஷயத்தில் தன் திறமையை நிரூபித்துவிடவேண்டும் என்று துடித்தார்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான், ஹிட்லர் ஐரோப்பா முழுக்கப் பிரபலமாக ஆரம்பித்தார். அவர் ஹீரோவா, வில்லனா என்று புரியாமல் குழம்பியது உலகம்.

அடால்ஃப் ஐக்மெனுக்கு ஹிட்லரைப் பிடித்திருந்தது. அவரையே தனது ஆதர்சமாக ஏற்றுக்கொண்டு, நாஜிக் கட்சியில் இணைந்துவிட்டார்.

`கட்சி' என்றால், பொதுக்குழு, செயற்குழு, தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகி ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் கிடையாது. ஹிட்லர் இன்னும் பெரிய திட்டங்கள் வைத்திருந்தார். அவற்றை நிறைவேற்றுவதற் கான ஒரு படையைத் திரட்டிக்கொண்டிருந்தார்.

இந்தப் படையில், அடால்ஃப் ஐக்மெனுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, யூதர்களை வெளியேற்றுவது!

ஏதோ காரணத்தால், தன் ராஜ்ஜியத்தில் யூதர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார் ஹிட்லர். ஜெர்மனியில் மட்டுமில்லை, அவர் எங்கெல்லாம் கால் பதிக்கிறாரோ, அங்கெல்லாம் களை பிடுங்குவதுபோல் யூதர்கள் பிய்த்து எறியப்பட்டார்கள்.

ஆரம்பத்தில், ஹிட்லர் படையினர் கொலை ஆயுதத்தைக் கையில் எடுக்கவில்லை. யூதர்களை ஜஸ்ட் வெளியே துரத்தினார்கள், `எங்கேயாவது போய்விடுங்கள், எப்படியாவது பிழைத்துக் கொள்ளுங்கள், ஹிட்லர் கண்ணில்மட்டும் பட்டுவிடாதீர்கள்.'

அடால்ஃப் ஐக்மென் யோசித்தார், `இப்போது இந்த யூதர்களெல்லாம் எங்கே போவார்கள்? அவர்கள் எங்கே தஞ்சம் புகுந்தாலும், சீக்கிரத்தில் ஹிட்லர் அந்த தேசத்தையும் ஆக்கிரமித்துவிடுவார். அதன்பிறகு மீண்டும் யூதர்களை அங்கிருந்து துரத்தவேண்டும். அநாவசியத் தொல்லை.'

இந்தத் தொந்தரவுக்குப் பதிலாக, யூதர்களை மொத்தமாக அழித்துவிடலாம்' என்றார் ஐக்மென், இந்தத் திட்டத்துக்கு அவர் சூட்டிய பெயர், `கடைசித் தீர்வு.'

ஐக்மெனின் யோசனைக்கு, சீனியர் நாஜிக்களின் அனுமதி உடனடியாகக் கிடைத்துவிட்டது. மளமளவென்று இதனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

அதன்பிறகு நிகழ்ந்ததுதான் உச்சகட்டக் கொடுமை. ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்று வித்தியாசமே பார்க்காமல் யூதர்கள் உடனுக்குடன் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.

யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரு காரணம் போதும், விசாரணை எதுவும் கிடையாது. உடனடித் தண்டனை மட்டுமே.

ஆனால், இப்படி ஸ்லோமோஷனில் ஒவ்வொருவராகச் சுட்டுக்கொண்டிருந்தால், ஒட்டுமொத்த யூதர்களையும் காலி செய்வதற்குப் பல வருஷம் ஆகும். அதுவரை யாரால் காத்திருக்க முடியும்?

அடால்ஃப் ஐக்மெனுக்கு அவசரம். மிக விரைவில் யூதர்களை `முடித்து'விட்டு ஹிட்லர் கையால் மெடல் வாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார்.

இதனால், குறைந்த நேரத்தில் அதிக யூதர்களைக் கொல்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தார் ஐக்மென். அவருடைய குரூர மனத்தில் ஏகப்பட்ட புதிய உத்திகள் தோன்றின.

உடனடியாக, ஹிட்லர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு தேசத்திலும், யூதக் கைதிகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். அவர்களை ரயிலில் மாடுகளை அடைப்பதுபோல் திணித்துவைத்துச் சித்திரவதை கேம்ப்களுக்குக் கொண்டு சென்றார்கள்.

கொடுமையான இந்தப் பயணத்திலேயே பல யூதர்கள் இறந்து போனார்கள். மிச்சமிருந்தவர்களுக்கு வெந்நீர்த் தொட்டிகள், விஷ வாயு அறைகள், நெருப்புக் குளியல் என்று பலவிதமான தண்டனைகள் காத்திருந்தன.

இப்படி அடால்ஃப் ஐக்மெனின் உத்தரவால் உயிர் இழந்த யூதர்களின் எண்ணிக்கை, ஐந்தாயிரம், பத்தாயிரம் இல்லை, அரைக் கோடிக்குமேல்!

`லட்சக்கணக்கில அப்பாவி யூதர்களைக் கொல்றீங்களே, இதுபத்தி உங்களுக்குக் கவலையோ, வருத்தமோ, குற்றவுணர்ச்சியோ இல்லையா?' யாரோ ஐக்மெனிடம் கேட்டார்கள், `நாளைக்கு ஒருவேளை ஹிட்லர் தோத்துப்போயிட்டா, இந்தக் கொலைக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல வேண்டியிருக்குமே?'

அடால்ஃப் ஐக்மென் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், `நூறு பேர் இறந்துபோனா, அது சம்பவம். ஆனா, லட்சம் பேர் இறந்தா, வெறும் புள்ளிவிவரம், அவ்ளோதான்!'

ஹிட்லருக்கு இணையான ரத்த வேட்கை கொண்டவர் ஐக்மென். யூதர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. ஆனாலும் அவரது கண்ணசைவில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.

இதனால், போருக்குப்பிறகு உயிர் தப்பிய நாஜிக்களில் யூதர்களின் நம்பர் ஒன் விரோதி என்றால், அடால்ஃப் ஐக்மென்தான். அவருடைய கொலைவெறியுடன் ஒப்பிடும்போது, மற்ற நாஜிக்களின் குற்றங்களெல்லாம் சாதாரண `பிக்பாக்கெட்' ரகத்தில் அடங்கிவிடும்.

ஆனால், ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு ஐக்மென் எங்கே போனார் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. `நாக்மின்'களின் வேட்டையிலும் அவர் அகப்படவில்லை.

இதனால், அடுத்த பல வருடங்களுக்கு எல்லோரும் ஐக்மெனைப் பற்றி கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார்கள். அந்த நேரத்தில்தான், இந்தக் கடிதத்தின்மூலம் `அழுக்குப் பன்றி' வெளியே வந்தது.

உடனடியாக, இஸ்ரேல் அரசாங்கம், உளவுத்துறை அடால்ஃப் ஐக்மென் ஃபைலைத் தூசு தட்டி எடுத்தது. அவரை என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

kps 01.10.09

லில்லிஹாமர் சொதப்பல்கள் நடந்து முழுசாக ஐந்து வருடமாகிவிட்டது!
இந்த இடைவெளிக்குள், இஸ்ரேலில் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள். இரண்டு பிரதம மந்திரிகள் மாறிவிட்டார்கள். அந்த நாட்டு அரசாங்கத்திலும் சரி, மொஸாட்டிலும் சரி, பழைய `சக்தி'கள் ரிடையராகி, பல புதியவர்கள் தலை தூக்கியிருந்தார்கள்.

ஆனால், இஸ்ரேல் இன்னும் அபுஹாஸனை மறந்திருக்கவில்லை. வெளிப் பார்வைக்கு மொஸாட் நல்ல பிள்ளைபோல் சமர்த்தாக உட்கார்ந்திருந்தாலும், பின்னணியில் தகவல்கள் திரட்டுவது, அலசுவது, திட்டம் தயார் செய்வது, அப்புறம் மொத்தத்தையும் எச்சில் போட்டு அழித்துவிட்டு மறுபடி பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிப்பது என்று தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஐந்து ஆண்டுகளில் அபுஹாஸனும் நிறைய மாறியிருந்தார், ஒரு காலத்தில் ஹை க்ளாஸ் அடியாள்போல் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு திரிந்தவருக்கு, இப்போது அரசியல் வட்டாரங்களில் ஏகப்பட்ட செல்வாக்கு. அவர்தான் யாசிர் அராஃபத்துக்கு அடுத்த வாரிசு என்றெல்லாம் பேச்சு அடிபட்டது.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் மட்டுமில்லை, அதற்கு வெளியிலும் அபுஹாஸனுக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வுக்கும், பாலஸ்தீனத் தலைவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அவர் இயங்கி வருகிறார் என்று வதந்தி.

1978-ம் வருடம், அபுஹாஸன் கல்யாணம் செய்துகொண்டார். அவருடைய புது மனைவி ஜார்ஜினா ரிஜ்க், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ்!

ஜார்ஜினாவுடன் ஹனிமூன் சென்ற அபுஹாஸன், விரைவில் பெய்ரூட் திரும்பிவிட்டார். லெபனான் நாட்டுத் தலைநகரமான இந்த ஊர்தான், இப்போது அவருடைய கோட்டை!

பெய்ரூட்டில் அபுஹாஸனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். அதைவிட அதிக எண்ணிக்கையில் நண்பிகள்!

கல்யாணமான பிறகும், அபுஹாஸன் தன்னுடைய பழைய `ப்ளேபாய்' வாழ்க்கையை மறந்துவிடவில்லை. ஒவ்வொரு நாளையும் ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்கிற கொள்கையுடன் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார்.

இதைக் கவனித்த அபுஹாஸனின் நண்பர்கள், அவரைக் கடுமையாக எச்சரித்தார்கள், `நீங்க உங்க இஷ்டம்போல விளையாடுங்க. வேணாம்ன்னு சொல்லலை. ஆனா, இப்படி அசட்டையா இருக்காதீங்க. அப்பப்போ உங்க பயணத் திட்டத்தை மாத்துங்க. ஒரே இடத்துக்கு டெய்லி போகாதீங்க. முன்பின் தெரியாதவங்ககிட்டே பழகாதீங்க. மொஸாட் இன்னும் உங்களைத் துரத்திக்கிட்டுத்தான் இருக்கு. அதை மறந்துடாதீங்க!'

அவர்களுடைய அக்கறையான வார்த்தைகளை அபு ஹாஸன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. `இந்த ஊர்ல எவனும் என்மேல கை வைக்க முடியாது' என்கிற மொட்டை தைரியத்தில் அலட்சியமாக இருந்துவிட்டார்.

அந்தப் பக்கம், இஸ்ரேலின் புதிய பிரதமர் மெனகெம் பெகின் மொஸாட்டைக் கூப்பிட்டார், `அந்த அபுஹாஸன் மேட்டர் என்ன ஆச்சு? அந்தாள் எங்கே இருக்கான்னு தெரியுமா?'

`தெரியும் ஸார்.'

`அப்புறம் ஏன் சும்மா இருக்கீங்க?'

இது போதுமே, அதுவரை காகிதத்தில் கோட்டை கட்டிக்கொண்டிருந்தவர்கள், பெய்ரூட்டுக்கு டிக்கெட் எடுக்கக் கிளம்பினார்கள்.


இந்தமுறை, மொஸாட் வெறும் கத்தி, கபடா, துப்பாக்கியை நம்பவில்லை. அபு ஹாஸனின் பலவீனம் எது என்று தெரிந்து, அதற்காகவே ஒரு ஸ்பெஷல் ஆயுதத்தைக் கொண்டு வந்தார்கள்.

அந்த ஆயுதம், ஒரு பெண் உளவாளி. இந்தத் திட்டத்துக்காக அவருக்குச் சூட்டப்பட்ட கற்பனைப் பெயர், எரிகா சாம்பர்ஸ். இதுவே அவரது உண்மைப் பெயராகவும் இருக்கலாம்!

பிரிட்டனைச் சேர்ந்த எரிகாவுக்கு, சமூகப் பணி(?)களில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, பாலஸ்தீன அகதிகளுக்குச் சேவை செய்வது என்றால் எக்ஸ்ட்ரா பிரியம்.

இதற்காக, 1978-ம் ஆண்டு இறுதியில் அவர் லெபனானுக்கு அழைக்கப்பட்டார். பெய்ரூட் வந்து சேர்ந்து வீடு எடுத்துத் தங்கிக்கொண்டு சேவை செய்ய ஆரம்பித்தார்.

எரிகா சாம்பர்ஸ் ஒரு மொஸாட் உளவாளி என்கிற தகவல் அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் அவருடன் சகஜமாகப் பழகத் தொடங்கினார்கள்.

அதே நேரத்தில், இன்னும் பல மொஸாட் ஏஜெண்டுகள் பெய்ரூட் வந்து சேர்ந்தார்கள், எல்லோருக்கும் வெவ்வேறு (பொய்ப்) பெயர்கள், வெவ்வேறு நாட்டு பாஸ்போர்ட்கள். லில்லிஹாமரில் நிகழ்ந்த தவறை அவர்கள் மறுபடியும் செய்வதாக இல்லை.

பெய்ரூட்டில் எரிகா சாம்பர்ஸ், மற்ற மொஸாட் ஏஜெண்டுகள் திரட்டுகிற தகவல்கள் அனைத்தும், மேலிடத்துக்கு அனுப்பப்பட்டன. இதன் அடிப்படையில் அவர்கள் வெவ்வேறு கொலைத் திட்டங்களைத் தயார் செய்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள், எதுவும் சரிப்படவில்லை.

இதற்கு நடுவே, மொஸாட்டின் ஒரிஜினல் திட்டப்படி எரிகா சாம்பர்ஸ் பாலஸ்தீன விடுதலை இயக்கப் போராளிகள், தலைவர்கள் வட்டாரத்தில் ஊடுருவ ஆரம்பித்திருந்தார். அபுஹாஸனையும் நெருங்கிவிட்டார்.

சாதாரணமாகவே அபுஹாஸன் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். இப்படி ஒரு வெளிநாட்டுப் பெண் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்றதும், அவருக்குச் சுத்தமாகச் சந்தேகமே வரவில்லை.

அபுஹாஸன், எரிகா சாம்பர்ஸ் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, அவருடைய தினசரி நடவடிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் மொஸாட்டுக்குச் சென்று சேர்ந்தது. இதன் அடிப்படையில் புதிய திட்டங்கள் தயார் செய்யப்பட்டன.

1979-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி, அபு ஹாஸன் வழக்கமாகப் பயணம் செய்கிற சாலையில் ஒரு வோல்ஸ்வாகன் கார் வந்து நின்றது. அதில் நூறு கிலோ எடையுள்ள வெடிபொருள்களைப் பதுக்கிவைத்திருந்தது மொஸாட்.

இந்த காரை வெடிக்கச் செய்வதற்கான ரிமோட் கன்ட்ரோல், பக்கத்திலேயே இன்னொரு வீட்டில் இருந்தது. பட்டனில் விரலை வைத்து அழுத்தியபடி அவர்கள் அபு ஹாஸனுக்காகக் காத்திருந்தார்கள்.

அபுஹாஸனுக்குக் கொஞ்சமாவது உயிர் பயம் இருந்திருந்தால், அவர் தினந்தோறும் ஒரே சாலைவழியே பயணம் செய்திருக்கமாட்டார். வேண்டுமென்றே காரை மாற்றி, ரூட்டை மாற்றி, சந்திப்புத் திட்டங்களை மாற்றி ஏதாவது ஒரு வழியில் தன்னுடைய எதிரிகளைக் குழப்பப் பார்த்திருப்பார்.

ஆனால் அவருக்கு அந்தப் பயமோ, பதற்றமோ சுத்தமாக இல்லை. `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரண மில்லை' என்று பாட்டுப் பாடிக்கொண்டு அதே வழியில் வந்து சேர்ந்தார்.

அப்புறம் என்ன? சரியாக அபு ஹாஸனின் கார் அந்த வோல்ஸ்வாகனைக் கடக்கும்போது, ரிமோட்வழியே குண்டு வெடிக்கப்பட்டது. அபு ஹாஸன், அவருடைய பாதுகாவலர்கள், பக்கத்தில் இருந்த அப்பாவிகள் என்று மொத்தம் ஒன்பது பேர் இறந்துபோனார்கள்.

அடுத்த சில மணி நேரங்களுக்குள், எரிகா சாம்பர்ஸ், மற்ற மொஸாட் ஏஜெண்டுகள் சத்தமில்லாமல் பெய்ரூட்டிலிருந்து வெளியேறிவிட்டார்கள். லெபனான் காவல்துறையும் பாலஸ்தீன விடுதலைப் போராளிகளும் விழித்துக்கொண்டு துப்புத்துலக்க ஆரம்பிப்பதற்குள், எல்லாத் தடயங்களும் சுத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன.

ரொம்ப நாளைக்குப் பிறகு, இஸ்ரேல் மொஸாட் வட்டாரங்களில் அன்றைக்குத் திருவிழாக் கோலம். மியூனிக் பழிவாங்கல் லிஸ்டில் கடைசியாக மிச்சமிருந்த அபு ஹாஸனின் பெயருக்கு எதிராக டிக் போட்டுக் கொண்டாடினார்கள்.

மொஸாட்டுக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த இஸ்ரேலின் அரசியல் சரித்திரத்திலும் இது மிக முக்கியமான சம்பவம். இதன்மூலம், `யாராக இருந்தாலும் சரி, எங்கள்மீது கை வைத்தால் தொலைத்துவிடுவோம்' என்கிற செய்தியைச் சொல்லாமல் சொல்லியிருந்தது இஸ்ரேல்.

இதனால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அழிந்துவிடவில்லை. ஆனால் அதேசமயம், இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் யூதர்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்தன. மொஸாட்டுக்கு அதுதானே வேண்டும்?

மியூனிக் படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக, மொஸாட் எத்தனை பேரைக் கொன்றது என்கிற கணக்கு சரியாகத் தெரியவில்லை. சிலர் பத்து என்கிறார்கள், இன்னும் சிலர் பன்னிரண்டு, பதினைந்து, இருபது, முப்பது என்று இஷ்டத்துக்கு அடுக்குகிறார்கள்.

ஆனால் ஒன்று, இப்படிக் கொல்லப்பட்ட எல்லோரும் மியூனிக் படுகொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. `இந்தச் சம்பவத்தை நல்ல சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, இஸ்ரேலுக்கு எதிராக இயங்குகிறவர்களையெல்லாம் மொஸாட் திட்டம் போட்டு அழித்துவிட்டது' என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

உண்மையில், மியூனிக் படுகொலையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள், அதாவது, அங்கே கொலை செய்யப்பட்ட இஸ்ரேல் விளையாட்டு வீரர்களின் குடும்பத்தினருக்கு, இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகளில் சுத்தமாக ஒப்புதல் இல்லை.

`ஒரு கொலைக்குப் பழிவாங்குவதற்காக, இன்னொரு கொலை செய்வது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. இப்படிக் கொல்லப்பட்டவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்.

மனைவி, குழந்தைகள் இருப்பார்கள். இப்படிப் பழிவாங்குகிறேன் பேர்வழி என்று அவர்களுடைய சந்தோஷத்தையெல்லாம் அழித்துவிட்டால் சரியாப்போச்சா? இறந்துபோன எங்களுடைய கணவர்கள், மகன்கள் மறுபடியும் உயிரோடு திரும்பி வந்துவிடுவார்களா?'

அப்படியானால், மொஸாட் வேறு என்ன செய்திருக்க வேண்டும்?

`சில வருஷம் முன்னாடி அடால்ஃப் ஐக்மெனை என்ன செஞ்சீங்க? மறந்துபோச்சா?'

அடால்ஃப் ஹிட்லர் தெரியும். அது யார் அடால்ஃப் ஐக்மென்? அவரை மொஸாட் என்ன செய்தது?

kps7

ங்க, இன்னிக்கு சினிமாவுக்குப் போலாமா?'

இப்படி ஒரு மனைவி, அதுவும் கர்ப்பமாக இருக்கிற மனைவி கேட்டால் எந்தக் கணவனால் மறுக்க முடியும்? `டபுள் ஓகே' சொல்லிவிட்டார் அஹ்மத் பௌச்சிகி.

அஹ்மத் மொராக்கோவைச் சேர்ந்தவர், இப்போது நார்வே நாட்டின் லில்லிஹாமரில் செட்டிலாகியிருந்தார், அங்கே ஒரு ஹோட்டலில் சர்வர் உத்தியோகம்.

அடிப்படையில், அஹ்மத் ரொம்ப அமைதியான மனிதர். அநாவசியமாக எந்த வம்புதும்புக்கும் போகமாட்டார். தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்றிருக்கிற சமர்த்துப் பேர்வழி.

1973 ஜூலை 21-ம் தேதி, அவர் தன் மனைவியுடன் சினிமாவுக்குப் புறப்பட்டார், படம் முடிந்தபிறகு, இருவரும் கலகலப்பாகப் பேசியபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, திடீரென்று அவர்கள் முன்னால் ஒரு கார் வந்து நின்றது, ஆயுதம் தாங்கிய மொஸாட் ஏஜென்டுகள் அதிலிருந்து இறங்கினார்கள்.

அஹ்மதுக்கு எதுவும் புரியவில்லை, 'என்ன நடக்கிறது? இவர்களெல்லாம் யார்?' என்று அவர் குழம்பிக்கொண்டிருக்கும் போதே, அவர்கள் சுட ஆரம்பித்தார்கள்.

சில விநாடிகள்தான், அவருடைய மனைவியின் கண்முன்னே அஹ்மதின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. அவர் சுருண்டு விழுவதற்குள், வந்தவர்கள் காரில் ஏறித் தப்பித்துவிட்டார்கள்.

மொஸாட்டைப் பொருத்தவரை, அவர்கள் அபுஹாசனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்தார்கள், திமிங்கிலம் பிடிபட்டுவிட்டது, மியூனிக் படுகொலைக்கான பழிவாங்குதல் இத்துடன் முடிந்தது.

ஆனால், அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அஹ்மத் பௌச்சிகிக்கும் அபுஹாசனுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது, பார்ப்பதற்கு இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர.

இந்த விஷயம் வெளியே தெரிந்தபோது, மொஸாட் மேலிடம் வெலவெலத்துப்போனது. ஒரு தீவிரவாதியைக் கொல்வதற்குப் பதிலாக, அப்பாவி பொதுஜனம் ஒருவரைச் சுட்டுத் தள்ளியது மிகப் பெரிய குற்றம்.

சொல்லப்போனால், நிஜமான தீவிரவாதிகளைக்கூடக் கொலை செய்கிற உரிமை மொஸாட்டுக்கு இல்லை. அவர்கள் என்ன தப்புச் செய்திருந்தாலும், நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்தித்தான் தண்டனை கொடுக்க வேண்டும், அதுதான் சட்டம்.

இதற்கு உள்ளூர் உதாரணம் வேண்டுமென்றால், சமீபத்திய மும்பைத் தாக்குதல் சம்பவங்களை எடுத்துக்கொள்ளலாம். அதை யார் செய்தார்கள், எப்படிச் செய்தார்கள் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும், போட்டோ, வீடியோ ஆதாரங்கள்கூட இருக்கின்றன. போதாக்குறைக்கு, அஜ்மல் கசாப் என்று ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிபட்டிருக்கிறான்.

ஆனால், இந்திய அரசாங்கமோ, போலீஸோ, உளவுத்துறையோ அஜ்மலுக்குத் தண்டனை கொடுக்க முடியாது. அவர்மேல் சட்டப்படி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். அதை ஒரு நீதிபதி விசாரித்துத் தண்டனை தருவதுதான் முறை.

மியூனிக் விவகாரத்தில் இதுபோன்ற சட்டதிட்டங்களையெல்லாம் மொஸாட் மதிக்கவில்லை, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், அவ்வளவுதான்!

ஆனால் இப்போது, அபு ஹாசனுக்குப் பதிலாக யாருடைய கண்ணையோ குத்திவிட்டார்கள், மன்னிக்க முடியாத தவறு இது.

இந்த விவகாரத்தில் மொஸாட் செய்த தவறுகள் ஒன்று, இரண்டு இல்லை, ஏழெட்டு வால்யூம்களில் எழுதி நிரப்பும் அளவுக்குப் பிரமாதமாகச் சொதப்பியிருந்தார்கள்.

முதலில், லில்லிஹாமர் மிகச் சிறிய நகரம், அங்கே யாருடைய கண்ணிலும் படாமல் தப்புச் செய்வது சிரமம்.

பெரிய நகரம் என்றால் எந்த மாபாதகமும் செய்துவிட்டுச் சட்டென்று காணாமல் போய்விடலாம், சிறிய ஊர்களில் அது முடியாது. சுற்றி என்ன நடக்கிறது என்று எல்லோரும் எப்போதும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்படி ஒரு சூழ்நிலையில், ஒருவரை நடுத்தெருவில் சுட்டுத் தள்ளுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம், நம் ஊரில் `சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது' என்று சொல்வார்களே, அதுவும் இதுவும் ஒன்றுதான்!

அஹ்மதைக் கொலை செய்த மொஸாட் ஏஜென்டுகள் டான் எர்ட், மரியானெ க்ளாட்னிகாஃப். இவர்கள் துப்பாக்கியோடு காரிலிருந்து இறங்கியது, அஹ்மதைச் சுட்டுக் கொன்றது எல்லாவற்றையும் நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தார்கள்.

அதுகூடப் பரவாயில்லை, மொஸாட் செய்த அடுத்த தவறு, இந்தக் கொலைக்காக காரை வாடகைக்கு எடுக்கும்போது, ஏஜென்டுகள் அவர்களுடைய சொந்தப் பெயரைக் கொடுத்திருந்தார்கள்.

நார்வே போலீஸ் சும்மா இருக்குமா? சுறுசுறுப்பாகத் துப்புத் துலக்கி, ஒரே நாளில் சம்பந்தப்பட்ட மொஸாட் ஏஜென்டுகளை வளைத்துப் பிடித்துவிட்டார்கள்.


கைது செய்யப்பட்ட இந்த மொஸாட் ஏஜென்டுகளாவது, வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். போலீஸ் சித்திரவதைக்குப் பயந்து, இந்தக் கொலையின் நோக்கம் என்ன, திட்டத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் யார், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று எல்லா விவரங்களையும் கொட்டிவிட்டார்கள்.

போதாதா? நேராக கார் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போன நார்வே போலீஸ், அஹ்மத் பௌச்சிகி கொலையுடன் சம்பந்தப்பட்ட கும்பலை அப்படியே அள்ளிப் போட்டு ஜெயிலில் தள்ளிவிட்டார்கள்.

இப்போது, மொஸாட்டுக்கு வேறு வழியே இல்லை. போலீஸிடம் மாட்டியவர்கள் வாயைத் திறக்காமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.

பொதுவாக, மொஸாட் ஏஜென்டுகளுக்குப் பல விஷயங்களில் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது, மாட்டிக்கொண்டால் அடுத்தவர்களைக் காட்டிக் கொடுக்காமல் இருப்பது.

குறிப்பாக, `நான் ஒரு மொஸாட் ஏஜென்ட்' என்று யாரும் எப்போதும் ஒப்புதல் வாக்குமூலம் தரக்கூடாது. அதற்குப் பதிலாக வேறு என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லலாம், மொஸாட் ஒரு விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுமட்டும் யாருக்கும் எப்போதும் தெரிந்துவிடக்கூடாது.

ஆனால், அஹ்மத் பௌச்சிகியைக் கொலை செய்த மொஸாட் ஏஜென்டுகள், இந்த ஒரு பாடத்தைமட்டும் சாய்ஸில் விட்டுவிட்டார்களோ என்னவோ, போலீஸ் லத்தியைத் தூக்கியவுடன் எல்லா விஷயங்களையும் கக்கிவிட்டார்கள். அஹ்மதைக் கொலை செய்தது மொஸாட்தான் என்கிற விவரம் வெளியே வந்துவிட்டது.

உடனடியாக, இந்த விவகாரம் சர்வதேசப் பிரச்னையாக மாறியது. 'நார்வேயில் வாழ்கிற ஒருவரை, அந்த ஊர் மண்ணில் சுட்டுத் தள்ளுவதற்கு மொஸாட்டுக்கு என்ன தைரியம்?!' என்று எல்லோரும் ஹைவால்யூமில் அலற ஆரம்பித்தார்கள்.

அதுமட்டு மில்லை, மியூனிக் படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக மொஸாட் ஒரு ரகசிய வேட்டை நடத்திக்கொண்டிருக்கிற தகவலும் வெளியே கசிந்துவிட்டது. 'இது அராஜகம், மனித உரிமை மீறல்' என்று பத்திரிகைகள், சமூக இயக்கங்கள் கடுமையாகக் கண்டித்தன.

போதாக்குறைக்கு, நார்வே போலீஸிடம் மாட்டிய மொஸாட் ஏஜென்டுகள் தொடர்ந்து 'பேசி'க்கொண்டிருந்தார்கள், உள்ளூரில், அக்கம்பக்கத்து நாடுகளில் எங்கெல்லாம் மொஸாட் உளவாளிகள் இருக்கிறார்கள், அவர்கள் என்னமாதிரியான வேஷங்களில் ஒளிந்து வாழ்கிறார்கள், அங்கே என்னென்ன திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு தகவல் பாக்கியில்லாமல் புட்டுப்புட்டு வைத்துவிட்டார்கள்.

பதறிப்போன மொஸாட், ஐரோப்பாவில் வாழும் தனது ஏஜென்டுகள் பலரை ரகசியமாகத் திரும்ப அழைத்துக்கொண்டது, இன்னும் சிலரை அங்கேயே ஒளிந்து வாழச் சொன்னார்கள்.

ஆனால் இதற்குள், உலக அளவில் மொஸாட்டின் இமேஜ் கெட்டுப்போய்விட்டது. `அது என்ன உளவுத்துறையா? இல்லை, அடியாள் படையா?' என்று ஆளாளுக்குக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எல்லாப் பக்கங்களிலும் டென்ஷன், `ஒழுங்காக மொஸாட்டை அடக்கி வைக்கிறீர்களா? இல்லை, நாங்கள் உங்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்!'

அவர்களுக்குத் தெரியாத விஷயம், இஸ்ரேலின் அரசாங்கத்துக்கு இணையான (அல்லது, அதைவிட ஒரு படி மேலான) சக்தி மொஸாட். யாரும் அவர்களை அடக்கி வைப்பதெல்லாம் சாத்தியமே இல்லை. அவர்களாக வாலைச் சுருட்டிக் கொண்டால்தான் உண்டு!

லில்லிஹாமர் விவகாரத்துக்குப்பிறகு, மொஸாட் கொஞ்சம் அடங்கிப்போக முடிவெடுத்தது, `இப்போது சூழ்நிலை சரியில்லை, பதுங்கிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்!'

உடனடியாக, மியூனிக் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மொஸாட் உளவாளிகள் எல்லோருக்கும் தகவல் பறந்தது. `கைவசம் எந்தத் திட்டம் இருந்தாலும் அதைப் பெட்டியில் போட்டுப் பூட்டிவிடுங்கள், இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம், அமைதியாக வீட்டில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுங்கள்.'

அப்படியானால், அபுஹாசன்? இத்தனை பேரைக் கொன்றுவிட்டுக் கடைசியில் பெரிய திமிங்கிலத்தை நழுவவிடப்போகிறதா மொஸாட்?

ம்ஹூம், சான்ஸே இல்லை, மொஸாட் பதுங்குகிறது என்றாலே, பின்னால் பாயப்போகிறார்கள் என்றுதான் அர்த்தம்!

மொஸாட் மேலிடம் அபுஹாசனை மறந்துவிடவில்லை, அவர் எங்கே இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இந்தமுறை ரொம்ப ரகசியமாக, ரொம்பக் கவனமாக.

அவர்கள் எதிர்பார்த்தபடி, அபுஹாசன் ஒரு தப்புச் செய்தார். 'லில்லிஹாமர் விவகாரத்தில் மொஸாட்டின் மூக்கு உடைந்துவிட்டது. இனிமேல் அவர்களால் வாலாட்ட முடியாது' என்று நினைத்துக்கொண்டு, தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார், பாதுகாப்பு நடவடிக்கைகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, பகிரங்கமாக உலாவ ஆரம்பித்தார்.

இதனால், அதுவரை அபுஹாசனின் இருப்பிடம் தெரியாமல் திணறிக்கொண்டிருந்த மொஸாட்டுக்கு ரொம்ப வசதியாகிவிட்டது. வழக்கம்போல் தன்னுடைய உளவாளிகளை வைத்து அபுஹாசனின் நடவடிக்கைகளை நுணுக்கமாக மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

மொஸாட் புலி, தன்னுடைய அவமானக் காயங்களை நக்கிக்கொண்டது. முன்பைவிட அதிக வெறியுடன் பாயத் தயாரானது!

kps2

துளி வெளிச்சம் இல்லாத இருட்டு ராத்திரி. மொஸாட் ஏஜென்ட்டுகள் கள்ளத்தோணியில் ரகசியமாக வந்து சேர்ந்தார்கள்.
அங்கே ஏற்கெனவே சிலர் காத்திருந்தார்கள், அடையாளச் சங்கேதங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன, `கார் ரெடியா இருக்கு, வாங்க போலாம்.'
ஆளில்லாத சாலைகளில் வண்டி அதிவேகமாக ஓடியது, கடைசியாக ஒரு சிறிய பாதையின் நடுவே போய் நின்றது.

எதிரெதிரே இரண்டு பெரிய கட்டடங்கள், அங்கேதான் மூன்று `ப்ளாக் செப்டம்பர்' புள்ளிகளுக்கு வட்டம் போட்டிருந்தது மொஸாட்.
இந்தத் தாக்குதல் குழுவின் தலைவர் பெயர், எஹுத் பராக். யார் என்ன செய்யவேண்டும், அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதையெல்லாம் விநாடி சுத்தமாகத் திட்டமிட்டு, எல்லோருக்கும் பயிற்சி கொடுத்திருந்தார் அவர்.

ஆனால், இப்போது, எஹுத் பராக் மேக்கப், லிப்ஸ்டிக் சகிதம் ஒரு பெண்ணாக உருமாறியிருந்தார். அவருடைய கண்கள் சுற்றுப்புறத்தைக் கவனமாக நோட்டமிட்டன.

அவரைப்போலவே பெண் வேடம் போட்ட மொஸாட் ஏஜென்ட்டுகள் காரிலிருந்து இறங்கி நின்றுகொண்டார்கள், `யாரும் உள்ளே வராம நாங்க பார்த்துக்கறோம், நீங்க காரியத்தைக் கச்சிதமா முடிச்சுட்டு வாங்க'.
மற்ற மொஸாட் ஏஜென்ட்டுகள் சத்தம் போடாமல் முன்னேறினார்கள். ராத்திரி நேரம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளவாக இல்லை. அது அவர்களுக்கு ரொம்ப வசதியாகிவிட்டது. திட்டப்படி தங்களுடைய முதல் இலக்கை நோக்கி வேகமாக நடந்தார்கள்.

ஆனால், அவர்கள் யோசிக்க மறந்த விஷயம், வெளியே நடு ராத்திரி. இந்த நேரத்தில் ரோட்டில் ஒரு கார் நிற்கிறது. அதில் சில பெண்கள் தனியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், பார்க்கிறவர்களுக்குச் சந்தேகம் வராதா?

சில நிமிடங்கள் கழித்து, ஓர் இளைஞன் அந்தப் பெண்(?)களை நெருங்கினான், `யார் நீங்க?' _ துப்பாக்கியைத் தூக்கினான்.
எஹுத் பராக்கிற்கு யோசிக்க நேரமில்லை, இவனிடம் மாட்டிக்கொண்டால் ஆபத்து. வேறு யாரும் வருவதற்கு முன்னால், இவனைத் தாக்கி வீழ்த்திவிடவேண்டும்!

அடுத்த விநாடி, அந்தப் பெண்களின் கைகளில் துப்பாக்கிகள் முளைத்தன. அந்த இளைஞனை நோக்கிச் சுட ஆரம்பித்தார்கள்.
அவ்வளவுதான், சத்தம் கேட்டுப் பலர் ஓடி வந்தார்கள். என்ன நடக்கிறது என்றே புரியாமல் அவர்கள் விழிக்க, மொஸாட் பெண்கள் தொடர்ந்து சுடவேண்டியிருந்தது.

சில நிமிடங்களில், வந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு திருப்பித் தாக்க ஆரம்பித்தார்கள். அந்த நடு ராத்திரியின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு சண்டை தொடங்கிவிட்டது.

உள்ளே இருந்த மொஸாட் ஏஜென்ட்டுகளுக்குத் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் தெளிவாகக் கேட்டது. ஏதோ பிரச்னை, என்ன செய்யலாம்?
மொஸாட் ஏஜென்ட்டுகளுக்குச் சொல்லித்தரப்படுகிற பாலபாடங்களில் ஒன்று, மற்றவர்களுக்கு எது நடந்தாலும் சரி, நீ உன்னுடைய திட்டத்தைப் பாதியில் கைவிடக்கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் நினைத்ததைச் செய்து முடித்தாக வேண்டும்.

அவர்கள் தொடர்ந்து முன்னேறினார்கள், திட்டமிட்டபடி ஒவ்வொரு வீடாகக் குறி வைத்துத் தாக்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் மூன்று பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதுதவிர, பல உதிரிக் கொலைகளையும் தவிர்க்க முடியவில்லை.

தாக்குதலை வெற்றிகரமாக முடித்த மொஸாட் ஏஜென்ட்டுகள் பரபரப்பாக வெளியேறினார்கள். பாலஸ்தீனத் தலைவர்களின் பாதுகாவலர்கள், உள்ளூர் போலீஸ் எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு அதே காரில் தப்பித்துவிட்டார்கள்.

மீண்டும் கடற்கரை, அவர்களுக்காகக் கள்ளத் தோணிகள் காத்திருந்தன, ஏறிக்கொண்டார்கள். சில நிமிடங்களில் லெபனானுக்கு டாட்டா காண்பித்து மாயமாகிவிட்டார்கள்.

`பொங்கும் இளமை' என்று பெயர் சூட்டப்பட்ட இந்தத் திட்டம், மொஸாட்டுக்கு மிகப் பெரிய வெற்றி. காரணம், இத்தாலி, பிரான்ஸ் மாதிரி பொதுவான நாடுகளில் பாலஸ்தீனத் தலைவர்களை வீழ்த்துவது கஷ்டமே இல்லை, லெபனானில், அவர்களுடைய கோட்டைக்குள் புகுந்து மூன்று பேரை அடித்துவிட்டு வருவது என்றால், நிஜமாகவே சாதனைதான்!
இதனால், `பொங்கும் இளமை'த் திட்டத்திற்குத் தலைமை தாங்கிய எஹுத் பராக், மொஸாட் வட்டாரங்களில் பெரிய 'சூப்பர் ஹீரோ'வாகிவிட்டார். அதன்பிறகு அவர் அரசியலில் இறங்கி இஸ்ரேலின் பிரதம மந்திரியாக வந்தது தனிக்கதை.

ஓர் உளவாளி, பிரதமராக முடியுமா? நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறதா?
அப்படியானால், உங்களுக்கு இஸ்ரேலைப் பற்றித் தெரியாது என்று அர்த்தம். அங்கே உளவுத்துறை என்பது ஒப்புக்குச் சப்பாணி அரசாங்க `டிபார்ட்மென்ட்' அல்ல, ஆட்சிக்கும் அரசாங்கத்துக்கும் அத்தியாவசியத் தேவையான ஒன்று.

இதனால், இஸ்ரேல் பிரதமராக வருகிற எல்லோருமே, மொஸாட் என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டும் மிகக் கவனமாக இருப்பார்கள், தங்களுக்கு நன்கு பரிச்சயமான திறமைசாலி நண்பர்களை மொஸாட் தலைவர்களாக நியமித்துவிடுவார்கள், உளவுத்துறை எப்போதும் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள்.

இப்படிப்பட்ட கலாசார(?)ப் பின்னணி கொண்ட இஸ்ரேலில் ஓர் உளவாளி பிரதமராக வருவது பெரிய விஷயமே இல்லை. சொல்லப்போனால், தங்களுடைய பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகளெல்லாம்கூட முன்னாள் உளவாளிகளாக இருந்தால் நல்லது என்றுதான் இஸ்ரேலில் பலர் விரும்புகிறார்கள், அப்போதுதான் அவர்கள் எதிலும் அசட்டையாக இல்லாமல் கவனமாக ஆட்சி நடத்துவார்களாம்!

மொஸாட் லெபனானில் புகுந்து ரத்த வேட்டை ஆடியிருக்கிறது என்பது தெரிந்தபிறகு, மிச்சமிருக்கும் ப்ளாக் செப்டம்பர் தலைவர்களுக்குப் பீதி பற்றிக்கொண்டது. அடுத்தடுத்து நடந்த கொலைகள் அவர்களுடைய அச்சத்தை இன்னும் அதிகரித்தன.



ஆனால், இத்தனைக்குப் பிறகும், மொஸாட் பெருந்தலைகளுக்கு முழுத் திருப்தி இல்லை, `எல்லாம் ஒழுங்காதான் நடக்குது, ஆனால்...' என்று இழுத்தார்கள்.
காரணம், மியூனிக் படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக அவர்கள் தூண்டில் போட்டுப் பிடித்தது எல்லாமே, சின்னச் சின்ன மீன்கள்தான். இவர்களுக்கெல்லாம் தலைவரான ஒரு பெரிய திமிங்கிலம் இன்னும் வலையில் சிக்கவில்லை, சரியாகச் சொல்வதென்றால், அது எங்கே இருக்கிறது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.


அந்தப் பெரிய `ப்ளாக் செப்டம்பர்' திமிங்கிலம், அபு ஹாசன். முழுப் பெயர், அலி ஹாசன் சாலமெ, செல்லப் பெயர், `ரெட் ப்ரின்ஸ்', அதாவது, சிவப்பு இளவரசன்!

அப்போது அபு ஹாசனுக்கு வயது 33 தான். இதற்குள் இஸ்ரேலியர்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டக்கூடிய கில்லாடியாக உருவெடுத்திருந்தார்.
பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் அபு ஹாசன். பிரமாண்டமான வீடு, கை தட்டினால் ஓடி வருகிற வேலைக்காரர்கள், வகைக்கு ஒன்றாகப் பல கார்கள், மேலே பாய்ந்து மொய்க்கும் பெண்கள், கவலையில்லாமல் உலகத்தைச் சுற்றும் வாழ்க்கை என்று நீங்கள் இதுவரை சினிமாவில் பார்த்த 'பெரிய இடத்துப் பையன்'களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் குழைத்து கற்பனை செய்துகொள்ளுங்கள், அதுதான் அபு ஹாசன்.

சின்ன வயதிலிருந்தே அபு ஹாசனுக்குப் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் அதிகம். அதற்காகப் பல இயக்கங்கள், அமைப்புகளை உருவாக்கி ஏகப்பட்ட தாக்குதல்களைத் திட்டமிட்டு நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.

`ப்ளாக் செப்டம்பரின்' முக்கியப் புள்ளியான அபு ஹாசன்தான் மியூனிக் படுகொலைக்குச் சூத்திரதாரி என்று நம்பியது இஸ்ரேல். அவர் உயிரோடு சுற்றிக்கொண்டிருக்கும்வரை, மொஸாட் மற்றவர்களைப் பழிவாங்கி எந்தப் பிரயோஜனமும் இல்லை.

அபு ஹாசன் விவகாரம் மொஸாட் ஏஜென்ட்டுகளுக்கு ஒரு தனிப்பட்ட அவமானமாகிவிட்டது. அவரை எப்படியாவது வளைத்துப் பிடித்துவிடவேண்டும் என்று அவர்களும் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் அவர் எங்கே இருக்கிறார், என்னவாக இருக்கிறார் என்கிற விவரம்கூடச் சிக்கவில்லை.

1973_ம் ஆண்டு மத்தியில், அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது, `அபு ஹாசன் நார்வே நாட்டில் லில்லிஹாமர் என்ற ஊரில் இருக்கிறார்'.
இந்த விவரத்தை யார் அனுப்பியது, நம்பகமான தகவல்தானா என்பதெல்லாம் மொஸாட்டுக்குத் தெரியவில்லை. ஆனால், அபு ஹாசன் விஷயத்தில் எந்தச் சிறிய வாய்ப்பையும் அவர்கள் தவறவிடமுடியாது.
ஆகவே, அவசரமாக ஒரு மொஸாட் குழு திரட்டப்பட்டது. அவர்கள் கையில் அபு ஹாசனின் புகைப்படத்தைக் கொடுத்து, `இந்த ஆளைத் தேடிப் பிடித்து முடித்துவிடுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்கள்.
அவர்களுடைய அதிர்ஷ்டம், லில்லிஹாமர் அப்படியொன்றும் பெரிய ஊர் இல்லை. அங்கே அபு ஹாசனைத் தேடிக் கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இருக்காது.

மொஸாட் குழு வேலையில் இறங்கியது. அபு ஹாசன் எங்கே இருக்கக்கூடும் என்பதுபற்றித் தகவல் திரட்ட ஆரம்பித்தார்கள், தெருவில் அகப்படுகிற முகங்களை உற்றுப் பார்த்துக் குறிப்பு எடுத்தார்கள்.
ஆனால் உண்மையில், அப்போது அபு ஹாசன் நார்வே நாட்டிலேயே இல்லை. இப்படி ஒரு பொய்யான தகவலைக் கொடுத்து மொஸாட்டை அலைக்கழிக்க வேண்டும் என்று யாரோ திட்டம் போட்டிருக்கிறார்கள்.
இந்த விஷயம் தெரியாமல், மொஸாட் ஏஜென்ட்டுகள் லில்லிஹாமரைச் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அவசரத்துக்கு, ஓர் அப்பாவி மாட்டினான்.

அவர்கள் உடனடியாக மேலிடத்துக்குத் தகவல் அனுப்பினார்கள், `அபு ஹாசனைக் கண்டுபிடிச்சுட்டோம், அடுத்து என்ன செய்யறது?'
'இதென்ன கேள்வி? சுட்டுத் தள்ளுங்க!'

kps1

ஹெலோ, டாக்டர் ஹம்ஷாரி?'

`யெஸ், ஸ்பீக்கிங்'.

`நாங்க இத்தாலியப் பத்திரிகையிலிருந்து கூப்பிடறோம். உங்களை பேட்டி எடுக்கணும்னு விரும்பறோம்.'

உற்சாகமாக நிமிர்ந்து உட்கார்ந்தார் டாக்டர் மஹ்மூத் ஹம்ஷாரி. `ரொம்ப சந்தோஷம். நாம எங்கே, எப்போ சந்திக்கலாம்?'

மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த மொஸாட் ஏஜெண்ட்டுகள் புன்னகையோடு கட்டை விரலை உயர்த்திச் சிரித்துக் கொண்டார்கள். மிகச் சரியாக, ஹம்ஷாரியின் பலவீனத்தைப் பார்த்து அடித்தாகிவிட்டது. இனிமேல் அவரை வீழ்த்துவது அத்தனை சிரமமாக இருக்காது.

பாரிஸில் வாழ்ந்துகொண்டிருந்த டாக்டர் மஹ்மூத் ஹம்ஷாரியின் முக்கியமான வேலை, ஊடகங்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் என்று எதையும் விட்டுவைக்காமல் பரபரப்பு பண்ணிக்கொண்டிருந்தார் அவர்.



அதனால்தான், இத்தாலியப் பத்திரிகையாளர்கள் அழைக்கிறார்கள் என்றவுடன், உடனடியாக பேட்டிக்குத் தயாராகிவிட்டார் ஹம்ஷாரி. மொஸாட் தனது திட்டத்தின் அடுத்தகட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தது.

'ப்ளாக் செப்டம்பர்' இயக்கத்துடன் மஹ்மூத் ஹம்ஷாரிக்குத் தொடர்பு இருக்கிறது என்று தெரிந்தவுடனேயே, மொஸாட் தன்னுடைய பழிவாங்கல் வலைகளைப் பின்னத் தொடங்கிவிட்டது. பல ஏஜெண்ட்டுகள் பாரிஸுக்குக்குடிபெயர்ந்து ஹம்ஷாரியின் தினசரி நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்ய ஆரம்பித்தார்கள்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான், ரோம் நகரத்தில் மொஸாட் ஏஜெண்ட்டுகள் வைல் ஸ்வாட்டரைச் சுட்டுக் கொன்றார்கள். அதேபோல் மஹ்மூத் ஹம்ஷாரி கதையையும் முடித்துவிடலாமா?

ம்ஹூம், சான்ஸே இல்லை!

காரணம், ஹம்ஷாரி வெளிநாட்டுக்காரராக இருந்தாலும், பிரான்ஸ் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க புள்ளியாக உயர்ந்திருந்தார். பாரிஸ் நகரத்தில் பணக்காரர்கள் அதிகம் வாழ்கிற பகுதியாகப் பார்த்துத் தங்கியிருந்தார்.

இதனால், ஹம்ஷாரியை நடுத்தெருவில் சுட்டுத் தள்ளுவது சிரமம். வேறு ஏதாவது வழி யோசிக்க வேண்டும்.

பேசாமல், அவர் வீட்டில் குண்டு வைத்துச் சிதறடித்துவிடலாமா?

செய்யலாம். ஆனால், அதிலும் ஒரு பிரச்னை. ஹம்ஷாரிக்கு ஃப்ரெஞ்சுப் பெண் ஒருவருடன் திருமணமாகியிருந்தது. அமினா என்கிற மகளும் இருந்தாள்.

இதனால், ஹம்ஷாரி வீட்டில் குண்டு வைக்கத் தயங்கியது மொஸாட். ஒருவேளை குண்டு வெடிக்கிற நேரமாகப் பார்த்து ஹம்ஷாரி வேறு எங்காவது போய்விட்டால், அவருடைய அப்பாவி மனைவியும் மகளும் மாட்டிக்கொள்வார்களே!

ஹம்ஷாரி ரகசியமாகக் கொல்லப்பட வேண்டும். அதேசமயம் அவருடைய குடும்பத்தினர் பாதிக்கப்படக்கூடாது, என்ன செய்யலாம்?

மஹ்மூத் ஹம்ஷாரியின் தினசரி நடவடிக்கைகளைத் தீவிரமாக அலசி ஆராயத் தொடங்கியது மொஸாட். கடைசியில் அவர்களுக்கு ஒரு பிரமாதமான யோசனை கிடைத்துவிட்டது.

பத்திரிகையாளர்களிடம் பேசுவது என்றால், ஹம்ஷாரிக்கு ரொம்பப் பிரியம். இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, அவருக்குத் தூண்டில் போட்டதுமொஸாட்.

யாரோ ஒருவர் இத்தாலியப் பத்திரிகையிலிருந்து அழைக்கிறார் என்றதும், ஹம்ஷாரி சந்தேகப்படவில்லை. சட்டென்று அவர்கள் சொன்ன இடத்துக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்.

அதே நேரத்தில், மொஸாட் ஏஜெண்ட்டுகள் ஹம்ஷாரியின் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அங்கே இருக்கும் மேஜை, நாற்காலி, சோஃபா, கட்டில், அடுப்பு, குப்பைத் தொட்டி, எலிப் பொந்தைக்கூட விட்டுவைக்காமல் சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இந்த போட்டோக்கள் அனைத்தும் மொஸாட் மேலிடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அங்கே ஒரு வெடிகுண்டு நிபுணர் படை இந்தப் புகைப்படங்களைப் புரட்டிப்போட்டு அலசியது. கடைசியாக, ஹம்ஷாரியின் டெலிபோன் வைக்கப்பட்டிருந்த சிறிய மேஜைக்கு டிக் போட்டார்கள்.

உடனடியாக, அதேபோல் இன்னொரு மேஜை தயார் செய்யப்பட்டது. போட்டோவில் இருக்கும் மேஜைக்கும் இதற்கும் துளி வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாதபடி கச்சிதமாக வேலை செய்தது மொஸாட்.

இந்தப் புதிய மேஜைக்குள், சக்தி வாய்ந்த டி.என்.டி. வெடிபொருள்கள் ஒளித்துவைக்கப்பட்டன. அதை வெடிக்கச் செய்வதற்கான ரிமோட் கன்ட்ரோலும் தயாரிக்கப்பட்டது.

மறுபடியும், ஹம்ஷாரிக்கு போன் செய்தது மொஸாட். `டாக்டர், உங்களை ஒரு பேட்டி எடுக்கணும். புறப்பட்டு வர்றீங்களா?'

இப்போதும் ஹம்ஷாரிக்குத் துளி சந்தேகம் வரவில்லை. `உடனே வர்றேன்' என்று ஒப்புக்கொண்டார்.

ஹம்ஷாரி இந்தப் பக்கம் கிளம்பிச் செல்ல, அந்தப் பக்கம் மொஸாட் ஏஜெண்ட்டுகள் அவர் வீட்டுக்குள் புகுந்தார்கள். மேஜையை மாற்றிவிட்டார்கள்.

இப்போது, ஹம்ஷாரி வீட்டுக்குள் வெடிகுண்டு வைத்தாகிவிட்டது. அடுத்த வேலை, அவர் மட்டும் தனியாக இருக்கிற நேரமாகப் பார்த்து, அவரை மேஜைக்கு அருகில் வரவழைக்க வேண்டும். அப்புறம் ரிமோட் கன்ட்ரோலில் ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் போதும், விஷயம் முடிந்துவிடும்.

1972 டிசம்பர் 8-ம் தேதி, மஹ்மூத் ஹம்ஷாரியின் மனைவி மேரி க்ளாட் மகளைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றார். சில நிமிடங்கள் கழித்து, மொஸாட் ஏஜெண்ட்டுகள் ஹம்ஷாரிக்கு போன் செய்தார்கள்.

`ஹலோ.'

`நீங்க ஹம்ஷாரிதானே?'

`யெஸ், டாக்டர் மஹ்மூத் ஹம்ஷாரிதான் பேசறேன்.'

பட்டன் அழுத்தப்பட்டது. டெலிபோனுக்குக் கீழே இருந்த குண்டு வெடித்துச் சிதறியது.

அப்போதும், மஹ்மூத் ஹம்ஷாரி சாகவில்லை. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால், அடுத்த பல நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ஹம்ஷாரியைக் காப்பாற்ற முடியவில்லை.

மறுநாள், ம்யூனிக்கில் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் வீடுகளுக்கு இன்னொரு ரகசியத் தொலைபேசி அழைப்பு வந்தது, `இரண்டாவது ஆள் காலி!'

முன்பு வைல் ஸ்வாட்டர் கொல்லப்பட்டபோது, மொஸாட்மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இஸ்ரேல் பாலஸ்தீனச் சண்டையில் இருதரப்பிலும்அவ்வப்போது உயிர் இழப்புகள் நேர்வது வழக்கம்தான் என்பதால், அதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை.

ஆனால், வைல் ஸ்வாட்டர் இறந்து சில நாட்களுக்குள் மஹ்மூத் ஹம்ஷாரியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டதும்தான், அவர்களுக்கு லேசாகச் சந்தேகம் எழுந்தது. இஸ்ரேலியர்கள் ஏதோ திட்டம் போட்டு வேலை செய்கிறார்கள் என்று புரிய ஆரம்பித்தது.

உடனடியாக, பாலஸ்தீன விடுதலைப் போராளிகள், தலைவர்கள் மத்தியில் ஒரு பெரிய அதிர்ச்சி அலை பரவத் தொடங்கியது. அடுத்து இஸ்ரேல் யாருக்குக் குறி வைத்திருக்கிறது என்று தெரியாமல் எல்லோரும் பயப்பட ஆரம்பித்தார்கள்.

அடுத்த சில நாட்களில், அவரைக் கொல்லப்போகிறார்கள், இவரைக் கொன்றுவிட்டார்கள் என்று ஏகப்பட்ட வதந்திகள், யாசர் அராஃபத் தொடங்கி எல்லா பெரிய தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபட்டன, பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்கிற பதற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

மொஸாட்டுக்கு அதுதானே வேண்டும்? பாலஸ்தீனப் போராளிகள் மூச்சு விடக்கூட அவகாசம் தராமல் அடுத்தடுத்த கொலைகளை அரங்கேற்றினார்கள்.

மஹ்மூத் கொலை செய்யப்பட்டு சில வாரங்கள் கழித்து, சைப்ரஸில் ஹூசைன் அல் பஷீர் என்ற பாலஸ்தீன விடுதலைப் போராட்டத் தலைவர் கொல்லப்பட்டார். அவருடைய படுக்கைக்குக் கீழே குண்டு வைத்துச் சிதறடித்திருந்தது மொஸாட்.

அடுத்து, மறுபடியும் பாரிஸ், இந்தமுறை பாசில் அல்குபைஸி என்ற பேராசிரியர் வைல் ஸ்வாட்டரைக் கொன்றதுபோலவே இவரையும் நடுத்தெருவில் சுட்டு வீழ்த்தினார்கள்.

மொஸாட் வரிசையாகக் கொலை செய்வதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இதன்மூலம் இஸ்ரேலின் விரோதிகள் மத்தியில் பயம் பரவுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினார்கள்.

இதனால், மொஸாட் யாருக்கெல்லாம் குறிவைத்திருக்கிறதோ, அவர்களுடைய வீடுகளுக்கு மலர் வளையங்கள் அனுப்பப்பட்டன, `இன்னும் கொஞ்ச நாளில் உங்கள் வீட்டுத் தலைவரைக் கொல்லப்போகிறோம், ஆழ்ந்த அனுதாபங்கள்.'

போதாதா? எப்போது கொல்வார்கள், எப்படிக் கொல்வார்கள் என்று புரியாமல் அந்தத் தலைவர்கள் தவித்துக்கொண்டிருக்கும்போதே, மொஸாட் ஏஜெண்ட்டுகள் கச்சிதமாகக் கதையை முடித்துவிடுவார்கள்.

இந்தக் கொலைச் செய்திகளை, இஸ்ரேல் மூடி மறைக்கவில்லை. `நாங்கள்தான் செய்தோம்' என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும், ஒவ்வொரு கொலையைப்பற்றியும் விரிவான செய்திகள், கட்டுரைகள் லோக்கல் பத்திரிகைகளில், அதுவும் அரபி மொழியில் வெளியாகும்படி பார்த்துக் கொண்டார்கள்.

ஒருகட்டத்தில், ம்யூனிக் படுகொலைக்குத்தான் இஸ்ரேல் பழிவாங்குகிறது என்கிற விவரம் பாலஸ்தீன விடுதலைப் போராளிகளுக்குப் புரிந்துவிட்டது, `இது அநியாயம், நீங்கள் கொலை செய்த நபர்களுக்கும் ம்யூனிக் தாக்குதலுக்கும் துளி சம்பந்தம் கிடையாது' என்று அலற ஆரம்பித்தார்கள்.

மொஸாட் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய அடுத்த பெரிய தாக்குதலைத் திட்டமிட ஆரம்பித்திருந்தார்கள்.

பாசில் அல்குபைஸி கொல்லப்பட்டு, மூன்று நாள் கழித்து, சில மொஸாட் ஏஜெண்ட்டுகள் லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். ஜாலியாக ஊர் சுற்றும் இளைஞர்களைப்போல் வேஷம் போட்டுக்கொண்டார்கள், ஆடைக்குள் துப்பாக்கிகளை மறைத்து வைத்தார்கள்.

லெபனான் தேசத்தில், பாலஸ்தீன விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவு அதிகம். அவர்களுடைய கோட்டையில் புகுந்து மொஸாட் என்ன செய்ய முடியும்?

மொஸாட் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இந்தமுறை அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று தலைகளுக்குக் குறி வைத்திருந்தார்கள், எந்தத் தடைகள் வந்தாலும் சரி, அந்த மூன்று பேரையும் கொல்லாமல் விடமாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

Monday, November 9, 2009

Kanni paar, siri : 20

ராக் விமானி முனிர் ரெட்ஃபா, இஸ்ரேலுக்காக மிக்21ஐக் கடத்தத் திட்டமிட்டிருந்த நேரம். பல மொஸாட் உளவாளிகள், இஸ்ரேல் விமானப்படை  அதிகாரிகள் அவரைச் சந்தித்துப் பேசினார்கள்.

  அவர்கள் பேசப்பேச, முனிருக்கு ஆச்சர்யம், 'எங்களோட ஈராக் ராணுவம், எங்க ஊர் விமான நிலையத்தைப்பத்தியெல்லாம் எங்களைவிட உங்களுக்கு தான் அதிக விவரம் தெரிஞ்சிருக்கு, அது எப்படி?' என்று கேட்டார்.

  மொஸாட் அவருக்குப் பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டார்கள்.

  ஈராக்மட்டுமில்லை, அநேகமாக எல்லா உலக நாடுகளிலும் முக்கியமான இடங்களில் மொஸாட் உளவாளிகள் ஊடுருவியிருந்தார்கள். அவர்களுக்குத்  தெரியாமல் எங்கேயும் எதுவும் நடந்துவிடமுடியாது.

  குறிப்பாக, இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருந்த பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் மத்தியில் பல அரேபியர்களை விலைக்கு வாங்கியிருந்தது  மொஸாட். இவர்கள் அனுப்பி வைக்கிற தகவல்களை வைத்துக்கொண்டு, இஸ்ரேலால் எப்பேர்ப்பட்ட தாக்குதலையும் சுலபமாகச் சமாளித்துவிட முடிந் தது.

  மிய்ர் அமித் காலத்தில் மொஸாடின் உளவு நெட்வொர்க் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தது. ஒருபக்கம் திறமைசாலி ஏஜென்டுகள், இன்னொருபக்கம்  அமெரிக்கா, சி.ஐ.ஏ. புண்ணியத்தில் அதிநவீன சாதனங்கள், மூன்றாவதாக மொஸாட் நிபுணர்கள் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிக்கொண்ட தனித் ' திறமை'கள், தொழில்நுட்ப சாகசங்கள் எல்லாமாகச் சேர்ந்து அவர்களை உலகத் தரத்துக்கு உயர்த்தியிருந்தது.

  மிக்21 கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவத் தலைவர்கள், அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் என எல்லோரும் மொஸாடைத் தனி  மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். எப்பேர்ப்பட்ட விஷயத்தையும் அவர்களிடம் நம்பி ஒப்படைக்கலாம், தலைகீழாக நின்று தண்ணீர் குடித் தாவது வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை பிறந்திருந்தது.

  இதனால், இஸ்ரேலைச் சுற்றிலும் எங்கே எந்தப் பிரச்னை என்றாலும், முதலில் மொஸாடைக் கூப்பிடுவது வழக்கமாகிவிட்டது, 'நாங்கள் இப்படி ஒரு  விஷயம் கேள்விப்பட்டோம், உண்மைதானா? இதுபற்றி உங்களிடம் ஏதாவது கூடுதல் தகவல்கள் இருக்கிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம்  இப்போது என்ன செய்தால் பிரச்னையைச் சமாளிக்கலாம்?'

  இப்படி அவர்கள் கேட்கிற விவரங்கள் எல்லாமே, மொஸாட் ஏஜென்டுகளின் விரல் நுனியில் தயாராக இருந்தன. இஸ்ரேலுக்கு எதிராகச் செயல் படக்கூடிய தலைவர்கள், ஆட்சியாளர்கள், தீவிரவாதிகள், தொழில்முறைக் கொலைகாரர்கள் என எல்லோரைப்பற்றியும் கச்சிதமாக ஃபைல் போட்டு,  ஃபோட்டோ சகிதம் விவரங்களைத் தொகுத்து வைத்திருந்தார்கள்.

  அறுபதுகளின் மத்தியில், இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் நடுவே நிறைய அரசியல் பிரச்னைகள். எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பிரயோஜனம்  இல்லை. அவர்கள் நம்மை அடிப்பதற்குமுன்னால் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது இஸ்ரேல்.

  உடனடியாக, மொஸாடுக்கு அழைப்பு வந்தது, 'நாம எகிப்துமீது படையெடுக்கணும். அதை எப்போ செய்யலாம், எப்படிச் செய்யலாம்னு கொஞ்சம்  கவனிச்சுச் சொல்லுங்க' மிய்ர் அமித் சுறுசுறுப்பானார். எகிப்தில் இருக்கும் மொஸாட் உளவாளிகளைக் கூப்பிட்டுப் பேசினார், அங்கே இன்னும் பல முக்கிய இடங்களில் தன் னுடைய ஆட்களை நுழைப்பதற்குத் திட்டம் தயாரித்தார்.

  அப்போது எகிப்து நாட்டின் மிகப் பெரிய பலம், அவர்களுடைய அதிநவீன விமானப் படை. அதோடு ஒப்பிடும்போது, இஸ்ரேல் சின்னக் கரப்பான்  பூச்சியைப்போல. போர் தொடங்கி, எகிப்து விமானங்கள் இஸ்ரேல்மீது பறந்தால் அவ்வளவுதான், சில மணி நேரங்களுக்குள் மொத்தத் தேசத்தையும்  தரைமட்டமாக்கிவிடுவார்கள்.

  ஆக, இஸ்ரேல் எகிப்தை அடிக்க வேண்டுமென்றால், முதலில் அவர்களுடைய விமானப் படையை முடக்க வேண்டும். அதைப் பார்த்து அவர்கள்  அதிர்ந்து நிற்கும்போது, சண்டையை நமக்குச் சாதகமாகத் திருப்பிவிடலாம்!

  ஆனால், எகிப்து விமானங்கள் மிகப் பிரமாதமான தொழில்நுட்பங்களைக் கொண்டவை. இஸ்ரேல் நாட்டுப் பேப்பர் ராக்கெட்களை வைத்துக்கொண்டு  இவற்றை எப்படி அழிக்க முடியும்?

  இங்கேதான், மொஸாடின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. எகிப்தில் எங்கெல்லாம் போர் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன, இவற்றை  இயக்குகிற விமானிகள் யார், அவர்களுக்குக் கட்டளையிடுகிற அதிகாரிகள் எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள், இந்தப் பார்ட்டிகளுக்கு ஏதாவது பலவீனம்  உண்டா, மது, மாது, இன்னபிற ஐட்டங்களுக்கு மயங்குவார்களா, தினந்தோறும் எத்தனை மணிக்கு இந்த விமானங்கள் தயார் நிலையில் இருக்கும்,  அவற்றுக்கு எரிபொருள் நிரப்புகிற நேரம் என்ன, ஒவ்வொரு விமான நிலையமும் எப்போது மிகப் பரபரப்பாக இருக்கும், எப்போது தூங்கி வழியும் என்ப துபோன்ற விவரங்களைத் திரட்டி இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தார்கள்.

  இஸ்ரேல் ராணுவம் இந்தத் தகவல்களை மேலோட்டமாகப் புரட்டிப்பார்த்தது. அப்படியே ஆடிப்போய்விட்டார்கள், எகிப்து ராணுவத்துக்கேகூட  அவர்களுடைய விமான நிலையங்களைப்பற்றி இத்தனை நுணுக்கமான விவரங்கள் தெரிந்திருக்காது, மொஸாடுக்கு எப்படி இதெல்லாம் தெரியவந்தது?

  'அதெல்லாம் தொழில் ரகசியம்' என்றது மொஸாட், 'இப்போ நீங்க எதுவும் பேசவேண்டாம், ஒழுங்கா நாங்க சொல்றதைமட்டும் கேளுங்க.'
'சரி, சொல்லுங்க, நாங்க என்ன செய்யணும்?'

  'பெரும்பாலான எகிப்து விமான நிலையங்கள், காலை எட்டு மணிக்கு ரொம்பச் சுறுசுறுப்பா இருக்கும். எங்கே பார்த்தாலும் விமானங்கள், அதுக்கு  எரிபொருள் நிரப்பற வண்டிகள், பறக்கறதுக்கு ரெடியாகிட்டிருக்கிற விமானிகள்னு எல்லோரும் அவங்கவங்க வேலையில பிஸியா இருப்பாங்க. அந்த  நேரம் பார்த்து நீங்க அதிரடியாத் தாக்கினா, கொஞ்ச நேரத்துக்குள்ள நிறைய சேதம் உண்டாக்கிடலாம்.'

 'ஒருவேளை, அவங்களும் பதிலுக்குத் தாக்க ஆரம்பிச்சா?'

  'கவலையேபடாதீங்க, அந்த நேரத்தில பெரும்பாலான அதிகாரிங்க ஆஃபீசுக்கே வந்திருக்கமாட்டாங்க. இல்லைன்னா, பக்கத்து கேன்டீன்ல அரட்டை  அடிச்சுக்கிட்டு காப்பி, மசால்வடை சாப்பிட்டு கிட்டிருப்பாங்க. அவங்களுக்கு முழிப்பு வந்து, விமானிங்களுக்குக் கட்டளை போட்டு, நம்மைத் திருப்பித்  தாக்கறதுக்குள்ள, நாம அடிச்சு வெளாசிட்டுத் திரும்பி வந்துடலாம்.'

  முதன்முறையாக, இஸ்ரேல் ராணுவத்தினருக்கு எகிப்தை ஜெயித்துவிட முடியும் என்று நம்பிக்கை வந்தது. ஒரு நல்ல உளவு நெட்வொர்க்கின் பலம்  எப்பேர்ப்பட்டது என்று அனுபவபூர்வமாகப் புரிந்து கொண்டார்கள்.
'சரி, நாங்க கரெக்டா எத்தனை மணிக்குப் புறப்படணும்?'

  'ஏழே முக்கால்' என்று முகூர்த்த நேரம் குறித்துக் கொடுத்தது மொஸாட். 'சரியா எட்டு மணிக்கு அவங்களை அடிக்க ஆரம்பிக்கணும், அவ்ளோதான்.'

  1967-ம் வருடம் ஜூன் 5-ம் தேதி, இஸ்ரேல் பிரதமர் லெவி இஷ்கல் எகிப்தின்மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். சரித்திரத்தில் 'ஆறு நாள் போர்'  (ஷிவீஜ் ஞிணீஹ் கீணீக்ஷீ) என்று வர்ணிக்கப்படும் அதிவேக யுத்தம் தொடங்கியது.

  அன்றைய தினம் எகிப்தை நோக்கி விரைந்த இஸ்ரேல் விமானங்கள், மிகத் துல்லியமாக 8:01க்குத் தாழ்வாகக் கீழே பறந்தன. அடிக்க ஆரம்பித்தார்கள்.

  மொஸாட் சொன்னதுபோலவே, எகிப்து விமானிகள், ராணுவத்தினர் யாரும் இந்தத் திடீர் தாக்குதலைச் சமாளிக்கக்கூடிய நிலைமையில் இல்லை.  அவர்கள் சுதாரித்துக்கொள்வதற்குள், எகிப்து விமானங்கள், எரிபொருள் வண்டிகளை இஸ்ரேல் குண்டுகள் வரிசையாகத் தகர்க்க ஆரம்பித்தன. இவை  ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக வெடித்துச் சிதற, எக்ஸ்ட்ரா லார்ஜ் சேதம்.

  சில நிமிடங்களுக்குள், நூற்றுக்கணக்கான எகிப்து விமானங்கள், வீரர்களை அழித்துவிட்டது இஸ்ரேல். அப்போதே, இந்தப் போரில் யார் ஜெயிக்கப்  போகிறார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது.

   அப்போதைய எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர். இத்தனை பிரமாதமான தனது விமானப் படை இப்படிக் கண் சிமிட்டும் நேரத்துக்குள் உடைத்து  எறியப்பட்டுவிட்டதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

  அவ்வளவு ஏன்? இஸ்ரேலுக்குள்ளேயே, பலரால் இந்த வெற்றியை நம்பமுடியவில்லை. எல்லோரும் மொஸாடின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து  கொண்டிருந்தார்கள்.

  உண்மையில், இது தீர்க்க தரிசனமும் இல்லை, ஒரு புண்ணாக்கும் இல்லை. பல மாதங்கள் பொறுமையாக உட்கார்ந்து தகவல் திரட்டியதன் பலன்,  அந்தத் தகவல்களை ஒழுங்காக அலசி, அதனைச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்தினால் அதன்மூலம் மிகப் பெரிய வெற்றிகளைப்  பெறமுடியும் என்று சாட்சியுடன் நிரூபித்துவிட்டது மொஸாட்.

  ஒருவேளை, அந்த ஜூன் 5-ம் தேதி இஸ்ரேலிய ராணுவம் ஜஸ்ட் கால் மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டிருந்தால்கூட, எகிப்து விமானங்கள் அனை த்தும் தயார் நிலையில் இருந்திருக்கும், அதிகாரிகள் மசால் வடையைத் தின்று ஏப்பம் விட்ட கையோடு இஸ்ரேல் விமானங்களை நடுவானத்தில்  கொளுத்திச் சொக்கப்பனை கொண்டாடியிருப்பார்கள். ஒட்டுமொத்தப் போரும் எகிப்துக்குச் சாதகமாகத் திசை மாறியிருக்கும்!

  ஆறு நாள் போரில் இஸ்ரேல் பெற்ற வெற்றிகளுக்கு, அவர்களுடைய உளவுத்துறை பலம் ஒரு மிக முக்கியமான காரணம். இதன்மூலம், மொஸாட்  நினைத்தால் எங்கேயும் ஊடுருவமுடியும், எப்பேர்ப்பட்ட எதிரியின் பலவீனங்களையும் கண்டுபிடித்துத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள  முடியும் என்பது உறுதியாகிவிட்டது. அதன்பிறகு, பல நாடுகள் தங்கள் மண்ணில் இஸ்ரேலுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கத்  தயங்கினார்கள்.

   இதைப் பார்த்து உற்சாகமான இஸ்ரேல் அரசாங்கம், தங்களுடைய உளவுத்துறைக்கு இன்னும் பல அதிகாரங்கள், முக்கியப் பொறுப்புகளை அள்ளி  வழங்கியது. மொஸாடின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது.